உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான்.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்குவதற்கு பாகிஸ்தான் எடுத்த முயற்சிகள் தோல்வியைக் கண்டுள்ளன. இந்தப் பிரச்சனைக் குறித்து, மற்ற நாடுகளின் ஆதரவை சேகரிக்க பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவிற்கு, அதன் மிக நெருங்கிய நட்பு நாடுகளான சீனாவும் சௌதி அரேபியாவும் கூட பெரிய அளவில் உதவவில்லை. இந்த விஷயத்தில், அவ்விரு நாடுகளும் தாங்கள் செய்யக்கூடியது பெரிதாக எதுவும் இல்லை என்று கை விரித்து விட்டன. அமைதியைக் காக்குமாறு அறிவுறுத்தியதோடு, கட்டுப்பாட்டுடன் செயல்படுமாறும் பாகிஸ்தானை இவ்விரு நாடுகளும் கேட்டுக் கொண்டுள்ளன.

இந்தியா, தனது அரசியலமைப்பின் 370-ஆவது சட்டப்பிரிவை நீக்குவதாக அறிவித்தவுடனேயே, பாகிஸ்தானின் சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் துரிதமாக இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கின. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை, இந்தியா தற்போது ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அபரிமிதமான வாக்குகளைப் பெற்று இந்த மசோதா அமலுக்கு வந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் வளர்ச்சியை துரிதப்படுத்துவதே இந்த நடவடிகைக்கான முக்கியக் காரணமாகும். கடந்த முப்பது ஆண்டுகளாக, ஜம்மு காஷ்மீரை நாசமாக்கி வந்த பாகிஸ்தான் ஆதரவு பெற்ற எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சரியான பதிலடி கொடுக்கவும் இந்த நடவடிக்கை உறுதுணையாக இருக்கும். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தின் நேரடி விளைவால், கடந்த முப்பது ஆண்டுகளில், 42,000-க்கும் மேலான அப்பாவி மக்கள் உயிர் இழந்துள்ளனர்.

370-ஆவது சட்டப்பிரிவை நீக்குவது மற்றும் இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களின் உருவாக்கம் ஆகியவை தொடர்பான அறிவிப்புகளால், பாகிஸ்தானிற்கு, ஓடும் சக்கரத்தின் அச்சானியை பிடுங்கிய நிலை உருவாகி விட்டது. இது இந்தியாவின் உள் நாட்டு விவகாரம் என்பதும், இதில் மற்ற நாடுகளின் தலையீட்டிற்கு இடமே இல்லை என்பதும் பாகிஸ்தானுக்கு நன்றாகத் தெரியும். இருப்பினும், அந்நாடு, தான் பாதிக்கப்பட்டதைப் போன்ற ஒரு மாயையை உருவாக்க முயன்று கொண்டிருக்கின்றது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை, இந்தப் பிராந்திய சூழலையும் கூட மாற்றியுள்ளது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கை, பாகிஸ்தான் சற்றும் எதிர்பாராத ஒன்று. காஷ்மீர் பிரச்சனையை அப்படியே தொடர்ந்து தக்க வைத்து, அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பாகிஸ்தான் இருந்தது. இனி, பாகிஸ்தான் தனக்கு சாதகமாக வேறு ஏதாவது ஒரு பிரச்சனையைத் தான் தேட வேண்டும்.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எப்போதுமே வெற்றி கிடைத்ததில்லை என்பது வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும். ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் எப்போதோ முழுதாக இணைக்கப்படு விட்டது என்ற உண்மையைப் பாகிஸ்தான் உணர்ந்ததாகத் தெரியவில்லை. ஜம்மு காஷ்மீர், இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒன்றிணைந்த ஓர் அங்கமாகும். பாகிஸ்தான், இந்தியாவின் ஓர் அங்கமான காஷ்மீரில், 13,000 சதுர கிலோமீட்டர்களை சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான், சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இப்பகுதிகளைக் காலி செய்தால், அது அந்நாட்டிற்கு நன்மையை விளைவிக்கும்.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ரஷ்யா ஆகியவை, 370-ஆவது சட்டப்பிரிவை இந்தியா நீக்கியது தொடர்பான விவகாரத்தில் பாகிஸ்தானிற்கு எந்த ஆதரவையும் அளிக்கவில்லை. இந்தியா எடுத்துள்ள முடிவிற்கு ரஷ்யா ஆதரவளித்துள்ளது. ‘இந்தியக் குடியரசின் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என ரஷ்யா கூறியுள்ளது. 1972 ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 ஆம் ஆண்டின் லாஹூர் பிரகடனம் ஆகியவற்றின் விதிகளின் அடிப்படையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என தான் நம்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

370-ஆவது சட்டப்பிரிவை அகற்றுவது மற்றும் ஜம்மு காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது என்ற இந்தியாவின் முடிவிலிருந்து அமெரிக்கா ஒதுங்கியே நிற்கிறது. ஜம்மு காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு முன், இந்தியா அமெரிக்க நிர்வாகத்திடம் அதைப் பற்றிப் பேசவோ, தெரிவிக்கவோ இல்லை என தெளிவுபடக் கூறியுள்ளது.  370-ஆவது சட்டப்பிரிவை நீக்குவதற்கான முடிவு இந்தியாவின் ‘உள்நாட்டு விஷயம்’ என்று கூறியுள்ள அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம், இந்தப் பிராந்தியங்களில் அமைதியையே அமெரிக்கா விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தலையிடவோ, இந்தியாவிற்கு அழுத்தம் தரவோ ஐ.நா-வும் மறுத்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு விழுந்த மற்றொரு பேரிடியாகும். ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய மறுத்து விட்டார். 1972 ஆம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்தின் விதிகளின் படி, இரு நாடுகளும் தங்கள் வேறுபாடுகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுவாக, ஒரு நாட்டில் ஏதாவது ஒரு தீவிரச் சூழல் எழும்போது, ஐ.நா-வின் பொதுச் செயலாளர் ஐ.நா-வின் பாதுகாப்புச் சபை உறுப்பினர் நாடுகளுக்கு ஒரு சிறிய விளக்க உரை அளிப்பது வழக்கமாக உள்ளது. தற்போது அதற்கான அவசியமும் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாகிஸ்தான், தப்புக் கணக்குப் போட்டு, சர்வதேச அரசியல் சூழலில், தன்னைத்  தொலைத்துக் கொண்டு விட்டதாகவே தோன்றுகிறது. பாதிக்கப்பட்ட நாடாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, சர்வதேச ஆதரவைப் பெற அந்நாடு முயற்சித்து வருகிறது. ஆனால், உலக நாடுகளின் சிந்தனை வேறு விதமாக உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், ராணுவத் தளபதி ஜெனரல் க்வாமர் பாஜ்வாவும், எஃப்.ஏ.டி.எஃப் எனப்படும் நிதி நடவடிக்கைப் பணிக் குழுவின் அடுத்த சந்திப்பிற்கு முன்னர், பாகிஸ்தானின் நிலைமையை சீர் செய்வதற்கான முயற்சிகளை எடுத்தால், அது விவேகமான ஒரு நடவடிக்கையாக இருக்கும். பயங்கரவாதத்திற்கான நிதி வழங்கலில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், எஃப்.ஏ.டி.எஃப், பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்கலாம் என்ற நிலை தற்போது உள்ளது. மொத்தத்தில், பாகிஸ்தான், தனது அண்டை நாடுகளில் நடக்கும் விஷயங்களில் தலையிடுவதை விட்டுவிட்டு, தன் நாட்டுப் பிரச்சனைகள் மற்றும் மக்கள் மீது கவனம் செலுத்தினால், அது, பாகிஸ்தானிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.