ஐ.நா பாதுகாப்புச் சபையில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான்.

(மூத்த பத்திரிக்கையாளர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி, ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல், மீண்டும் படுதோல்வி அடைந்துள்ளது. சீனாவின் நிரந்தர நட்பு நாடான பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதன் பேரில், 15 உறுப்பினர்களின் அவசர சந்திப்பு ஒன்றிற்கு சீனா அழைப்பு விடுத்தது. இந்த சந்திப்பில், சீனா மட்டும்தான், ஜம்மு – காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகளைப் பற்றி கவலை தெரிவித்தது. மற்ற அனைத்து முக்கிய நாடுகளும், இந்த விஷயத்தை இந்தியாவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு பாகிஸ்தானை அறிவுறுத்தின. ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப் பிரிவை இந்தியா நீக்கியபின், பாகிஸ்தான் பதற்றத்தில் காணப்படுகின்றது. ஜம்மு-காஷ்மீர் பற்றிய பாகிஸ்தானின் கனவை, இந்தியாவின் இந்த முடிவு கலைத்து விட்டது. ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முற்றிலும் தனது உள்நாட்டு விவகாரம் என இந்தியா விவரித்ததுள்ளதை அமெரிக்க நிர்வாகம் கவனமாகக் குறித்துக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் உள்ளன என்றும், இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த விவகாரத்தை பரஸ்பர அரசியல் மற்றும் பிரதிநிதிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் ரஷ்யா கூறியுள்ளது. இந்த சந்திப்பின் முடிவுகள் பற்றிய ஒரு முறைசாரா அறிக்கையை அளிக்க சீனா எடுத்த முயற்சிகளைக் கூட ஐ.நா பதுகாப்புச் சபை தடுத்து விட்டது. ஆகையால், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான இந்த சந்திப்பு, காஷ்மீர் நிலையை ஆராய நடத்தப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வ சந்திப்பாகப் பதிவு செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் சார்பில் சீனப் பிரதிநிதி கூறியவற்றை ஐ,நா-வின் பாதுகாப்புச் சபை கேட்ட போதும், ஒரு முறைசாரா அறிவிப்பை வெளியிட வேண்டும் என அவர் விடுத்த கோரிக்கையை அது ஏற்கவில்லை. பின்னர், ஐ.நா-விற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி சய்யத் அக்பருதீன் அவர்கள், சீனப் பிரதிநிதி, காஷ்மீர் பற்றிய தனது கருத்துக்களை, பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பினர்களின் கருத்துக்களாக ஏன் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார் என்ற கேள்வியை எழுப்பினார். ஜம்மு காஷ்மீரிலுள்ள சூழலைக் குறித்து கவலை தெரிவித்தும், அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என இந்தியாவிற்கு அறிவுறுத்தியும், பாதுகாப்புச் சபை ஒரு அறிவிப்பை வெளியிடும் என பாகிஸ்தான் எதிர்பார்த்திருந்தது. ஆனால், பாகிஸ்தான் முழுவதுமாகத் தனிமைப்படுத்தப் பட்டது. எனினும், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்சனையாக்கி விட்டதாக, பாகிஸ்தான் அரசாங்கம் தனது அப்பாவி மக்களை நம்ப வைக்க முயற்சித்தது. 1971 ஆம் ஆண்டிற்குப் பிறகு, காஷ்மீர் விவகாரம் முதன் முறையாக ஐ.நா-வில் தற்போது விவாதத்திற்கு வந்தாலும், பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள், முறைசாரா விதத்திலேயே  இதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வ குறிப்புகள் கூட எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்திற்கு ஐ.நா அத்தனை முக்கியத்துவத்தை அளிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. சீனாவின் வற்புறுத்தலின் பேரிலேயே இந்த விஷயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக, பாகிஸ்தானில் உள்ள ஜெயிஷ்-ஏ-மொஹம்மத் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாகப் பிரகடனப்படுத்துவதைத் தடை செய்யும் நடவடிக்கையில் சீனா தோற்றுப் போனது நினைவிருக்கலாம். அப்போதும் சீனாவும் பாகிஸ்தானும் தனிமைப்படுத்தப்பட்டன.

பாதுகாப்புச் சபையின் சந்திப்பிற்கு முன்னர், காஷ்மீர் பற்றிய அமெரிக்க அதிபரின் நிலைப்பாட்டை மாற்ற, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இறுதியாக முயன்று தோல்வியுற்றார். இந்த விவகாரத்தை இந்தியாவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை மூலம்ல் இம்ரான் கான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளித்தார். இந்தியாவும் பாகிஸ்தானும் 1972 ஆம் ஆண்டில் சிம்லா ஒப்பந்தம் மற்றும் 1999 ஆம் ஆண்டில் லாகூர் ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திட்ட பிறகு, இது சார்ந்த தங்களுடைய தீர்மானங்கள் தேவையற்றவையாக மாறிவிட்டன என்பதையும் பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் புரிந்து கொண்டனர். இந்த இரண்டு ஒப்பந்தங்களுக்குப் பிறகு, காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை இந்தியா எப்போதும் கூறி வருகிறது. ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி, பாகிஸ்தானுடன் இருதரப்பு முறையில், எந்த விவகாரத்தைப் பற்றிப் பேசவும் இந்தியா தயாராக உள்ளது. ஆனால், தனது நியாயமற்ற நிபந்தனைகளுக்கு இந்தியாவைப் பணிய வைக்க, பயங்கரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தைகளும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது என்ற தனது நிலைப்பாட்டில் இந்தியா எப்போதும் உறுதியாக உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான்-சீனா ஆகிய நாடுகளின் சேர்க்கை, மற்ற உலக நாடுகளின் கண்ணோட்டத்தை உறுதிப்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை விடுத்து, இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே மற்ற நாடுகளின் கருத்தாக உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மாற்றுவதில், ஒருதலைப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதை இந்தியா நிறுத்த வேண்டும் என சீனப் பிரதிநிதி இந்தியாவைக் கேட்டுக்கொண்ட பிறகு, 370-ஆவது சட்டப்பிரிவானது, முழுமையாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாகும் என்பதையும் இதனால், இந்தியாவைத் தாண்டி மற்ற நாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதையும் ஐ.நா-விற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ஆணித்தரமாக அறிவித்தார். ஐ.நா-வின் வரம்பைத் தாண்டிய விவகாரங்களைப் பற்றிய பேச்சுக்களை இங்கு கொண்டு வர முயற்சிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என திரு. அக்பருதீன் கேட்டுக் கொண்டார். ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாகிஸ்தான் சந்தித்த  தோல்வி, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் கட்டுக்கதைகளுக்கு செவி மடுக்க எந்த நாடும் தயாராக இல்லை என்பதையே மீண்டும் நிலைநாட்டியுள்ளது.