வளர்ச்சியை ஊக்குவிக்க புதிய அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை

பேராசிரியர் முனைவர் லேகா சக்ரபோர்த்தி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்

 பொருளாதார வளர்ச்சியையும், வேலை வாய்ப்பையும் அதிகரிக்கவும், மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசானது,  பல துறைகளிலும், புதிய அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை அறிவித்துள்ளது.  கடனில்லாமல் முதலீட்டை அதிகரிக்க அன்னிய நேரடி முதலீடு ஒரு வழியாகும்.   அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை எளிதாக்கவும், தாராளமயமாக்கும் நோக்கத்துடனும் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில்  மாற்றங்களும் மற்றும் திருத்தங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.   இந்தியாவில் மேலும் எளிதாக வியாபாரம் செய்ய இவை வழி வகுக்கும்.

இந்தியாவின் வெளிப்புற துறையானது இரண்டு முக்கிய அன்னிய முதலீட்டு கூறுகளை கொண்டதாகும்.  ஒன்று அன்னிய நேரடி முதலீடு. மற்றொன்று அன்னிய ஃபோர்ட்ஃபோலியோ முதலீடு.  அன்னிய நேரடி முதலீடுகளில் உள்ள முதலீடானது,  ஃபோர்ட்ஃபோலியோ   முதலீட்டிலுள்ள வெளி நாட்டு நிதி வரத்தை விடவும் ஸ்திரமானதாகும்.  இதற்கு காரணம் என்னவென்றால்,  மேற்கத்திய நாடுகளின் வட்டி விகிதம் அதிகமாக இருந்தால்,  அன்னிய ஃபோர்ட்ஃபோலியோ  முதலீடானது ஸ்திரமாக இல்லாமல் நிலையற்றதாக இருக்க கூடும். அன்னிய  ஃபோர்ட்ஃபோலியோ முதலீட்டின் பெரும்பகுதி சுழலும் நிதியாக இருப்பதால்,  வட்டி விகித வேறுபாடுகள் அவற்றை பாதிக்கின்றன.  எனவே,  அன்னிய  நேரடி முதலீட்டு கொள்கைக்கு கொடுக்கப்படும்  முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அன்னிய முதலீட்டில்,  அன்னிய நேரடி முதலீட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் புதுப்பிக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல கொள்கை மாற்றம் ஆகும்.  நிலையான ஸ்திரமான முதலீட்டுக்கு இது வழி வகுக்கும், மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு கிரியா ஊக்கியாக செயல்பட்டு,  வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிதரும்.

தற்போதைய அறிவிப்பின்படி பல துறைகளிலும்,  ஊடகம், விமான போக்குவரத்து,  கட்டுமான மேம்பாடு, வர்த்தகம், மருந்து பொருட்கள்,  காப்பீடு,  சொத்து புனரமைப்பு  நிறுவனங்கள், ஓய்வூதியம் மற்றும் ஏனைய நிதி சேவைகள் போன்ற விவகாரங்களில் அரசு  100 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி தந்துள்ளது.  நிதி அமைச்சர் 2019-20க்கான மத்திய நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தபோது அறிவித்த திட்டங்களின் பின் தொடர்வாக இந்த அன்னிய நேரடி முதலீட்டு கொள்கை திருத்தங்கள், இந்தியாவை அன்னிய நேரடி முதலீட்டு இலக்காக மாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

அலுவலக மதிப்பீடுகளின்படி,  2014-15 லிருந்து 2018-19ஆம் ஆண்டிற்கான அன்னிய நேரடி முதலீட்டு மதிப்பு 286 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.  2009-10லிருந்து 2013-14 ஆம் ஆண்டு வரைக்குமான அன்னிய நேரடி முதலீட்டு மதிப்பு 189 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.  2018-19ற்கான தற்காலிக மதிப்பீடு 64.37 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதுவரை எந்த நிதி ஆண்டிலும் கிட்டாத தொகையாக இது விளங்குகிறது.  தற்போதைய அறிவிப்பில் நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளில் 100 சதவிகித அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இது நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு சலுகைகள்) சட்டம் 2015 மற்றும் திருத்தப்பட்ட சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு மற்றும் கட்டுப்பாடுகள்) சட்டம் 1957 விதிகளுக்குட்பட்டிருக்கும்.

இந்தியாவிலேயே செய்வோம் எனும் மேக் இன் இந்தியா முயற்சிகளையும், முன்னெடுப்புகளையும் வலுப்படுத்தும் நோக்கத்துடன்,  ஒப்பந்த உற்பத்தி பிரிவிலும்  இப்போது அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில்,  உள் நாட்டு விதிமுறைகளை தளர்த்தி அரசு சீர்திருத்தங்களை கொண்டு  வந்துள்ளது.  அதிக ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சமமான வாய்ப்பை இது வழங்கும்.   அதிக நெகிழ்வுதன்மையை இது வழங்குவதோடு, ஒற்றை பிராண்ட் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு வர்த்தகத்தை இது எளிதாக்கும். கடைகள் மூலமாக வியாபாரம் செய்யும் முன்னே இந்திய அரசானது ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.   தற்போதைய சந்தை நடைமுறைகளுக்கு ஏற்ப கொள்கைகளை இது சமனிலைப்படுத்தும். தளவாடங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், வாடிக்கையாளர் சேவை,  பயிற்சி மற்றும் தயாரிப்பு திறன் போன்ற நடவடிக்கைகளில் ஆன்லைன் வர்த்தகமானது வேலை வாய்ப்பை அதிகரிக்ககூடும்

டிஜிட்டல் ஊடகங்களில் செய்தி மற்றும் தற்போதைய நிகழ்வுகளை தரும் தொலைக்காட்சி ஊடகங்களில் அரசின் அனுமதியுடன், 49 சதவிகித அன்னிய நேரடி முதலீடு செய்ய முடியும்.   அச்சு ஊடகங்களில், தற்போதைய கொள்கை அறிவிப்பின் படி,  அரசின் அனுமதியோடு 26 சதவிகிதம் அன்னிய நேரடி முதலீடு செய்யமுடியும்.

அரசு அறிவித்திருக்கும் இந்த கொள்கை அறிவிப்பை அன்னிய நேரடி முதலீடு வரவுகள் பாதிக்கப்பட்டிருக்கும் தற்போதைய  மோசமான உலகளாவிய பொருளாதார சூழலின் பின்ணனியில் பொருத்தி பார்க்க வேண்டியது அவசியம்.     உலக முதலீட்டு அறிக்கை 2019 மதிப்பீடுகளானது உலகளாவிய அன்னிய நேரடி முதலீட்டு வரத்தானது 2018-ல் 13 சதவிகிதம் குறைந்திருப்பதாக கூறுகிறது.  சரியாக கூறவேண்டுமானால், 2017-ல் 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது,  2018-ல் 1.3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக குறைந்துவிட்டது.  புதிய அன்னிய நேரடி முதலீட்டு அறிவிப்பானது,  தற்போதிருக்கும் அன்னிய னேரடி முதலீட்டு கொள்கை ராஜ்யத்தை எளிமையாக்கி தாராளமயமாக்குவதன் மூலம் அன்னிய நேரடி முதலீட்டை இந்தியா ஈர்க்கமுடியும் என்ற நேர்மறை நம்பிக்கையின்  அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.