இந்தியா நேபாளம் இடையில் புதிய உச்சங்களைத் தொடும் இருதரப்பு உறவுகள்.

(அரசியல் விமர்சகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)

இந்தியா நேபாளம் கூட்டு ஆணையத்தின் ஐந்தாவது  சந்திப்பு சமீபத்தில் காட்மாண்டுவில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் மூலம், இருதரப்பு உறவுகளின் வரம்புகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையிலான இணைப்பு வசதிகள், பொருளாதாரக் கூட்டுறவு, வர்த்தகம், போக்குவரத்து, எரியாற்றல், நீர்வளம், கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இந்த சந்திப்பில் குறிப்பிட்ட கவனம் செலுத்தப்பட்டது. இந்த சந்திப்பிற்கு இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் இணைந்து தலைமை வகித்தார்கள். முன்னதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள், வங்கதேசத்தில், அந்நாட்டுத் தலைவர்களுடன் பரஸ்பர விருப்பங்கள் மற்றும் பிராந்தியப் பிரச்சனைகளைப் பற்றி ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். பின்னர், அவர் டாக்கவிலிருந்து காட்மாண்டுவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

கூட்டு ஆணைய சந்திப்பிற்கு முன்னர், திரு. ஜெய்ஷங்கர், நேபாளப் பிரதமர் கே.பி.ஷர்மா ஓலி அவர்களை சந்தித்தார். இவ்வாண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இரண்டாவது முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, நேபாளத்திற்கு, இந்திய அமைச்சர் ஒருவரால் மேற்கொள்ளபட்ட முதல் உயர் மட்டப் பயணமாகும் இது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பல உயர் மட்டப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், நேபாளம்-இந்தியா இடையிலான உறவின் அனைத்து அம்சங்களிலும் வேகம் அதிகரித்திருப்பதைக் குறித்து, கூட்டு ஆணையம் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளப் பிரதமர் திரு. ஓலி இந்தியா வந்தார். அதைத் தொடர்ந்து 2018 மே மற்றும் ஆகஸ்டு மாதங்களில் பிரதமர் மோதி அவர்கள் நேபாளம் சென்று வந்தார்.

நேபாளத்தில், மோதிஹாரி-அம்லேக்கஞ்ச் பெட்ரோலியப் பொருட்களுக்கான குழாய் அமைப்பதில் இந்தியா உதவி செய்தது. மேலும், நுவாகோட் மற்றும் கோர்கா மாவட்டங்களில், நிலநடுக்கத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட வீடுகளின் புனர் நிர்மாணப் பணிகள் இந்தியாவின் உதவியால் நிறைவடைந்து விட்டன. இந்தியாவின் இந்த உதவிகளைக் குறித்து கூட்டு ஆணையம் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது. இரு அமைச்சர்களின் முன்னிலையில், வீட்டு வசதி பணித் திட்டங்களுக்கான நிதி உதவியாக, 245 கோடி நேபாளி ரூபாய்க்கான காசோலையை இந்தியா அளித்தது. நேபாளின் டெராய் பகுதிகளில் சாலைக் கட்டமைப்பை வலுவாக்க, இந்திய அரசாங்கம் 500 கோடி இந்திய ரூபாய் உதவிக்கான உறுதிப்பாட்டை அளித்திருந்தது. இதன் ஓர் அங்கமாக, 80.71 கோடி இந்திய ரூபாய்க்கான மற்றொரு காசோலையும் வழங்கப்பட்டது. டெராய் பகுதிகளில், ஹுலாகி சாலைகளின் நான்கு பிரிவுகள் ஏற்கனவே துவக்கப்படத் தயாராக உள்ளன.

இந்தியாவின்  உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கும், நேபாளத்தின் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் கட்டுப்பாடுத் துறைக்கும் இடையில், உணவுப் பாதுகாப்பு குறித்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு அமைச்சர்களின் முன்னிலையில் கையெழுத்தானது.

சந்திப்பிற்குத் தலைமை வகித்த, டாக்டர். ஜெய்ஷங்கர் மற்றும் நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் க்யாவாலி ஆகிய இருவரும், எல்லை தாண்டிய ரயில் திட்டங்களான, ஜயாநகர்-ஜனக்பூர் மற்றும் ஜோக்பனி-பிராட்நகர் பிரிவுகளிலும், பிராட்நகரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாலையிலும்  ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து திருப்தியை வெளிப்படுத்தினர். நேபாளப் பிரதமர் ஓலி அவர்கள் இந்தியா வந்தபோது ஒப்புக்கொள்ளப்பட்ட மூன்று புதிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் மறு ஆய்வு செய்தனர். ரக்ஸௌல்-காட்மாண்டு மின் ரயில் வழித்தடம், உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் விவசாயத்தில் கூட்டாளித்துவம் ஆகியவை இந்த மூன்று புதிய துறைகளாகும். ரக்ஸௌல்-காட்மாண்டு மின் ரயில் வழித்தடத்தைப் பொறுத்த வரை, இந்தியா நேபாள கூட்டுக் குழுக்கள், சாத்தியக்கூறுகளுக்கான முன் ஆய்வை நடத்தி முடித்து விட்டன. உள்நாட்டு நீர்வழித் திட்டங்களுக்கான கூட்டாய்வு விரைவாக நடைபெற்று வருகிறது. நேபாளத்தின் நாராயணி மற்றும் கோசி நதிகளில் நடுத்தரக் கப்பல்களை இயக்குவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

1950 ஆம் ஆண்டின் இந்தியா-நேபாளம் இடையிலான அமைதி மற்றும் நட்புக்கான ஒப்பந்தம் பற்றியும், இரு நாட்டுப் பிரதமர்களுக்கும் இந்தியா-நேபாள உறவுகள் குறித்த வல்லுனர் குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பது குறித்தும் இரு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். வர்த்தகம் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களின் பகுப்பாய்வை விரைவில் முடிக்கவும், இரு நாடுகளுக்கு இடையில் எல்லைகளைக் கடக்கும் முக்கிய இடங்களில் கட்டமைப்பு மற்றும் தளவாட வசதிகளின் தொடர்ச்சியான மேம்பாடு மற்றும் மேலாண்மைக்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இந்திய நேபாள எல்லைப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் வெள்ளங்கள் குறித்து கவலை தெரிவித்த கூட்டு ஆணையம், இந்த நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஒரு கூட்டுக் குழுவின் அதிகாரிகளின் பரிந்துரைகளின் படி நடவடிக்கைகளை எடுக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்கான இடைவெளிக்குப் பிறகு, இந்தியா நேபாளம் கூட்டு ஆணையத்தின் சந்திப்பு தற்போது நடந்துள்ளது. இதற்கு முந்தைய சந்திப்பு, புது துல்லியில், 2016 அக்டோபர் மாதம் நடைபெற்றது. 1987 ஆம் ஆண்டு, இரு நாடுகளும் இந்த கூட்டு ஆணையத்தை உருவாக்கின. இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியக் கூட்டுறவின் அனைத்து அம்சங்களையும் பகுப்பாய்வு செய்வது இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. எனினும், பல ஆண்டுகளுக்கு இந்த ஆணையம் செயல்பாடற்றுதான் இருந்தது.

தனது காட்மண்டு சந்திப்பின் போது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்கள், நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி அவர்களையும் சந்தித்தார். கூட்டு ஆணைய சந்திப்பில், இரு தரப்பினரும் வெளிக்காட்டியுள்ள உறுதிப்பாட்டை வைத்துப் பார்க்கும்போது, இந்திய நேபாள உறவுகள் புதிய உச்சங்களைக் கண்டிப்பாக எட்டும் என்ற நம்பிக்கையே மேலோங்கி நிற்கிறது.