உத்வேகம் பெறும் இந்திய- பிரான்சு உறவுகள்

 

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஐரோப்பியக் கல்வி மையத்தின் தலைவர் முனைவர் உம்மு சல்மா பாவா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி

இந்திய-ஃப்ரான்ஸ் இருதரப்பு உறவுகளையும் இரு நாடுகளுக்கிடையேயான 20 வருட பழமையான செயலுத்திக் கூட்டாளித்துவ ஒப்பந்தத்தையும், பிரதமரின் இவ்வார ஃப்ரான்ஸ் பயணம் வலுப்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ள அண்மை நிகழ்வுகளுக்கு  இந்தியாவின் நிலைப்பாட்டுக்குச் ஆதரவாக ஃப்ரான்ஸ் கருத்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என்று கூறியதுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிலும் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் வலுவான அடிப்படையிலும் பல ஆண்டுகள் வலுவான ஒத்துழைப்பின் அடிப்படையிலுமானது இரு நாட்டு உறவுகள் என்பதைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். செயலுத்திக் கூட்டாளித்துவத்தை மேலும் முன்னேற்றும் எதிர்காலத் திட்டங்களுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.  இந்த ஒத்துழைப்பிற்கு, திறன் மேம்பாடு, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆகியன முக்கிய துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இரு தரப்பு உறவின் வலுவான ஒரு தூணாக பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பைக் குறிப்பிட்ட பிரதமர், ரஃபேல் விமானங்கள் செப்டம்பர் மாதம் வரவிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலகளவில் சவால்களாக உள்ள பயங்கரவாதம் மற்றும் சித்தாந்த தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்ள அழைப்பு விடுத்த இரு தலைவர்களும் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்புக்கொண்டனர். பயங்கரவாத நிதியுதவியைக் கண்காணிக்க வலியுறுத்தும் பயங்கரவாத நிதித் தடுப்பு பணிக்குழு (FATF) –வில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானை இந்த விஷயத்தில் கருப்புப் பட்டியலில் சேர்ப்பதில் இந்த இரு தரப்பு ஒத்துழைப்பு மிக முக்கிய பங்காற்றியுள்ளது. பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்து மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கொண்டு வந்த தீர்மானத்தைச் செயல்படுத்த இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. நவம்பர் மாதம் மெல்பர்னில் நடைபெறவுள்ள பயங்கரவாத நிதியுதவி எதிர்ப்பு குறித்த சர்வதேச மாநாட்டை இரு தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பொருத்தவரையில் வருணா என்ற கடற்படைப் பயிற்சியும் கருடா என்ற விமானப்படைப் பயிற்சியும் அண்மையில் கூட்டாக நடைபெற்றது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தின் பின்னணியில், தடையில்லாப் போக்குவரத்தை உறுதிசெய்யவும் கடல்சார் மற்றும் இணையப் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த எதிர்காலத் திட்ட வரைவுக்கான ஒப்புதலையும் இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. குவாண்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு  மற்றும் “exascale” சூப்பர் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்காக CDAC  நிறுவனத்திற்கும் அடோஸ் நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஆற்றல் குறித்த விவகாரங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. மஹாராஷ்டிராவில் உள்ள ஜைத்தாபூரில் தொடங்கப்படவுள்ள ஆறு அணுசக்தி நிலையங்கள் குறித்து இந்தியாவின் NPCIL மற்றும் ஃப்ரான்சின் EDF ஆகியவற்றுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் குறித்தும் இரு நாடுகளும் ஆய்வு செய்தன. சர்வதேச சூரியக் கூட்டணி முன்னெடுப்பில் இந்தியாவுடன் இணைந்ததன் மூலம் இந்தியாவின் ஆற்றல் துறையில் ஃப்ரான்ஸ் பங்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

வர்த்தகம் மற்றும்  முதலீட்டு விவகாரங்களை எதிர்கொள்ளவும் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தவும், பொருளாதார மற்றும் நிதித் துறையின் உயர் நிலைப் பேச்சுவார்த்தையைப் புதுப்பிக்க இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். பொது சமூக அளவில், 2021-22 ஆண்டில் ”நமஸ்தே ஃப்ரான்ஸ்” திட்டத்தை மீண்டுமொரு முறை முன்னெடுக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது. இரு நாடுகளுக்கிடையே, மாணவர் பரிமாற்றம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் மோதி கோடிட்டுக் காட்டினார். மேலும், இந்தியாவில் அதிகரித்து வரும் ஃப்ரான்ஸ் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஃப்ரான்ஸில் தமது கல்வியை முடித்தவுடன் சில ஆண்டுகளுக்கு அங்கேயே தங்கிப் பணியாற்ற வழிவகுக்கும் ஒப்பந்தமும் இரு நாடுகளுக்கிடையே நிலவி வருகிறது.

விண்வெளி ஆராய்ச்சித் துறையில், 2022 ஆம் ஆண்டில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் திட்டத்திற்கு, இந்திய விண்வெளியாளர்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் குழுவுக்கு ஃப்ரான்ஸ் பயிற்சியளிக்கவிருக்கிறது. பாரிஸில் வாழும் இந்திய சமூகத்தினரிடையேயும் பிரதமர் உரையாற்றினார். ஃப்ரான்ஸில் நடந்த ஏர் இண்டியா விமான விபத்துக்களில் உயிரிழந்த இந்தியர்களுக்கான இரண்டு நினைவகங்களையும்  அவர் அர்ப்பணித்தார்.

பிராந்திய விவகாரங்களைப் பொருத்தவரை ஈரானின் அணுஆயுதத் திட்டத்தின் மீதான விரிவான கூட்டுச் செயல் திட்டத்திற்கு(JCPOA) இரு நாடுகளும் முழு ஆதரவை வலியுறுத்தின. இது குறித்த அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு எட்டப்படவேண்டும் என்றும் வலியுறுத்தின.  ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா ஒரு உறுப்பினராக இல்லாத போதும், ஃப்ரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியாவை ஒரு பியாரிட்ஸ் கூட்டாளி என்ற முறையில் பங்கேற்க பிரதமர் மோதிக்கு அழைப்பு விடுத்தார். சுற்றுச்சூழல், பருவ நிலை மாற்றம் மற்றும் டிஜிட்டல் மாற்றங்கள் ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் பிரதமர் மோதி உரையாற்றினார். விரிவான, வளர்ந்து வரும் பல்முக உறவுகள் பேணப்படும் ஃப்ரான்ஸ் நாட்டுக்கான பாரதப் பிரதமரின் இந்தப் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது.