அதிர்ச்சியில் எதிர்வினையாற்றும் பாகிஸ்தான்.

(பாகிஸ்தான் விவகாரங்கள் ஆய்வாளர் டாக்டர் சைனப் அக்தர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவு ரத்தானது, பாகிஸ்தானை மிகுந்த குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய நடவடிக்கையை இந்தியா எடுக்கும் என்று எதிர்பாராத பாகிஸ்தான், மிதமிஞ்சிய எதிர்வினையாற்ற முனைந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்வதோ, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்குவதோ  இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பது தெள்ளத் தெளிவு. எனினும், பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த நடவடிக்கையால், காஷ்மீரின் ஒட்டுமொத்த இயக்கமுமே மாறுபாடு அடையும் என்பதை பாகிஸ்தான் அறியும். எனவே, பாகிஸ்தான், குழப்பம் கலந்த அதிர்ச்சியில் மிதமிஞ்சி எதிர்வினையாற்ற முற்பட்டுள்ளது.

இந்தியாவுடனான உறவுகளைக் குறைக்க முடிவெடுத்த பாகிஸ்தான், தனது இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரைத் திரும்ப அழைத்துள்ளது. பாகிஸ்தானுக்கான இந்தியாவின் ஹை கமிஷனரையும் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுமாறு பணித்துள்ளது. தவிர, இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தியுள்ளது. ஏற்கனவே பலமுறை முயன்றதுபோல், காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் செல்வதாக மீண்டும் அச்சுறுத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தானின் இத்தகைய முயற்சியை எந்த நாடும் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலில் காஷ்மீர் விவகாரம் முன்னிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. பிரதமர் இம்ரான்கான் அவர்களின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததும் காஷ்மீர் விவகாரத்தை முன்னிலைப்படுத்துவதில் கிடைத்த வெற்றியாக பாகிஸ்தானில் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவை ரத்து செய்ததும், காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்கியதும் பாகிஸ்தானின் அரசியல் சூழலைப் புரட்டிப் போட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரம் குறித்து, பாகிஸ்தான் தேசிய சபையில் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. சிவில் நிர்வாகமும், பாகிஸ்தான் ராணுவமும் இந்தியாவுக்கு எதிராக குரலை உயர்த்தியுள்ளன. எனினும், பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டதன் முக்கிய நோக்கம் குறித்து கேள்வி எழுப்பும் சிலர், காஷ்மீர் விடுதலை முயற்சியை முறியடிக்கவே பிரதமர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டதாக, வெளிப்படையாகக் கூறியுள்ளனர். தங்கள் உறுப்பினர்களில் பாதிக்கு மேல் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும்போது, நாடாளுமன்றக் கூட்டுத்தொடர் கூட்டப்பட்டதில் என்ன பயன் இருக்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என, இம்ரான்கான் எதிர்க் கட்சிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தானிலுள்ள மின்னணு, ஆங்கில, வட்டார மொழி மற்றும் சமூக ஊடகங்கள், காஷ்மீர் மக்கள் தொகைப் பிரிவுகளில் மாற்றம் ஏற்பட்டால், காஷ்மீர் விவகாரம் குறித்த பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு அதிரடியாக நிரந்தரத் தாக்கம் ஏற்படும் என்ற பொதுவான கருத்தை முன்வைத்துள்ளன. இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஜிஹாத் என்ற பெயரிலும், மேற்கத்திய நாடுகளிடமிருந்து பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போரிடத் தேவை என்று கூறியும் பணம் வசூலிக்க, பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தைக் கையிலெடுத்து வந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் மத அமைப்புக்களின் இந்த முயற்சியை முற்றிலும் முறியடிக்கும் விதமாக, காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக்கும் இந்திய அரசின் முடிவு அமைந்துள்ளது.

காஷ்மீரை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இந்தியாவுடன் நிர்வாக அளவில் ஒருங்கிணைத்தால், பாகிஸ்தானில் காஷ்மீர் விவகாரத்திற்கு அரசியல் ரீதியான முகாந்திரம் மறைந்துவிடும் என்று ஒரு பாகிஸ்தான் ஆய்வாளர் கூறியுள்ளார். கடந்த பத்தாண்டுகளில் பாகிஸ்தானில் காஷ்மீர் போராட்டத்துக்கு ஆதரவு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், தொடர்ந்து வந்த அரசுகள், காஷ்மீர் விவகாரத்தை அடிக்கடி சர்வதேச மேடைகளில் எடுத்துச் செல்லவில்லை என்று குற்றம் சாட்டியும் பல பாகிஸ்தான் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இந்த அரசியல் சறுக்கலால், பாகிஸ்தானின் குரல் சர்வதேச சமுதாயத்தில் எடுபடாது. பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பைத் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். துருக்கி மற்றும் மலேசியத் தலைவர்களையும் அவர் தொடர்பு கொண்டுள்ளார்.

காஷ்மீர் நிலையில் அதிரடியான மாற்றத்தைக் கொண்டு வந்ததன் மூலம், இந்தியா, பாகிஸ்தானில் பீதியைக் கிளப்பியுள்ளது. இனிமேல் காஷ்மீர், இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு விவகாரம் என்ற நிலை மாறி, முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. செயலுத்தி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பாகிஸ்தானுக்கு இது பேரிழப்பாகும்.

சட்ட விரோதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியிலும், கில்கிஸ்தான் – பல்டிஸ்தான் பகுதியிலும் பாகிஸ்தான் மிகவும் மோசமாக செயல்பட்டு வந்ததை வரலாறு எடுத்துரைக்கிறது என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும். கில்கிஸ்தான் – பல்டிஸ்தான் பகுதி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து வேண்டுமென்றே பிரிக்கப்பட்டதோடு, இன்றுவரை அங்கு அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது. பாகிஸ்தானின் வடக்குப் பிராந்தியங்களின் வழக்கமான செயல்பாடுகள், இஸ்லாமாபாத்திலிருந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் உரிமைக்காகக் குரலெழுப்பும் பாகிஸ்தான், தனது நாட்டினுள் கவனத்தைத் திருப்பி, கில்கிஸ்தான் – பல்டிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதி மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்குமா என்பது கேளவிக்குறியாக விளங்குகிறது.