ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோதி – அதிபர் டிரம்ப் சந்திப்பு

அமெரிக்க விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி

 

பியாரிட்ஸில் நடந்த ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்தியப் பிரதமர் மோதி அவர்களுக்கு ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார். ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்வது, பருவ நிலை மாற்றம் போன்ற பல விஷயங்களில் இரு நாடுகளுக்கும் கருத்தொற்றுமை நிலவுவது குறிப்பிடத்தக்கது. இந்த உச்சி மாநாட்டின் பக்க நிகழ்வாக இந்தியப் பிரதமர்- அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு நிகழ்ந்தது.

இந்தச் சந்திப்பின் போது இரு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். உலக வர்த்தக நிறுவனத்தால் வளரும் நாடு என்று அடையாளப்படுத்தப்பட்டதிலிருந்து இந்தியா அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை உயர்த்தியிருப்பதாக டிரம்ப் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளதன் பின்னணியில் இந்தச்  சந்திப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், அமெரிக்காவும் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் எஃகுப் பொருட்களுக்கு வரியை உயர்த்தியுள்ளது. மேலும், இந்தியப்பொருட்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகையையும் ரத்து செய்தது.

இதற்கு பதிலடியாக, இவ்வாண்டு ஜூன் மாதம், அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் 28 பொருட்களுக்கு இந்தியாவும் அதிகக் கட்டணம் விதித்தது. செயலுத்தி உறவுகளை விரிவுபடுத்தும் வழிமுறைகள் குறித்தும் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். வளர்ந்து வரும் இரு தரப்பு செயலுத்திக் கூட்டாளித்துவத்தின் முக்கிய பகுதியாக வர்த்தகம் அமைந்துள்ள நிலையில், சந்தை அணுகல் மற்றும் வரிவிதிப்புகள் குறித்த அண்மைக் காலச் சர்ச்சைகள் நீண்ட நாட்களுக்குத் தொடரும் என்ற  அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி அதிகரிக்கப்படும் என்று மோதி அவர்கள் அறிவித்திருப்பது நம்பிக்கை அளித்துள்ளது. இரு நாடுகளும் தங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் களைய விரும்புவது குறிப்பிடத்தக்கது.

அதிக ஒத்துழைப்புக்குக் கண்டறியப்பட்டுள்ள ஒரு துறை ஆற்றல் துறையாகும். செப்டம்பர் மாதம்  அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லவிருக்கும் பிரதமர், ஹூஸ்டன் நகரில், ஆற்றல் துறையின் தொழிலதிபர்களுடனும் அங்குள்ள இந்தியர்கள் மத்தியிலும் உரையாடவிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து அதிக எண்ணெய் இறக்குமதி மற்றும் அமெரிக்க ஆற்றல் துறையில் இந்திய முதலீடு ஆகியவை இந்தப்  பயணத்தின் நோக்கங்களாக இருக்கும். அதிபர் டிரம்ப் அவர்களுடன் இருதரப்புச் சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்ள  மோதி  அவர்கள் வாஷிங்டன் டி சி செல்கிறார். இரண்டு செயலுத்திக் கூட்டாளிகளுக்கிடையிலான இச்சந்திப்பில், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது முறையாகப் பிரதமராக மோதி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறை அவர் டிரம்ப் அவர்களைச் சந்தித்தது இந்த பியரிட்ஸ் கூட்டத்தில் தான். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு இச்சந்திப்பு நிகழ்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட பிராந்திய அரசியல் சூழல், பாகிஸ்தானின் ஆதாரமற்ற கூற்றுக்களால் சர்வதேச மேடைகளில் விவாதப்பொருளாக்கப்பட்டது. எனினும், 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது முழுவதும் ஒரு உள் நாட்டு விவகாரம் என்ற தனது நிலைப்பாட்டை, ஐ நா  பாதுகாப்புச் சபையின் முறைசாராக் கூட்டத்தில் இந்தியா தெளிவாக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இயல்பு நிலைக்கு வேகமாகத் திரும்பிக்கொண்டுள்ளதாகவும் மோதி அவர்கள் தெரிவித்ததாக அதிபர் டிரம்ப் அவர்கள் கூறினார். “இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்த நடத்தினால், இதனை அவர்களே தீர்த்துக் கொள்ளலாம். வெகு நாட்களாக அப்படியே நடந்து வந்துள்ளது” என்று டிரம்ப்  அவர்கள் கூறியுள்ளார்.  காஷ்மீர் விவகாரம் ஒரு இருதரப்பு விவகாரம் என்று மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோதி அவர்கள் இந்தியாவும் பாகிஸ்தானும் இதனைப் பேசித் தீர்த்துக்கொள்ளும் என்றும் இதில் எந்த மூன்றாவது நாட்டையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். சர்வதேச சமூகத்தின் முன்,  இது, இந்தியாவின் சந்தேகமற்ற தெளிவான, உறுதியான நிலைப்பாடாக இருந்துள்ளது. இந்த இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு நேர்மறை விளைவைத் தரக்கூடியதாகவும் இரு தரப்பு உறவுகளில் கவனம் செலுத்தக்கூடிய துறை ரீதியான ஒத்துழைப்பை விரிவு படுத்தக்கூடியதாகவும் இருந்தது.

இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு, இந்திய-பாகிஸ்தான் மோதலின் தீவிரத்தைக் குறைக்க உதவும் என்று வெள்ளை மாளிகை அறிக்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஜி 7 உச்சி மாநாட்டின் மிகப்பெரிய பயனாக இது பார்க்கப்படுகிறது. இந்தியா- அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த, பேச்சுவார்த்தையின் அவசியத்தை அதிபர் டிரம்ப் அவர்கள் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.