அமெரிக்க – தாலிபன் பேச்சு வார்த்தை

 

தெற்காசியா குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்ம்ருதி பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி

குறிப்பிட்ட காலத்திற்குள் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெறப்படும் என்ற அமைதி ஒப்பந்தத்துடன் அமெரிக்க- தாலிபான் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை தோஹா நகரில் முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அல் கய்தா, இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுக்கு தாலிபான் அமைப்பினர் ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்றும் ஆப்கானிஸ்தான் அரசுடன் இணைந்து செயல்பட்டு அமைதியான, நிலையான அரசை அமைக்கப் பாடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

2013 ஆம் ஆண்டில் தோஹா நகரில் தாலிபான் அமைப்பினரின் அலுவலகம் துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் நடந்த பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தபோதிலும், 2014 ஆம் ஆண்டிற்குப் பின்னர், நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் சிறிது சிறிதாக முன்னேற்றம்  கண்டது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் 50% நிலப்பரப்பு தாலிபான் அமைப்பினர் வசமே உள்ளதால், தாலிபான் அமைப்பினரையும் இணைத்துச் செயல்பட்டால் மட்டுமே அமைதி திரும்பும் என்று எண்ணிய அமெரிக்க அரசு, ஜல்மே காலில்ஜத்  என்பவரைச் சிறப்புத் தூதுவராக நியமித்து, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வந்தது. அமெரிக்காவும் தாலிபான் அமைப்பினரும் பேசி வரும் அதே வேளையில், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் தாலிபான் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். சீனா – பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் முத்தரப்பு பேச்சு வார்த்தைகளும் அமெரிக்கா – ரஷ்யா – ஆப்கானிஸ்தான் முத்தரப்புப் பேச்சு வார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்றது. ரஷ்யா – சீனா – இந்தியா முத்தரப்பு பேச்சுவார்த்தையும் நடந்ததையொட்டி அமெரிக்கத் துருப்புகள் வெளியேறவும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசில் பங்கெடுக்கவும் இந்தப் பேச்சுவார்த்தைகள் உதவின என்று கூறலாம். ஜெர்மனி, கத்தார் போன்ற நாடுகளும் அமெரிக்கா – தாலிபான் பேச்ச்ருவார்த்தையில் ஈடுபட்டுத் தத்தமது அளவில் முயற்சிகளுக்கு ஊக்கம் காட்டியது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

தாலிபான் அமைப்பின் தலைமைச் செய்தித் தொடர்ப்பாளர் முகமது அப்பாஸ் போர் தொடரும் என்று கூறிய போதிலும் தாலிபான் குழுவினர் தாங்கள் வன்முறையை ஆதரிக்கப்போவதில்லை என்றும் மற்ற தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும் முடிவு செய்துள்ளது உலக நாடுகளுக்குச் சற்றே நிம்மதியைத் தரும் எனக் கூறலாம். ஆப்கானிஸ்தான் நாட்டில் 300 கோடி அமெரிக்க டாலர்கள் அளவில் முதலீடு செய்துள்ள இந்திய அரசு, ஐந்தாவது பெரிய உதவி அளிக்கும் நாடாகும். எனவே, ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டுமென்பது இந்தியாவின் நிலைப்பாடாகும்.

அமெரிக்க தூதர் கலில்ஜத் உதவியுடன் இந்திய அரசு செயல்பட்டு வந்த போதிலும் 1991 ஆம் ஆண்டு ரஷ்யா படைகள் திரும்பிய பின்னர், உள்நாட்டுப் போர் தொடரலாம் என இந்திய அரசு எண்ணுகிறது. எனவே தான், ஆப்கானிஸ்தான் அரசும் தாலிபான் அமைப்பினரும் இணைந்து செயல்படவேண்டும் என இந்திய அரசு கூறுகிறது. ஆப்கானிஸ்தான் குழுக்களிடையே சமரசம் ஏற்பட்டால் மட்டுமே அமெரிக்கப் படைகள் வெளியேறும் என்று தற்போது கூறலாம்.

தாலிபான் குழுவினரும் ஆப்கானிஸ்தான் அரசும் இணைந்து செயல்பட்டு வன்முறையைக் கைவிட்டு, பேச்சு வார்த்தையைத் தொடர்ந்தால் மட்டுமே அமைதி திரும்புவது நிச்சயமாகும் எனலாம். அமைதி ஆப்கானிஸ்தானில் திரும்பினால் மட்டுமே ஆசிய நாடுகளும் அதன் வளர்ச்சியில் பங்கெடுக்க இயலும் என்று கூறினால் அது மிகையாகாது.