இந்திய-ஜாம்பிய உறவுகளை வலுப்படுத்தும் ஜாம்பிய அதிபரின் வருகை

ஆப்ரிக்காவுக்கான செயலுத்தி ஆய்வாளர் முனைவர் நிவேதிதா ரே ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

குடியரசு தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் அவர்களின் அழைப்பை ஏற்று,  ஜாம்பிய அதிபர் திரு எட்கர் சாக்வா லுங்கு இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகை தந்திருந்தார்.  புதிய அரசு அமைந்தபிறகு சாம்பிய அரசு தலைவரின் முதல் பயணமாகவும்,  அதிபர் லுங்கு இந்தியாவுக்கு முதல் முதலாக வரும் அரசு முறை பயண்மாகவும் இந்த வருகை அமைந்தது.    16 ஆண்டுகளுக்கு முன்பாக ஏப்ரல் 2003ல் அதிபர் லெவிம்வானவாசா இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகை தந்ததற்கு பிறகு நிகழும் அதிபர் அளவிலான அரசு முறை வருகை இதுவேயாகும்.

ஆப்ரிக்கா நாடுகளுடனான உறவுகளில் இந்தியாவின் முன்முயற்சி கொள்கை அடிப்படையில் இந்த வருகை முக்கியத்துவம் பெறுகிறது.  மூன்றாவது இந்திய ஆப்ரிக்க மன்ற உச்சி மாநாட்டு செயல்முறைக்கு பின்னர்,  இந்திய அரசியல் தலைவர்கள் ஆப்ரிக்க நாடுகளுக்கு 32 அரசு முறை பயணங்களை மேற்கொண்டுள்ளனர்,  ஆப்ரிக்க தலைவர்கள் இந்தியாவிற்கு 35 முறைகள் வருகை தந்துள்ளனர்.  மேலும்,  குடியரசு தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் சாம்பியாவிற்கு அரசு முறை பயணமாக ஏப்ரல் 2018-ல் சென்று வந்த 16 மாதங்களுக்கு பிறகு பதில் மரியாதை செலுத்தும் விதமாக ஜாம்பிய அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தார்.   இரு நாட்டு உறவுகளின் முன்னேற்றத்தை முழுமையாக மறு ஆய்வு செய்வதற்கு இந்த வருகை முக்கியமான வாய்ப்பாக திகழ்ந்தது.

குடியரசு தலைவர் மாளிகையில் தரப்பட்ட அலங்கார வரவேற்பு, ராஜ்காட்டிற்கு சென்று வந்தது,  இந்திய குடியரசு தலைவரை சந்தித்தது, பிரதமர் திரு நரேந்த்ர மோதியுடனான குழு நிலை பேச்சுவார்த்தைகள் ஆகியவை சாம்பிய அதிபரின் இந்திய பயணத்தின் முக்கிய நிகழ்வுகளாகும்.  புது தில்லியில் நடைபெற்ற இந்தியா-ஜாம்பியா வர்த்தக மன்ற கூட்டத்திலும் திரு லுங்கு அவர்கள் கல ந்து கொண்டார்.

ஜாம்பிய அதிபரும் பிரதமர் மோதியும், குழு நிலை பேச்சு வார்த்தைகாளில்,  பாதுகாப்பு, ராணுவம், கனிம வளங்கள், வர்த்தகம் மற்றும் முதலீடு, உள்கட்டுமானம், எரி ஆற்றல், சுகாதாரம், கலாச்சார துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து உபயோகமான விவாதங்களை நடத்தியுள்ளனர்.  ஏப்ரல் 2018-ல்  குடியர்சு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்களின் சாம்பிய பயணத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், கையெழுத்தான ஒப்பந்தங்களின் நிலை குறித்து அவர்கள் மறு ஆய்வு செய்து,  அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து திருப்தியை தெரிவித்தனர்.  இந்திய குடியரசு தலைவரின் கடந்த ஆண்டு சாம்பிய பயணத்தின் போது அறிவிக்கப்பட்ட 30 லட்சம் டாலர் பொருமானமுள்ள மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்  மற்றும் மகாத்மா காந்தி ஆரம்ப பள்ளிக்கான ஒரு லட்சம் டாலர் நன் கொடை தொகை ஆகியவற்றை பெற்றுகொண்டதற்கான ஒப்புதலை அதிபர் லுங்கு அறிவித்தார்.

வளர்ச்சிக்கான கூட்டாளித்துவத்தில், ஜாம்பியாவின் வளர்ச்சி திட்டங்களில் இந்தியா அளிக்கும் ஆதரவுக்கு முக்கியமாக ராணுவபடையினரின் திறன் மேம்பாட்டிற்கு இந்தியாவின் பங்கிற்கு அதிபர் லுங்கு பாராட்டு தெரிவித்தார்.    பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து மகிழ்ச்சியை தெரிவித்த அதிபர், இந்த  புரிந்துணர்வு ஒப்பந்தமானது பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை அதிகப்படுத்த வழிவகுக்கும் என்பதாலும்,  இந்திய ராணுவம் மற்றும் வான்படை பயிற்சி குழுக்கள் ஜாம்பியாவிற்கு அனுப்பபட்டு, அன்நாட்டின் ராணுவத்தின் திறனை மேம்படுத்த பயிற்சியளித்து உதவும் என்று கூறினார்.

நிலவியல் மற்றும் கனிம வளத்துறையில் ஒத்துழைப்பு,  சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையில் ஒத்துழைப்பு,  கலை மற்றும் கலாச்சார துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்,  இந்திய வெளியுறவு சேவைக்கான கல்வி நிறுவனம் மற்றும் ஜாம்பிய ராஜதந்திர மற்றும் சர்வதேச ஆய்வு கல்வி மையத்திற்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ஜாம்பிய தேர்தல் ஆணையத்திற்கிடையே தேர்தல் குறித்து பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம்,  ஈ-விபாப் வலை சார்பு திட்டத்தில் கையெழுத்திட்டதன் மூலம் தொலைகாட்சி வழி கல்வி மற்றும் தொலைபேசி வழி மருத்துவம் ஆகியவற்றில் ஜாம்பியாவின் பங்கெடுப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் என பல முக்கிய ஒப்பந்தங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அதிபரின் வருகையில் கையெழுத்தாகின.

சூரிய ஒளி ஆற்றல், மற்றும் இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் குறித்து வெளியாகிய சில முக்கிய அறிவிப்புகளை அதிபர் லுகு  நன்றியுடன் வரவேற்றுள்ளார்.  சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டிற்கான மையம் ஒன்று அமைப்பதற்கு தேவையான ஆதரவு அளித்தல்,  ஜாம்பியாவில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக சூரிய ஒளி ஆற்றலால் இயங்கும் பாசன  விசையியக்க குழாய்கள் 100 வழங்குதல்,  ஜாம்பியா வான்படை தளத்திற்கு 5 தீயணைப்பு வாகனங்கள் வழங்குதல், 1000 மில்லியன் டன்கள் அரிசி மற்றும் 100 மில்லியன் டன்கள் பால் பவுடர் வழங்குதல் ஆகியவை இதில் அடக்கம்.    ஜாம்பியாவின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் இந்தியா காட்டிவரும் சீரான தொடர்ந்த அர்ப்பணிப்பு உணர்வையே இந்த அறிவிப்புகள் பிரதிபலிக்கின்றன.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள்  இரு தரப்பு ஒத்துழைப்பில் மிக முக்கியமான கூறு ஆகும்.  வர்த்தக உறவுகளை பன்முகப்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.  இரு தரப்பு வர்த்தகம் சீராக உயர்ந்து தற்போது 2018-19ற்கான மொத்த வர்த்தகம் 830 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது; இவற்றில் பெரும்பான்மை  ஜாம்பியாவிலிருந்து ஏற்றுமதி ஆகுபவை ஆகும். இந்தியாவிலிருந்து ஜாம்பியாவில் சுரங்கம், உள்கட்டுமானம், உற்பத்தி,  மருந்து பொருட்கள் மற்றும் தற்போது வேளாண் பொருட்கள் போன்ற துறைகளில் தனியார் முதலீடு சீராக அதிகரித்து வருகிறது.  ஏற்கனவே வலுவாக இருந்துவரும் இந்திய ஜாம்பிய இருதரப்பு உறவுகளில்,  மேலும் அழுத்தத்தையும், வலுவையும்  ஜாம்பிய அதிபரின் வருகை அதிகரித்திருக்கிறது என்பது சர்வ நிச்சயம்.