கூட்டுறவில் புதுத்தடம் பதிக்கும் இந்தியாவும் ரஷ்யாவும்.

(ரஷ்யாவுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் மீனா சிங் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் இரண்டாவது பதவிக் காலத்தில் இந்திய, ரஷ்ய உறவுகள் புதிய உச்சத்தைத் தொடவிருக்கின்றன. ஐந்தாவது வருடாந்திர கிழக்குப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் தலைமை விருந்தாளியாக பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் பங்கேற்கிறார். தவிர, செப்டம்பர் மாதம் நான்கு முதல் ஆறாம் தேதி வரை, விளாடிவாஸ்டாக்கில் நடைபெறவுள்ள 20 ஆவது வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டிலும் அவர் கலந்து கொள்கிறார். இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நிலவி வரும் சிறப்புமிக்க, தனித்துவமான செயலுத்திக் கூட்டாளித்துவத்துக்கு புது மெருகேற்றி, புதிய பாதைகளிலும் உறவுகளைத் தொடர ஏதுவான வாய்ப்புக்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது பிரிவை இந்தியா ரத்து செய்ததற்கு ஆதரவு தெரிவித்த முன்னிலை நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என அறிவித்த ரஷ்யா, இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு அனைத்து சர்வதேச மேடைகளிலும் ஆதரவளித்துள்ளது.

முன்னதாக, மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள், நான்கு முதலமைச்சர்களுடன் விளாடிவாஸ்டாக் சென்று, ரஷ்யாவின் துணைப் பிரதமரும், அதிபரின் தூரக் கிழக்கு ஐக்கியப் பிராந்தியத்தின் பிரதிநிதியுமான யூரி டூட்னேவ் அவர்களை சந்தித்தார். தூரக் கிழக்கு ஐக்கியப் பிராந்தியங்களுடன், இந்திய மாநிலங்களின் கூட்டாளித்துவம் குறித்த திட்டம் பற்றி விவாதித்தார். தூரக் கிழக்கு ஐக்கியப் பிராந்தியங்களுடன் பொருளாதாரக் கூட்டுறவையும், முதலீடுகளையும் அதிகரிப்பதற்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது. இதன்மூலம், இந்திய, ரஷ்ய இருதரப்பு ஈடுபாடுகளை விரிவுபடுத்த இந்தியா விழைகிறது.

பாதுகாப்பு, விண்வெளி, எரியாற்றல், அணுசக்தி போன்ற துறைகளில், வழக்கமான கூட்டுறைவைத் தாண்டிய புதிய வழிகள் குறித்து இந்தியாவும் ரஷ்யாவும் ஆராய்ந்து வருகின்றன. ரஷ்யாவின் தூரக் கிழக்குப் பிராந்தியம், இந்தியாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகத் தொடர்ந்து விளங்குகிறது. இப்பகுதியுடனான இந்தியாவின் வர்த்தகம், 3 சத விகிதம் அதிகரித்து, 2018 ஆம் ஆண்டில் 79 கோடி டாலர் அளவை எட்டியது. ரஷ்யாவுடனான மொத்த வர்த்தகம், 1000 கோடி டாலர் அளவைத் தாண்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 3000 கோடி டாலர் அளவிற்கு எடுத்துச் செல்ல இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள், மாஸ்கோவில் ரஷ்ய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் நிகோலாய் பட்ருஷேவ் அவர்களை சந்தித்து, பயங்கரவாத எதிர்ப்பில் கூட்டுறவைத் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசித்தார். இறையாண்மை, எல்லை விவகாரம் மற்றும் மூன்றாவது நபர்களின் தலையீடுகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் இருதரப்பிலிருந்தும் முழு ஆதரவு உறுதியாக்கப்பட்டது. ராஸ்காஸ்மோஸ் அமைப்பின் இயக்குநர் டிமிட்ரி ரோகோஸின் அவர்களையும் தோவல் அவர்கள் சந்தித்து, விண்வெளித் துறையிலும், ககன்யான் திட்டத்திலும் விளங்கும் ஒத்துழைப்பு குறித்து மறு ஆய்வு செய்தார். 2022 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படவுள்ள இந்தியாவின் ஆள்தாங்கி ககன்யான் திட்டத்தில் பங்\கேற்கவுள்ள 12 விண்வெளி வீரர்களில், 4 வீரர்களுக்கு, யூரி கேகரின் காஸ்மோனாட் பயிற்சி மையத்தில், 15 மாதங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் அவர்களும் கடந்த வாரம் ரஷ்யாவுக்குப் பயணித்தார். அவர் பதவியேற்றபின் மேற்கொள்ளும் முதல் ரஷ்யப் பயணம் இதுவாகும். விளாடிவாஸ்டாக்கிற்கு பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் பயணத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து, அவர் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லேவ்ரோவ் அவர்களுடன் விவாதித்தார்.  ரஷ்யத் துணைப் பிரதமர் யூரி போரிஸோவ் அவர்களையும் ஜெய்ஷங்கர் அவர்கள் சந்தித்தார். இருதலைவர்களும் இருநாட்டு அரசுகளுக்கு இடையிலான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரக் கூட்டுறவுக் கமிஷனுக்குத் தலைமை தாங்கினர். இந்தோ பஸிஃபிக் பகுதிக்கான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து, வல்டாய் கருத்தரங்கில் அவர் அளவளாவினார்.

இப்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களைத் தாண்டிய கண்ணோட்டத்தில், இந்தியாவின் உயர்மட்டப் பயணங்களை நோக்க வேண்டும். நம்பிக்கைக்குரிய கூட்டாளியான ரஷ்யாவுடன், கூட்டுறவை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் முனைப்பையும் நினவுகூர வேண்டும்.

வேளாண்மை, வைரம் கட்டமைக்கும் தொழில்கள் நிறுவுதல், மரம் மற்றும் மரக்கூழ் கொள்முதலுக்கான வழிகள், சுற்றுலாத்துறையில் ஊக்கம், மீன் பிடிப்பு, சுரங்க வேலைகள் ஆகிய துறைகளில் புதிய பிராந்தியக் கூட்டுறவுக்கான வழிமுறைகள் ஆராயப்படும் என நம்பப்படுகிறது. முற்காலத்தில், எரியாற்றல், டிஜிட்டல் பொருளாதாரம், ஸ்டார்ட் அப் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய நான்கு துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இருநாடுகளும் தங்கள் உறவுகளைப் புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்ல விழைவதால், இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் புதிய வழித்தடங்களில் கூட்டுறவை விரிவுபடுத்துவதற்காக அடையாளம் காண்பதில் வெற்றி கண்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோதியும், அதிபர் புடின் அவர்களும் அவற்றை அங்கீகரித்து இருதரப்பு உறவுகளுக்குப் புதிய ஊக்கத்தை ஏற்படுத்தவுள்ளனர்.