இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் பிரதமரின் அமீரக, பஹ்ரைன் நாட்டுப் பயணம்.

(மேற்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முகமது முடாஸ்ஸிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

சென்ற வார இறுதியில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் அமீரகத்துக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணமாகவும், பஹ்ரைன் நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகவும் இது அமைந்துள்ளது. வளைகுடா நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள நெருக்கத்தை இது வெளிப்படுத்துகிறது. அமீரகத்தில், பிரதமர் அவர்கள், அபுதாபியின் இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களைச் சந்தித்து, முக்கிய இருதரப்பு, பிராந்திய மற்றும் உலக விஷயங்கள் குறித்து விவாதித்தார். “ஆர்டர் ஆஃப் சயீத்” என்ற அந்நாட்டு உயரிய சிவில் விருது அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இவ்விருது, இந்தியாவுக்கும் அமீரகத்துக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பிரதமர் ஆற்றிய பங்களிப்பிற்கும் அவரது தலைசிறந்த தலைமைப் பண்பிற்கும் அடையாளமாக வழங்கப்படுகிறது.

அமீரகத்தில் ரூபே கார்டை பிரதமர் துவக்கி வைத்தார். வளைகுடா நாடுகளிலேயே முதலாவதாகவும், சிங்கப்பூர் மற்றும் பூட்டானுக்கு அடுத்தபடியாக, மூன்றாவதாகவும், இந்த ரூபே கார்டு வழியான பணம் செலுத்துதல் ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்திய தேசிய பணம் செலுத்துதல் கழகத்திற்கும், அமீரகத்தின் மெர்குரி பணம் செலுத்துதல் சேவைகள் நிறுவனத்திற்கும் இடையே, பிரதமர் மோதி அவர்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. ரூபே சேவையைத் துவக்கும் விதமாக, பிரதமர் மோதி அவர்கள், பஹ்ரைன் நாட்டிலுள்ள ஷ்ரீநாத்ஜி ஆலயப் பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளப் பணம் செலுத்தினார்.

பஹ்ரைன் நாட்டில் அன்புடன் வரவேற்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், அந்நாட்டு உயரிய சிவில் விருதான “கிங் ஹமாத் ஆர்டர் ஆஃப் த ரினைசான்ஸ்” என்ற விருது அளித்து கௌரவிக்கப்பட்டார். விருதை ஏற்றுக் கொண்டு ஆற்றிய உரையில், இந்தியாவுக்கும், பஹ்ரைன் நாட்டிற்கும் இடையே, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான நெருக்கமான நட்புறவிற்கு இந்த விருது அடையாளமாகத் திகழ்கிறது என்று பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் குறிப்பிட்டார். அரசர் ஹமாத் பின் இஸா அல் கலீஃபா அவர்கள், பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு விருந்தளித்துக் கௌரவித்தார். பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் அரசருடன், முக்கிய இருதரப்பு, பிராந்திய மற்றும் உலக விஷயங்கள் குறித்து விவாதித்தார்.

பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், பஹ்ரைன் நாட்டின் துணை அரசரும், இளவரசருமான சல்மான் பின் ஹமாத் பின் இஸா அல் கலீஃபா அவர்களைச் சந்தித்து, இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்துப் பரிமாறிக் கொண்டார். முன்னதாக, பஹ்ரைன் நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடையே, பஹ்ரைன் தேசிய விளையாட்டரங்கில் உரையாற்றிய பிரதமர், பஹ்ரைன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், இருநாடுகளுக்கும் இடையிலான உறவை முன்னெடுத்துச் செல்லவும் அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டினார். பஹ்ரைன் நாட்டில் மூன்றரை லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். பஹ்ரைன் நாட்டில் குடியேறியவர்களிலேயே அதிகளவில் இந்தியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பஹ்ரைன் நாட்டுத் தலைநகரான மனாமாவில் உள்ள, 200 ஆண்டுகள் பழைமையான ஷ்ரீநாத்ஜி ஆலயத்திற்கு விஜயம் செய்த பிரதமர், 42 லட்சம் டாலர் செலவில் அவ்வாலயத்தில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்புப் பணிகளைத் துவக்கி வைத்தார். ஷ்ரீநாத்ஜி ஆலயம், வளைகுடா நாடுகளிலேயே மிகவும் பழைமையான ஆலயம் என்பது குறிப்பிடத் தக்கது. பிற மத ஆலயங்களை ஏற்றுக் கொள்ளும் பஹ்ரைன் நாட்டின் பண்பைப் பிரதமர் பாராட்டினார்.

புவிசார் அரசியலில் இறுக்கங்கள் நிறைந்த சூழலில், பிராந்திய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை இந்தியா முன்னெடுத்துச் செல்லும் வேளையில், பிரதமரின் இந்த மூன்றுநாள் பயணம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வளைகுடா பிராந்தியத்தில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இறுக்கமான சூழல் காரணமாக, அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் தாக்கங்களை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது. அப்பகுதியில் விளையும் எந்த அசம்பாவிதமும், இந்திய எரிசக்திப் பாதுகாப்பையும், அப்பிராந்தியத்தில் வசிக்கும் எட்டரை லட்சம் இந்தியர்களையும் பெருமளவில் பாதிக்கவல்லது. அமைதியான முறையில், பேச்சுவார்த்தை மூலம் பிராந்தியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

தெற்காசியாவில் அண்மையில் நடந்த நிகழ்வுகளினாலும் பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்ற இந்தியா சட்டமியற்றியதற்கு, இது முழுக்க, முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாக இருக்கும் போதிலும், பாகிஸ்தான் கண்டனம் தெரிவிக்கிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு, அமீரகம், பஹ்ரைன், சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின்  முழு ஆதரவையும் இந்தியா பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் இப்பயணத்தால், வளைகுடா நாடுகளுடனான, குறிப்பாக, அமீரகத்துடனான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுவடையும் என்பது திண்ணம்.