இந்திய வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணம்

 (சீன விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர், டாக்டர் ரூபா நாராயண் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள், தமது பதவியேற்புக்குப் பிறகு, முதல் பயணமாக, முக்கியத்துவம் வாய்ந்த சீனப் பயணம் மேற்கொண்டார். கலாச்சாரம் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் குறித்த உயர்மட்ட பரிமாற்ற வழிமுறைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். வூஹானில் நடைபெற்ற முறைசாரா சந்திப்பைப் போன்றதொரு சந்திப்பை, இந்த வருடத்தின் பிற்பகுதியில், சீன அதிபர் ஸீ ஜின்பிங் அவர்கள் பிரதமர் திரு நரேந்திர மோதியுடன் இந்தியாவில் நிகழ்த்தவுள்ளார். அதற்கான முன் ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, வெளியுறவு அமைச்சரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது. இரு நாடுகளும் தங்களது ராஜதந்திர உறவுகளின் எழுபது ஆண்டு நிறைவையும் கொண்டாட உள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்தும் இரு வெளியுறவு அமைச்சர்களிடையே விவாதிக்கப்பட்டது.

சீனாவின் துணை அதிபர் வாங் கிஷான் அவர்களுடனும் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். சர்வதேச நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்கள் பற்றியும், அவற்றின் பிரதிபலிப்பாக, சீனாவும் , இந்தியாவும் பிராந்திய மற்றும் உலக சக்திகளாக உருவெடுத்து வருவது பற்றியும் இருதலைவர்களும் விவாதித்தனர்.

வெளியுறவுத் துறை அமைச்சராக ஜெய்சங்கர் அவர்கள் முதல்முறையாக சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டாலும், அவர் ஏற்கனவே சீனாவிற்கான இந்தியத் தூதராகப் பணியாற்றிய அனுபவமிக்கவர் என்பதால், சீனா அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட நாடாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெய்சங்கர் அவர்கள், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ அவர்களுடன் விரிவான, ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொண்டார். அப்போது, இந்திய நாடாளுமன்றம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது குறித்துத் தமது கருத்துக்களை வாங் யீ அவர்கள் முன்வைத்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்த தற்காலிகப் பிரிவை மாற்றியமைத்த இந்த நடவடிக்கை, இந்தியாவின் உள் விவகாரங்கள் சம்பந்தப்பட்டது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெளிவாக எடுத்துரைத்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சமூக, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சிறந்த அரசாங்கம் ஏற்படுத்துவது போன்றவற்றைக் கருத்தில் கொண்டுதான் இந்தப் புதிய சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதனால் இந்தியாவின் எல்லைகள் அல்லது இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டுக் கோடு ஆகியவற்றில் எந்தவித மாற்றமும் ஏற்படாது என்பதையும் உறுதிபடத் தெரிவித்தார்..

இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் எந்த வித எல்லை உரிமைக் கோரலும் முன்வைக்கப்படவில்லை என்பதும், எனவே, இது குறித்த சீனாவின் கவலை தேவையற்றது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது. இந்தியா – சீனா எல்லை சம்பந்தமான பிரச்சனையைப் பொருத்தவரை, 2005 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியல் அளவுகள் மற்றும் வழிகாட்டுக் கொள்கைகளின் அடிப்படையில், நேர்மையான, நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை எட்டுவது குறித்து இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன என்பதையும் இந்தியா தெரிவித்தது. இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழல் பற்றிக் குறிப்பிட்ட சீன வெளியுறவு அமைச்சருக்குப் பதிலளிக்கையில், இது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில் பாகிஸ்தானுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் ஜெய்சங்கர் அவர்கள் மீண்டும் எடுத்துக் கூறினார்.

இருதரப்பு உறவுகளை மேலெடுத்துச் செல்ல, இந்திய சீன எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவது மிகவும் முக்கியமானது என்று இருதரப்பும் மீண்டும் வலியுறுத்தின. இருதரப்புப் பொருளாதார உறவுகள் மேம்பட்டுள்ளது. எனினும், சீனாவுடனான இந்திய வர்த்தகப் பற்றாக்குறை, இந்தியாவுக்குக் கவலை அளிப்பதாயுள்ளது. சீன உள்நாட்டு சந்தையில், இந்திய மருந்துப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பப் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவை அதிக அளவில் சென்றடைய, சீனத் தரப்பிலிருந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்திய சீன எதிர்கால உறவுகள், முக்கியப் பிரச்சினைகளில் இருதரப்பிற்கும் இடையே உள்ள பரஸ்பர உணர்திறனை அடிப்படையாகக் கொண்டுள்ளன என்றும், அது இயற்கையே என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எடுத்துரைத்தார். இரு அண்டை நாடுகளும் மிகப்பெரிய முன்னேறும் பொருளாதார நாடுகள் என்பதால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகளில் சில பிரச்சனைகள் எழக்கூடும். ஆனால் வேறுபாடுகள் மோதலாக மாறி விடக் கூடாது என்று இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். இது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்துவரும் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது.

இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 2020 ஆம் வருடத்திற்கான இருதரப்பு உறவுகளில் ஒத்துழைப்பு, விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு, இந்திய தேசிய அருங்காட்சியகம் மற்றும் சீன அருங்காட்சியகம் இடையே கலாச்சாரப் பரிமாற்றங்கள், பாரம்பரிய மருத்துவத் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு, இந்திய தேசிய அருங்காட்சியகம் மற்றும் சீனாவின் ஹூபேய் மாகாண அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும்.