குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பயணத்தால் வலுவடையும் இந்தியாவின் மேற்கு ஆப்பிரிக்கத் தொடர்புகள்.

(ஆப்பிரிக்கா விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் நிவேதிதா ரே அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், பெனின், காம்பியா மற்றும் கினி ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏழுநாள் பயணம் மேற்கொண்டார். இந்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்பதை, குடியரசுத் தலைவர் தமது பயணத்திற்காக தேர்ந்தெடுத்த ஆப்பிரிக்க நாடுகள் பட்டியலிலிருந்து புலனாகிறது.

இந்த மூன்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறை என்பதால் இப்பயணம் சரித்திர முக்கியத்துவம் பெறுகிறது. ஃபிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த மேற்கு ஆப்பரிக்க நாடுகளுடான இந்திய உறவுகள், பிற ஆங்கில ஆதிக்க ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுகளைப் போல் அவ்வளவு வலுவுடன் இருந்ததில்லை. மொழித் தடை, தொடர்பின்மை, தூரம் ஆகியவையே இதற்குக் காரணங்களாகின்றன. இந்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த, கொள்கை அளவிலான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் இந்நாடுகளுடனான உறவுகள், சாத்தியக்கூறுகளைவிடக் குறைந்த அளவில் இருந்துள்ளன. குடியரசுத் தலைவரின் இந்த உயர்மட்டப் பயணம், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளின் ஓர் அங்கமாக விளங்குகிறது. தமது ராஜாங்கத் தடங்களைப் பதிக்கும் முயற்சியாக, ஆப்பிரிக்க நாடுகளில் துவங்குவதாக அறிவிக்கப்பட்ட இந்தியாவின் 18 திட்டங்களில் பெரும்பான்மையானவை ஃபிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மேற்கு ஆப்பிரிக்கத் தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியாக இத்தகைய பயணங்கள் பார்க்கப்பட வேண்டும்.

இப்பயணத்தின்போது, பிரதிநிதிகள் நிலையிலான சந்திப்புக்களை மூன்று நாட்டுத் தலைவர்களுடனும் குடியரசுத் தலைவர் மேற்கொண்டார். பெனின் மற்றும் காம்பியாவின் தேசிய சபைகளில் அவர் உரையாற்றினார். மூன்று நாடுகளிலும் வசிக்கும் இந்திய சமுதாயத்துடன் அளவளாவினார். வர்த்தகம், முதலீடு, சூரியசக்தி, வேளாண்மை, டிஜிட்டல் தொழில்நுட்பம், திறன் வளர்ப்பு, கடல்வழிப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தத் தேவையான வழிமுறைகளை மையப்படுத்தி விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச அளவில் இருதரப்பிற்கும் பொதுவான விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

பெனின் நாட்டுடனான பேச்சுவார்த்தைகளின்போது, ஏற்றுமதி மற்றும் பரஸ்பர முதலீடுகள் ஆகியவற்றை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தியா, ஈ விசா வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்ட ராம்நாத் கோவிந்த் அவர்கள், இது வணிக உறவுகளை மேம்படுத்த உதவும் என்று குறிப்பிட்டார். இந்தியத் தொழில் நிறுவனங்களுக்கும், முதலீடுகளுக்கும் நீடித்த ஆதரவை காம்பியா வழங்கும் என்ற நம்பிக்கையை குடியரசுத் தலைவர் வெளிப்படுத்தினார். கினி நாட்டைப் பொறுத்தவரை, சுரங்கம், உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகிய துறைகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமாய் உள்ளதை குடியரசுத் தலைவர் கோடிட்டுக் காட்டினார்.

இந்த மூன்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுடனான மேம்பாட்டுக் கூட்டாளித்துவத்தை ஊக்குவிக்க, குடியரசுத் தலைவர் பல அறிவிப்புக்களை வெளியிட்டார். பெனின் நாட்டிற்கு, முன்னுரிமைத் திட்டங்களுக்காக 10 கோடி டாலர் கடனுதவியையும், ஆங்கில மொழியில் புலமை பெற உதவும் சிறப்பு ஐடீஇசி படிப்பு மற்றும் வெளியுறவு அதிகாரிகளுக்கான தொழில்முறை படிப்பு ஆகியவற்றுக்கான உதவியையும் குடியரசுத் தலைவர் அறிவித்தார். காம்பியா நாடு கேட்டுக் கொண்டதற்கிணங்க, நீதி, போலீஸ், நிர்வாகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் திறன் வளர்ப்புக்கும், ஊரகத் தொழில் திட்டங்களுக்கும் உதவ, 5 லட்சம் டாலர் நிதியுதவியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் அறிவித்தார். கினி நாட்டில், கொனாக்ரி நீர்வளத் திட்டத்துக்காக, 17 கோடி டாலர் கடனுதவியை குடியரசுத் தலைவர் அறிவித்தார். சர்வதேச சூரியக் கூட்டமைப்பில் இந்தியாவுடன் கைகோத்தமைக்காக, இந்த மூன்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளையும் குடியரசுத் தலைவர் பாராட்டினார்.

பாதுகாப்புத் துறையில் கூட்டுறவை வலுப்படுத்த இந்தியா வலியுறுத்தியது. கினி வளைகுடாவில் அதிகரிக்கும் கடல்கொள்ளையைக் கருத்தில் கொண்டு, அதனை பெனின் நாடு எதிர்கொள்ள, திறன் வளர்ப்புப் பயிற்சித் திட்டங்களுக்கு உதவ, இந்தியா முன்வந்தது. இருதரப்பிலிருந்தும்வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பயங்கரவாதம் குறித்த கவலை எழுப்பப்பட்டதோடு, சர்வதேச பயங்கரவாதம் குறித்த பரந்த மாநாடு விரைவில் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

கூட்டாளித்துவத்தை ஊக்குவிக்க, மூன்று மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுடனும் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. பெனின் நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், கலாச்சாரப் பரிமாற்றம், ஏற்றுமதிக் கடன் மற்றும் முதலீட்டுக் காப்பீடு, ஈ வித்யா பாரதி மற்றும் ஈ ஆரோக்கிய பாரதி வலையத் திட்டங்கள், இந்திய அரசு மற்றும் ராஜாங்க கடவுச் சீட்டுகளுக்குகளுக்கு விசா விதிவிலக்கு ஆகியவை இடம் பெற்றன. காம்பியாவுடனும், கினியுடனும், பாரம்பரிய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருநாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. தவிர, ஈ வித்யா பாரதி மற்றும் ஈ ஆரோக்கிய பாரதி வலையத் திட்டங்கள், புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் ஆகியவற்றிலும் கினி நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மொத்தத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பயணத்தால் இந்தியாவின் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவுகள் மேலும் வலுப்பெற்றன என்றால் அது மிகையல்ல.