ஜம்மு காஷ்மீரில் வரலாற்று சிறப்புமிக்க மாற்றம்.

(சார்க் அமைப்பின் முன்னாள் பொதுச்செயலர் ஷீல்காந்த் ஷர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 370-ஆவது பிரிவை மாற்றுவதற்கான ஜனாதிபதி உத்தரவு இம்மாதம் ஐந்தாம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்தப் பிரிவில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடு இருந்தது. தற்போது, அந்தச் சிறப்பு அந்தஸ்து நிறுத்தப்பட்டு விட்டது. நாட்டின் மற்ற மாநிலங்களுக்கான விதிகள் இனி ஜம்மு காஷ்மீருக்கும் உரித்தாகும். ஜனாதிபதி உத்தரவு, 1954 ஆம் ஆண்டின் அரசியல் ஆணையையும் மாற்றி, அரசியல் சாசன சட்டத்தின் 35 ஏ பிரிவையும் அகற்றியது. இந்தப் பிரிவின் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்து மக்கள் மட்டும்தான் அசையா சொத்துக்களை அம்மாநிலத்தில் வாங்க முடியும் என்ற சட்டம் இருந்தது. ஐந்தாம் தேதியன்றே, இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவை, ஒரு மறுசீரமைப்பு மசோதாவையும் நிறைவேற்றியது. இதன் மூலம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், மாநில சட்டசபை மற்றும் லெப்டினன்ட் கவர்னர் கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக், சட்டசபையற்ற யூனியன் பிரதேசமாகவும் செயல்படும்.

மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், இந்திய நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்படும் அனைத்து சட்டங்களும் இனி ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும் எனக் கூறினார். இதுவரை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்படாமல் இருந்த, கல்விச் சட்டம் மற்றும் பெண்களுக்கான சம உரிமைச் சட்டம் ஆகியவற்றின் பயன்கள், இனி, அவர்களுக்கும் எந்த வித பாகுபாடுமின்றி கிடைக்கும். சொத்து உரிமைகளை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள், மற்ற மாநிலங்களில் இருப்பதைப் போல இம்மாநிலத்திலும் செல்லுபடியாகும்.. ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஆட்சிக்காலம், 6 ஆண்டுகளுக்கு பதில் 5 ஆண்டுகளாக மாறும். இதுவரை இருந்ததைப் போல, அவர்களுக்கென்று தனிக் கொடியோ, அரசியலமைப்போ இருக்காது. இந்தியத் தண்டனை குறியீடான இந்தியன் பீனல் கோட் அங்கும் பொருந்தும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தரக் குடிமக்களாக இல்லாதவர்களும் இனி அங்கு நிரந்தரமாகக் குடியேறலாம்.

இந்த மாற்றங்கள், தினசரி யதார்த்த வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தி, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நலனை விளைவிக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தெரிவித்தார். கடந்த 70 ஆண்டுகளாக இந்த மாநிலத்திற்கு இருந்த சிறப்பு அந்தஸ்த்தின் காரணமாக, சில குறிப்பிட்ட குடும்பங்கள் மட்டுமே அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்களை தங்களுக்கேற்றபடி கையாண்டு நன்மையடைந்தார்கள். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட ஜம்மு காஷ்மீருக்கு நான்கு மடங்கு அதிகத் தொகை அளிக்கப்பட்டு வந்தது எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பரவலான ஊழல் காரணமாக, வளர்ச்சியின் ஆதாயங்கள், மக்களைச் சென்றடையவில்லை. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு சலுகையின் கட்டுப்பாடுகளின் காரணத்தால், அங்கு, ஊழலை கட்டுப்படுத்துவதும் முடியாமல் போனது. இனி, இந்தியாவின் மற்ற பாகங்களில் உள்ளது போல, ஜம்மு காஷ்மீரின் முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது, சுற்றுலாத்துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் முன்னேற்றத்திற்கு உந்துதலாக இருக்கும்.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியாவுடன் இணைய, ஹைதராபாத், மைசூரு மற்றும் ஜுனாகர் போன்ற சுதேச அரசுகள் கடைபிடித்த செயல்முறையைப் பின்பற்றியே,, சுதேச ராஜ்ஜியமான ஜம்மு காஷ்மீரும் இந்தியாவுடன் இணைவதில் கடைப்பிடித்திருக்க வேண்டும் என்பது தெளிவாகும். மற்ற ராஜ்ஜியங்கள் சில நாட்களில் இந்தியாவுடன் முழுமையாக இணைந்தன. ஆனால், 370-சட்டப்பிரிவின் கீழ் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள், ஜம்மு காஷ்மீர் இணைவதற்கு தடைக்கல்லாக இருந்தது. அங்கு இயல்பு நிலையைக் கொண்டு வருவதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிலரின் தன்னல சிந்தனைகளால், கடந்த பல ஆண்டுகளாக, இந்தச் சிறப்பு அந்தஸ்து பாதகமாகக் கையாளப்பட்டு, வேண்டுமென்றே, இங்குள்ள மக்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளிலிருந்து பிரித்து வைக்கப்பட்டார்கள்.

இந்த மாநிலத்தில் வேரூன்றி இருக்கும் தீவிரவாதத்தையும் மறைமுகமாக சுட்டிக்காட்டிய உள்துறை அமைச்சர், தற்போது, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதால், இது, தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட பேருதவியாக இருக்கும் எனக் கூறினார். இந்தியாவின் மற்ற பாகங்களில் உள்ள மக்கள், தங்கள் உரிமையை ஓட்டின் மூலம் நிலைநாட்டுகையில், சிலரது தன்னலமும் தீய எண்ணங்களும், அங்கு தேர்தல்கள் நடப்பதைக் கூட கடினமாக்கின. முகாந்தரமற்ற பல கொலைகளால், தீவிர எண்ணங்கள் சமூகத்தில் நிரப்பப்பட்டு அரசியல் தளமே பாதிக்கப்பட்டது.

தற்போது இந்த மாநிலத்தை, நாட்டின் பிற பகுதிகளுடன் சேர்த்திருப்பது, மக்களுக்கு கண்கூடான பல நன்மைகளுக்கான வழிகளைத் திறக்கும். மேம்படுத்தப்பட்ட நல்ல ஆட்சியின் மூலமும் விரிந்த பரந்த வளர்ச்சிப் பணிகள் மூலமும் இது சாத்தியப்படும். ஜம்மு காஷ்மீரிலுள்ள இளைஞர்களுக்கான வாய்ப்புகளைத் தட்டிப்பறித்துத் தான், அங்கு பயங்கரவாதம் தழைக்கிறது. பயங்கரவாதிகள், உள்மாநில அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைத் தடுக்கும் வல்லமையைப் பெற்றார்கள். தடையற்ற அரசியல் தளத்தில், பயங்கரவாதப் பிரதிநிதிகள் வெளிப்படையாக செயலாற்றினார்கள். தீவிரவாத வன்முறையால் இப்பகுதிகளின் பொருளாதாரத்தை முழுமையாக முடமாக்கிவிட்டார்கள்.

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி உத்தரவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றங்களும், நாடாளுமன்ற சட்டங்களும், பயங்கரவாதத்தை இன்னும் கடுமையான முறையில் எதிர்ப்பதற்கான அதிகாரத்தை ஜம்மு காஷ்மீர் மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசிற்கு அளிக்கும்.

இந்தச் அரசியல் சட்ட மாற்றத்திற்கும் ஜனாதிபதியின் உத்தரவிற்கும், எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் தெரிவித்துள்ளன. இந்த விமர்சனங்களில் நியாயம் இருக்கின்றதா அல்லது இவை மக்களின் அபரிமிதமான ஆதரவைப் பெற்றுள்ள ஆளும் கட்சியின் துணிச்சலான அடிப்படை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான விரோதத்தின் வெளிப்பாடா என்பதை வரும் வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ தெரிந்து கொள்ளலாம்.