பால்டிக் நாடுகளுடன் இந்தியாவின் தொடர்பு.

(இட்ஸா ஆய்வாளர் ராஜரிஷி ராய் அவர்களின் ஆங்கில உரையின் , தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லிதுவேனியா ஆகிய பால்டிக் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். பால்டிக் நாடுகளுடனான இந்தியாவின் தொடர்புகளுக்கு, இதுவரையிலான மிக உயர்மட்ட ராஜீயத் தொடர்பாக அமைந்துள்ள இப்பயணம், முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. வெங்கையா நாயுடு அவர்கள், அந்நாட்டு உயர்மட்டத் தலைவர்களை சந்தித்ததோடு, வர்த்தக மன்றக் கூட்டங்களுக்கும் தலைமை தாங்கினார். அங்கு வாழும் இந்தியர்களுடன் அளவளாவினார். வேளாண்மை, இணையதளப் பாதுகாப்பு, மின்னணு நிர்வாகம், கல்வி போன்ற துறைகளில், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.

எஸ்தோனிய திட்டத் தலைவர்கள் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் உரையாற்றினார். பால்டிக் நாட்டு மக்களின் உணர்வுகளோடு, இந்திய பாரம்பரிய, சமஸ்கிருத மொழி, யோகா, ஆயுர்வேதம் போன்றவை ஒண்றியிருப்பதையும், பிராந்திய நாகரீக இணைப்புக்கள் மிகுந்துள்ளதையும் எடுத்துரைக்கும் விதமாக, அவரது நிகழ்ச்சிகள் அமைந்தன. பாரத மண்ணிற்கே உரித்தான வசுதைவ குடும்பகம், அதாவது, யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற தத்துவத்தைப் பிரதிபலிப்பதாக, பால்டிக் நாடுகளுடனான இந்தியாவின் பிணைப்புக்கள் திகழ்கின்றன. இந்த மூன்று பால்டிக் நாடுகளிலும் ஹிந்தி மொழிக்கான இருக்கை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைநகரங்களைத் தாண்டி, பிற நகரங்களிலும் தொடர்புகள் பெருக வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தும் விதமாக, குடியரசு துணைத் தலைவர், கௌன்ஸாஸ் என்ற இரண்டாவது பெரிய நகருக்கு விஜயம் செய்தார். வேகமாக மாறிவரும் உலகில், பால்டிக் நாடுகளும், பிராந்தியங்களும் தங்களுக்கிடையேயான புரிதல்களை வளர்த்துக் கொள்வது அவசியம்.

நார்டிக் நாடுகள், ரஷ்யா போன்ற நாடுகளின் நுழைவாயிலாக, முக்கியத்துவம் வாய்ந்த புவி மையத்தில் பால்டிக் நாடுகள் அமைந்துள்ளன. பால்டிக் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடுகளாக விளங்குகின்றன. இந்நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம், வழக்கமான சக்தி வாய்ந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைத் தாண்டி, அப்பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை அதிகரிப்பது எளிதாகும். ஐரோப்பா கண்டமே பொருளாதாரப் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் வேளையில், பால்டிக் நாடுகள், சிறந்த பொருளாதார வளர்ச்சி கொண்ட தீவுகளாகக் காட்சியைக்கின்றன. பூகோள ரீதியாக, சிறிய அளவிலான நாடுகளாக இருந்த போதிலும், பால்டிக் நாடுகள், புதுமைப் படைப்புக்களிலும், நவீன தொழில்நுட்பங்களிலும் சிறந்து விளங்குகின்றன.

இந்தியாவுக்கும், பால்டிக் நாடுகளுக்குமிடையே, பல இருதரப்பு, உலக விஷயங்களில் கருத்தொற்றுமை நிலவுகிறது. உலகில் தற்போது, அதிகாரப் போட்டியும், ஆதிக்க மனப்பான்மையும் மலிந்துள்ளது. புவிசார் பொருளாதார, செயலுத்திப் போட்டிகளுக்கும் குறைவில்லை. பயங்கரவாதம், இணையதளப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட, வழக்கமான மற்றும் வழக்கத்துக்கு மாறான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிறைந்துள்ளன. 21 ஆம் நூற்றாண்டின் மையப் பொருளாக விளங்கிய உலகமயமாக்கலில் பின்னடைவை உருவாக்கும் விதமாக, நாடுகள், உள்நாட்டிற்குள் மட்டுமே தங்கள் பார்வையைத் திருப்பும் போக்கு பெருகியுள்ளது. உலகம் நான்காவது தொழில் புரட்சியை நோக்கி அடி எடுத்து வைத்துள்ள நிலையில், தவறான வழிகளில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய உலகளவிலான மாற்றங்கள், புதிய கூட்டாளித்துவத்திற்கும், ஏற்பாடுகளுக்கும் அழைப்பு விடுக்கின்றன. இந்நிலையில், இந்தியாவும், பால்டிக் நாடுகளும் தங்கள் ஒருங்கிணைந்த வலிமையை நிலைநாட்டுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

பால்டிக் நாடுகளின் துடிப்பான புதுமைப் படைப்புக்களுக்கான சூழலும், அறிவுசார் பொருளாதாரமும் இந்தியாவுக்கு மிகவும் உகந்த வகையில் நிலவுகின்றன. இண்டர்னெட் ஆஃப் திங்ஸ், செயற்கை அறிவு, பிளாக் செயின் மற்றும் மின்னணு நிர்வாகம் போன்றவற்றில் பால்டிக் நாடுகள் வெற்றிநடை போடுகின்றன. நவீன தொழில்நுட்பம், திறன் வளர்ப்பு, நீடித்த வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றின் மூலம், இந்திய மனித வளத்தையும், அறிவுசார் ஆற்றல்களையும் மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் வளர்ச்சிக் குறிக்கோள்களைப் பூர்த்தி செய்யத் தக்கவையாக, பால்டிக் நாடுகளின் டிஜிட்டல் திறன் விளங்குகிறது. எனவே, மேக் இன் இண்டியா, டிஜிட்டல் இண்டியா, ஸ்டார்ட் அப் இண்டியா போன்ற இந்தியாவின் மறுமலர்ச்சித் திட்டங்களுக்கு பால்டிக் நாட்டுகளின் திறன் உறுதுணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இருதரப்பு உறவுகளில், பொருளாதார, தொழில்நுட்பக் கூட்டாளித்துவம் அச்சாணியாக விளங்குகின்றது. பால்டிக் நாடுகளின் தலைசிறந்த, நவீன தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குக் கிடைக்கும் அதே சமயம், பால்டிக் நாடுகளுக்கு அபிரிமிதமான வர்த்தக வாய்ப்புக்களை வழங்கும் சந்தையாக இந்தியா விளங்குகிறது. உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் உழலும் இவ்வேளையில், இது பால்டிக் நாடுகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். பால்டிக் நாடுகளில் இந்தியத் தூதரகங்கள் இல்லாத நிலையிலும், அந்நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம், 2018-19 ஆம் ஆண்டில் 80 கோடி டாலர் அளவை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. பால்டிக் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கூட்டாளித்துவ சாத்தியக் கூறுகள் மிக அதிகம் என்பது கண்கூடு. சுற்றுலா, மருந்துப் பொருட்கள், கல்வி, தொழில் உற்பத்தி, சுகாதார வசதிகள் போன்ற துறைகள், வருங்காலத்தில் துடிப்பான கூட்டாளித்துவத்தின் தூண்களாக அமையவுள்ளன. மாற்றங்களுக்கான சக்கரச் சுழற்சியைத் தக்க வைத்து, ஈட்டுபாட்டு வேகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது சவாலான விஷயம் தான் என்றால் அது மிகையல்ல.