நீடித்த கூட்டாளித்துவத்தை நோக்கி இந்திய, ஆசியான் உறவுகள்.

(கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன். )

இந்தியாவின் கிழக்கு நோக்கு கொள்கையையும், இந்தோ பசிபிக் கண்ணோட்டத்தையும் முன்னெடுத்துச் செல்லும் விதமாக, வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் பாங்காக் நகரத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர், ஆசியான் – இந்தியா அமைச்சர்கள் அளவிலான சந்திப்பு, வெளியுறவுத் துறை அமைச்சர்களின் ஒன்பதாவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 26 ஆவது ஆசிய பிராந்திய மன்றம் (ஏஆர்எஃப்), மற்றும் பத்தாவது மேகாங் கங்கா ஒத்துழைப்பு அமைச்சர்கள் சந்திப்பு (எம்ஜிசிஎம்எம்) ஆகியவற்றில் பங்கேற்றார். ஆசியான் இந்தியா அமைச்சர்கள் சந்திப்பின் போது, தடையில்லாத, திறந்த, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் விதிகள் சார்ந்த இந்தோ பசிபிக் பிராந்தியம் என்ற பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் தொலைநோக்குப் பார்வையை வெளியுறவுத் துறை அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். ஆசியான் சமீபத்தில் தெளிவாக விளக்கி எடுத்துரைத்த, இந்தோ பசிபிக் மீதான கண்ணோட்டத்தையும் அவர் வரவேற்றார். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் – இந்தியா செயலுத்திக் கூட்டாளித்துவத்தை மேலெடுத்துச் செல்ல, கடல் வழி ஒத்துழைப்பு, தொடர்புகள் மற்றும் நீடித்த முன்னேற்ற இலக்குகளை எட்டுவது போன்றவற்றின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் சந்திப்பின்போது டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் முன்னிலைப் படுத்தினார். மேலும், இந்தியப் பெருங்கடல் கரையோர மன்றம் (ஐஓஆர்ஏ) மற்றும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு போன்ற பிராந்திய அமைப்புக்களுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஆசியான் அமைப்பைக் கேட்டுக் கொண்டார்.

 இந்திய வெளியுறவு ஜெய்சங்கர் அவர்கள், வியட்நாம் நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஃபாம் பின் அவர்களுடன் இணைந்து, எம்ஜிசிஎம்எம் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில்,  2019-2022 ஆம் வருடத்திற்கான புதிய செயல் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில், சுற்றுலா, கலாச்சாரம், கல்வி ,பொது சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகள், போக்குவரத்து மற்றும் தொடர்பு மற்றும் 3 புதிய துறைகளான நீர் வள மேலாண்மை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, போன்ற துறைகளில் திட்டங்கள் சார்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது.

இந்தப் பிராந்தியத்தில் இந்தியா கொண்டுள்ள  ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக, எம்ஜிசி  விரைவான தாக்கத் திட்டம், கியூஐபி யின் கீழ், கம்போடியா, லாவோ பிடிஆர், மியான்மர்  மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளுக்கு இந்தியா  உதவியளித்துள்ளது. 2014 ஆம் வருடம் முதல் இதுவரை  24 திட்டங்கள் முடிவடைந்துள்ளன. 2019 ஆம் வருடம், கம்போடியா, வியட்நாம் மற்றும் லாவோ பிடிஆர் நாடுகளில் 18 கியூஐபி திட்டங்கள் 9 லட்சம் டாலர் செலவில் செயல்படுத்தப்படவுள்ளன. முன்னேற்றக் கூட்டாளி நாடாக, அயேயார்வாடி –சாவோ ஃப்ராயா -மேகாங் பொருளாதார ஒத்துழைப்பு செயல் உத்தித் திட்டத்தில் இந்தியா இணைந்துள்ளது.

தொடர்பிற்கான ஆசியான் முதன்மைத் திட்டம் 2025 உடன், எம்ஜிசி ஒருங்கிணைக்கப்பட வேண்டியது அவசியம். இந்தியா – மியான்மர் – தாய்லாந்து மோட்டார் வாகன ஒப்பந்தம் திட்டத்தை விரைவில் செயல்படுத்துவதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தியா -மியான்மர் -தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலைத் திட்டத்தை கம்போடியா, லாவோ பிடிஆர் மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு விரிவுபடுத்துவதற்காக வும் கலந்தோசிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் உள்ள நடைமுறைகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆசியான் பிராந்தியத்தில் இணைப்புக்களை மேம்படுத்த, இந்தியா 100 கோடி டாலர் கடனுதவி பெற்றுள்ளது. இதற்கான திட்டங்களை அடையாளம் காணுவதிலும், வழிமுறைகளை  ஆராய்வதிலும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டை முன்னிட்டு, கிழக்கு ஆசிய உச்சிமாநாடு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்றது. பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.  இந்த சந்திப்பின் போது , 2018- 2022 மணிலா செயல் திட்டம் பற்றியும், கிழக்கு ஆசிய உச்சிமாநாடு மேம்பாட்டு முன்னெடுப்பு குறித்த ஃப்னாம் பென் பிரகடனம் குறித்தும்  பேசப்பட்டது. அதைத்தவிர , 26ஆவது ஏஆர்எஃப்  சந்திப்பின்போது, செயலுத்தி ரீதியிலான நம்பகத்தன்மையை உருவாக்குவது மையப்படுத்தப்பட்டது. முன்னதாக, மார்ச் மாதம், லக்னோவில், இந்தியாவும், மியன்மாரும் ராணுவ மருத்துவம் குறித்த பயிற்சியை மேற்கொண்டன.

இந்தியாவின் கிழக்கு நோக்கு கொள்கையில், தென் கிழக்கு ஆசியா முக்கியப் பங்கு வகிப்பதால், இந்தியா தொடர்ந்து ஆசியானில் முதலீடு செய்யும். தென்கிழக்கு ஆசியாவுடன் இந்தியாவின் செயலுத்தி ஈடுபாடுகள், மூன்று சி, அதாவது காமர்ஸ், கனெக்டிவிடி மற்றும் கல்சர் எனப்படும் வணிகம், தொடர்பு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தியா வுக்கும், ஆசியானுக்கும் இடையே, பல தரப்பட்ட முக்கியத் துறைகளில் 30 பேச்சுவார்த்தை வழிமுறைகள் உள்ளன. இந்தியப் பெருங்கடல் பகுதியில், தென்கிழக்கு ஆசியா ஒரு முக்கிய நுழைவாயிலாகவும், சர்வதேசப் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறும் பிராந்தியமாகவும் உள்ளதால், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் மிக முக்கியப் பங்கு வகிக்க, வலுவான, ஒன்றுபட்ட ,மற்றும் செழிப்பான அமைப்பாக ஆசியான் உருவெடுக்க இந்தியா ஆதரவு அளிக்கின்றது.