இந்தியப் பாதுகாப்புப்படை நவீனமயமாக்கல்.

(பாதுகாப்பு விவகாரங்கள் ஆய்வாளர் உத்தம் குமார் பிஸ்வாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளாக, அயல்நாட்டு ஆதரவுடன் நடந்தேறும் பயங்கரவாதச் செயல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியப் பாதுகாப்புப்படையின் செயல்திறனை விரிவாக்க வேண்டியது அவசரத் தேவையாகும். நாட்டு மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், இது அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பது கண்கூடு. எனினும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி,  தகுந்த பாதுகாப்புக் கட்டமைப்பின்றி சாத்தியமன்று. இதன் பின்னணியில், 4.31 லட்சம் கோடி ரூபாய் பாதுகாப்புத்துறைக்காக நடப்பாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.04 சதமேயாகும். பாதுகாப்புத் தளவாடங்களின் இறக்குமதிக்கு அடிப்படை சுங்கவரி விலக்கு அளிக்க அரசு எடுத்த முடிவு, இந்தியப் பாதுகாப்புப்படை நவீனமயமாக்கலுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது.

2027 ஆம்  ஆண்டு வரையிலான தொலைநோக்குப் பார்வையுடன், இந்தியப் பாதுகாப்புப் படையின் நவீனமயமாக்கல் குறித்து, தொலைநோக்கு ஒருங்கிணைந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ராணுவத் தளவாடங்களின் உள்நாட்டுத் தயாரிப்புக்களுக்கு இத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இத்துறையில் உள்நாட்டு செயல்திறன் அதிகரிக்கப்படும். அரசின் முன்வினை அணுகுமுறையால், திட்டத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவை எட்டுவது எளிதாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் தனியார்துறை நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. முன்னிலை பெற்ற தனியார் துறையினர், அந்நிய பாதுகாப்புத்துறை நிறுவனங்களுடன் கூட்டு நிறுவனங்களை இந்தியாவில் உருவாக்கி, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், டாங்கிகள் போன்றவற்றை இந்தியாவில் தயாரிக்க ஏதுவாக, செயலுத்திக் கூட்டாளித்துவ முன்மாதிரியை அரசு தயாரித்துள்ளது. களத்தில் போர் புரியும் திறனை பாதுகாப்புப் படையினரிடையே வெகுவாக அதிகரிக்க, அரசு பல முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. துருப்புக்களின் எண்ணிக்கையைக் குறைத்து, செயல்திறனை பன்மடங்கு அதிகரித்து, நவீன தளவாடங்களின் உதவியுடன் சிறப்புறப் பணியாற்ற ஏதுவாக மேற்கொள்ளப்படும் இந்த சீர்திருத்தங்கள், பாதுகாப்புத்துறை இதுவரை கண்டிராத பெருமுயற்சியாகக் கருதப்படுகிறது.

எஃப் –இன்சாஸ் எனப்படும் வருங்கால துருப்பு அமைப்பு, பாதுகாப்புப் படைத் துருப்புக்களுக்கு மிக நவீன ஆயுதங்களையும், போர்க்கவசங்களையும் அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இத்திட்டம் 2020 ஆம் ஆண்டுக்குள் முழுமையடையும். கடந்த ஆண்டில், இந்திய பாதுகாப்புப் படை, எம்777 ஹொவிட்சர் மற்றும் கே-9 வஜ்ரா போன்ற தளவாடங்களைக் கொள்முதல் செய்தது. அண்மையில் ரஷ்யாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, 13,500 கோடி ரூபாய் செலவில், 464 என்ற எண்ணிக்கையில் டி-90 ரக டாங்குகள் கொள்முதல் செய்யப்பட்ட பின்னர், டி-72 மற்றும் டி-55 ரகங்கள் உள்ளிட்ட டாங்குகளின் எண்ணிக்கை 2000 ஐத் தொடும்.

இந்திய விமானப்படைக்கு அளிக்கப்படவுள்ள ரஃபேல் போர் விமானங்கள், இந்திய வானில் எந்த எதிரிப் போர் விமானமும் நுழைய முடியாத அளவுக்குத் திறம்பட செயலாற்ற வல்லவையாகும். வானிலும், தரையிலிருந்தும் தாக்கும் வல்லமை பெற்ற இந்தப் போர் விமானங்கள் அணுசக்தி கொண்டவையாகும். வரும் செப்டம்பர் மாதம், முதலாவது ரஃபேல் போர் விமானம் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது. 36 ரஃபேல் போர் விமானங்களும் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் வழங்கப்பட்டுவிடும். தவிர, சுகோய் எம் 30 மற்றும் தேஜாஸ் ரகப் போர் விமானங்கள் விரைவில் புதுப்பிக்கப்படவுள்ளன. அதேபோல், புதுப்பிக்கப்பட்ட மிக் 21 பைசன் ரகப் போர் விமானங்கள் பழைய மிக்-21 ரகப் போர் விமானங்களைக் காட்டிலும் பலமடங்கு அதிக செயல்திறன் கொண்டவையாக விளங்கும்.

அண்மையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில், பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல்களை வெற்றிகரமாக நிகழ்த்திய இந்திய விமானப்படை, தனது நவீனமயமாக்கப்பட்ட செயல்திறனை வெளிப்படுத்தியது. லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்திய விமானப்படையின் செயல்திறன் வெகுவாக அதிகரித்துள்ளது. கார்கில் போரின்போது, மிராஜ் 2000 ரகப் போர் விமானத்தில் மட்டுமே இருந்த இந்த லேசர் தொழில்நுட்பம், தற்போது, மிக்-27 மற்றும் சுகோய் 30 ரகப் போர் விமானங்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானங்கள், நடுவானில் எரிவாயு நிரப்பும் திறன் கொண்ட விமானங்கள் ஈவாக்ஸ் போன்றவை இந்திய விமானப்படைக்கு மெருகூட்டுகின்றன.

இந்திய கடற்படையின் செயல்திறன் மற்றும் கடல்வழிப் பாதுகாப்பை அதிகரிக்க, உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா உணர்ந்துள்ளது. தற்போது, இந்தியாவின் வர்த்தகம், அளவு ரீதியாக 90 சதமும், மதிப்பு ரீதியாக 77 சதமும் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது. அண்டைநாட்டு எதிரிகள், இந்தியாவை விட துரிதகதியில் தங்கள் கடற்படையை நவீனமயமாக்குவது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்படும் 32 போர்க்கப்பல்களைத் தவிர, கூடுதலாக 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 56 போர்க்கப்பல்களைக் கொள்முதல் செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்பத் திறன் ரீதியாகவும் உலகில் முன்னிலை பெற்றுவரும் இந்தியா, எதிரிகள் விடும் சவாலை முறியடிக்க, தனது பாதுகாப்பு வலிமையை நவீனமயமாக்கல் மூலம் அதிகரிப்பது மிகவும் அவசியமாகிறது.