ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான வளர்ச்சிப்பாதையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோதி

ஆல் இந்தியா ரேடியோவின் செய்தி ஆய்வாளர் பதம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம். தமிழில் ஸ்ரீபிரியா சம்பத்குமார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் வியாழனன்று நாட்டு மக்களுக்கு அளித்த உரையில், அரசியலமைப்பின் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதற்கான காரணங்களை விவரித்தார். இந்தப் பிரிவின் கீழ், முன்பு ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்தது. இந்த வாரம் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இந்தப் பிரிவை நீக்குவதற்கான மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் விளைவாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு புதிய யூனியன் பிரதேசங்கள் தற்போது உருவாகி உள்ளன.
பல ஆண்டுகளாகத்  தீவிரவாதம், பிரிவினைவாதம், குடும்ப அரசியல் மற்றும் ஊழல் ஆகியவை இந்தப் பகுதிகளில் அமைதியைக் குலைத்து வந்தன.  370 ஆவது பிரிவில் இருந்து விடுபடுவது என்ற கனவு தற்போது நிஜமாகி உள்ளது நமது நாட்டைக் குறிவைத்து உலகின் சொர்க்கமான காஷ்மீரில் பிரச்சனைகளைத் தூண்டிவிட இந்தச்  சட்டப்பிரிவு அந்நிய சக்திகளுக்கு உதவியாக இருந்தது. கடந்த 30 ஆண்டுகளில் 42 ஆயிரத்துக்கும் மேலான இந்தியர்களின் இறப்பிற்கு பாகிஸ்தான் காரணமாக இருந்துள்ளது. 370 ஆவது சட்டப்பிரிவால் நமது நாட்டின் சட்டங்களை ஜம்மு காஷ்மீரில் முழுமையான முறையில் அமல் படுத்த முடியாமல் போனது.  இப்பகுதிகளின் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த நிலையில் இருப்பவர்கள் இந்தப் பிரச்சனைகளால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்களாவர். இந்த மாநிலத்தின் இளைஞர்கள் பல நல்ல வாய்ப்புகளிலிருந்து வஞ்சிக்கப்பட்டு இருந்தார்கள். 370 –ஆவது சட்டப்பிரிவை மற்றியமைத்தன் மூலம், டாக்டர். பீமாராவ் அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல், டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மற்றும் திரு. அடல் பிஹாரி வாஜ்பாயி ஆகியோரது கனவுகள் விரைவிலேயே நிஜமாகப் போகின்றது. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனுபவிக்கும் அனைத்து நன்மைகளும் இனி இந்த இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களுக்கும் கிடைக்கும்.

இந்தப் புதிய இரண்டு யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சிக்கான வழிப்பாதையைப் பிரதமர் விவரித்தார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் வளர்ந்ததற்கு 370-அவது சட்டப்பிரிவுதான் முக்கியக் காரணமாக இருந்தது என மோதி அவர்கள் கூறினார். இந்தச் சட்டப்பிரிவை நீக்கியதன்  மூலம், இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் புதிய விடியல் ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நேர்த்தியான வெளிப்படையான ஆட்சிமுறை, இரண்டு யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்தின் முத்திரையாக இருக்கும் என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக பல புதிய நடவடிக்கைகளை அவர் அறிவித்துள்ளார். இந்த முன்னேற்றத்தின் விளைவுகளை, இப்பகுதியின் 1.5 கோடி மக்கள் கண்கூடாகக் காண்பார்கள். அனைத்துத் தருணங்களிலும் இந்திய அரசாங்கம் மக்களுடன் உறுதுணையாக இருக்கும் எனப் பிரதமர், இந்த இரண்டு யூனியன் பிரதேச மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் உறுதி அளித்தார். ஒரு காலத்தில், காஷ்மீர், படப்பிடிப்பிற்கான இடமாகக் காணப்பட்டது. எனினும், பல ஆண்டுகளாக, இந்திய திரைப்படத் துறை, அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்ட காஷ்மீரில் படப்பிடிப்பு எதுவும் எடுக்கமுடியாத நிலை இருந்தது. இனி, காஷ்மீரின் கண்கவர் அழகை உலகம் முழுதும் உள்ள மக்கள் காண, திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள், காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் என்ற புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க, இளைஞர்களும் பெண்களும் முன்னின்று உழைக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். சட்டசபையின் வரவிருக்கும் தேர்தல்களில் பங்கெடுத்து இந்த முன்னேற்றப் பாதையின் பங்குதாரர்களாகுமாறு பிரதமர் அவர்களைக் கேட்டுக்கொண்டார். ஜம்மு காஷ்மீரில் நிலைமை விரைவில் சீராகும் எனப் பிரதமர் உறுதி அளித்தார்.

வேறுபாடுகள் என்பது ஜனநாயகத்தின் ஒரு பங்கு என்றும் தேசிய நலனை முதன்மையாகக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் புதிய பாதைக்குக் கரங்கள் இணைத்து உழைக்க வேண்டும் என் அவர் கூறினார்.

லடாகிற்கு யூனியன் பிரதேசம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது லடாக் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. லடாக்கில் வளர்ச்சிப் பணிகளை வழி நடத்துவது மத்திய அரசின் பொறுப்பாகும். இரண்டு புதிய யு.டி-க்களிலும், சாலைகள், விமான நிலையத்தின் நவீனமயமாக்கல், ரயில்வே லைன்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்ற உள்கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் ஏற்படும். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் வளர்ச்சியடைந்த யூனியன் பிரதேசங்களாவதற்கான காலம் அதிக தூரம் இல்லை.

38 நிமிடங்கள் அவர் அளித்த நாட்டு மக்களுக்கான உரையில், முன்னேற்றத்தைப் பற்றி பேசிய இந்தியப் பிரதமர் பாகிஸ்தானின் நடவடிக்கைகளைப் பற்றி எதுவும் பேசவில்லை. காஷ்மீர் பிரச்சனையை, பாகிஸ்தான் உலகப் பிரச்சானையாக மாற்ற பல வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், இம்முறை உலக நாடுகள் இஸ்லாமாபாதின் நடிப்பில் ஏமாறுவதாக இல்லை.

இந்தியப் பிரதமரிடமிருந்து வளர்ச்சிப் பாதையில் நாட்டைச் செலுத்தும் பாணியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் பாகிஸ்தான் மக்களுக்கும் நன்மையே விளையும்.