புதிய எல்லைகளைத் தொடும் இந்தியா-ரஷ்யா எரியாற்றல் கூட்டுறவு.

(மூத்த பொருளாதார ஆய்வாளர் சத்யஜித் மொஹந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

இந்தியா-ரஷ்யா இடையிலான நட்பானது, பலவிதமான துறைகளில் பரவியுள்ள ஆழ்ந்த கூட்டுறவின் ஒரு காவியமாகும். பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், விளாடிவோஸ்டாக்கில் நடக்கவிருக்கும் கிழக்குப் பொருளாதார மன்றக் கூட்டம் மற்றும் இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்ள ரஷ்யா செல்லவுள்ளார். அவரது இந்தப் பயணத்தை ஒட்டி, முன்னதாக, எரியாற்றல் துறைக் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தி, புதிய அம்சத்தைக் கூட்ட இரு நாடுகளும் முடிவெடுத்தன. கடந்த வாரம், இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள் ரஷ்யா சென்று வந்தார். அவரது இந்தப் பயணம், பிரதமர் மோதி மற்றும் அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையிலான உச்சிமாநாட்டிற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது. பனிப் போர் காலத்திலிருந்தே இந்தியா-ரஷ்யா இடையில் வழக்கமான மற்றும் அணுசக்திக் கூட்டுறவு இருந்து வந்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுறவை தற்போது ஒரு புதிய பாதையில் இட்டுச் செல்ல இரு நாடுகளும் முடிவெடுத்துள்ளன.

‘படர்ந்த அடித்தளம்’ என்ற சொற்றொடர், இந்தியா மற்றும் ரஷ்யாவின் தற்போதைய எரியாற்றல் கொள்கைகளை சரியாகப் பிரதிபலிக்கும் எனலாம். இரு நாடுகளும், எரியாற்றல் பாதுகாப்பில் ஏற்படக் கூடிய அபாயங்களை எதிர்கொள்ள, சந்தை இணைப்புகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி ஆராய்ந்து வருகின்றன. தனது எரியாற்றல் தேவைகளுக்காக, ஸ்திரத்தன்மையற்ற வளைகுடா பகுதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள இந்தியா விரும்புகிறது. அதே போல், ‘ஷேல் வாயு’ புரட்சிக்குப் பிறகு, பொருளாதாரத் தடைகள் மற்றும் இடையூறுகளை அடிக்கடி சந்தித்து வரும் ரஷ்யா, ‘பல்-துருவ முனைப்பு’ என்ற கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம், மாற்று எரியாற்றல் சந்தைக்காக ஆசியா பக்கம் தனது கவனத்தைத் திரும்பியுள்ளது. ஆக, திரு. பிரதான் அவர்களின் ரஷ்யப் பயணம், பரஸ்பர சார்பு நிலை மற்றும் எரியாற்றல் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த உதவியாக இருந்தது.

இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் பிரதான் அவர்கள், தன்னுடன், உயர்மட்ட மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் தொழில்துறைப் பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்றிருந்தார். ரஷ்ய அரசாங்க அதிகாரிகள் மற்றும் தனியார் துறைப் பிரதிநிதிகளுடன் பல சந்திப்புகள் நடத்தப்பட்டன. ரஷ்ய துணைப் பிரதமர் யூரி ட்ருட்னேவ் மற்றும் எரியாற்றல் துறை அமைச்சர் அலெக்சாண்டர் நோவக் ஆகியோருடன் நடந்த சந்திப்புகள், ஹைட்ரோகார்பன் துறையில் கூட்டுறவிற்கான ஒரு விரிவான ஆய்விற்கு வழி வகுத்தது. ரஷ்யாவின் கிழக்குக் கோடிப் பகுதிகளிலிருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுடன் உலோகவியல் நிலக்கரியைப் பெறவும், பரஸ்பர எரியாற்றல் துறை முதலீடுகளை அதிகப்படுத்தவும் இந்த சந்திப்புகள் அடித்தளம் அமைத்தன.

இந்திய அமைச்சரின் ரஷ்ய பயணத்தில் விளைவாக, குறிப்பிடத்தக்க  முக்கிய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஓ.பி.ஈ.சி-யின் உறுப்பினராக இருக்கும் ரஷ்யா, கச்சா எண்ணெய் வழங்கலுக்கு உத்திரவாதம் அளிப்பதிலும், விலை ஏற்ற இறக்கங்களைச் சரி செய்வதிலும் முக்கியப் பங்காற்றும் என்ற நம்பிக்கையை இந்தியா வெளிப்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளில் இருந்த நிலை, உற்பத்தி செய்யும் நாடுகள் மற்றும் நுகர்வு நாடுகள் என இரு தரப்பினருக்குமே பரஸ்பரம் பாதிப்பை ஏற்படுத்தும் மந்த நிலையாக இருந்தது. இந்தியா, ஐந்தில் நான்கு பங்கிற்கும் மேலான கச்சா எண்ணெயை ஓ.பி.ஈ.சி கூட்டமைப்பு நாடுகளிலிருந்து பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அந்நாடுகளில் உற்பத்திக் குறைப்பு மற்றும் புவி சார் அரசியலின் ஸ்திரமற்ற நிலை ஆகியவை ஏற்பட்டால், அது இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும்.

இந்நிலையில், இந்திய மற்றும் ரஷ்ய எரியாற்றல் அமைச்சர்கள், விளாடிவோஸ்டாக்கில் நடக்கவிருக்கும் மோதி-புடின் உச்சிமாநாட்டின்  போது கையெழுத்தாகவுள்ள விரிவான எரியாற்றல் கூட்டுறவிற்கான ஒப்பந்தத்திற்கு அடித்தளத்தை அமைத்துள்ளனர். எரியாற்றல் வளங்கள் அதிகமாகவுள்ள ரஷ்யாவின் கிழக்குக் கோடிப் பகுதிகளை, எரியாற்றல் காரிடார்கள் இந்தியாவுடன் இணைக்கும். இதன் விளைவாக, எரியாற்றல் துறை பணித்திட்டங்களில் பரஸ்பர முதலீடுகள் மேலும்  வளரும். எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் இந்தியா முதலீடு செய்யும் மிகப் பெரும் நாடாக, ரஷ்யா விளங்குகிறது. ஓ.என்.ஜி.சி, ஐ.ஓ.சி.எல் ஆகிய நிறுவனங்கள் அடங்கிய, இந்தியாவின் தனியார் துறை எண்ணெய் மற்றும் எரிவாயு கூட்டமைப்புகள், ரஷ்ய எரியாற்றல் நிறுவனங்கள் மற்றும் ஷாகாலின், வேங்கோர், யுர்யக் போன்ற பணித்திட்டங்களில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன.

ரஷ்யாவைப் பொறுத்த வரை, சைபீரியா போன்ற இடங்களில், சீனாவின் விரிந்து கொண்டிருக்கும் எரியாற்றல் முதலீட்டு முயற்சிகளை இது சமன்படுத்தும் வகையில் அமையும். 2018 ஆம் ஆண்டு, இந்தியாவின் முன்னணி எரிவாயு நிறுவனமான கெயில் இந்தியா, ரஷ்யாவின் கேஸ்ப்ரோம் குழுமத்துடன், நீண்ட காலத்திற்கான ஒரு எல்.என்.ஜி ஒப்பந்தத்தை, பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் உறுதிபடுத்தியது. ரோஸ்னெஃப்ட் போன்ற ரஷ்ய நிறுவனங்கள், நயாரா எனர்ஜி என தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ள எஸ்ஸார் ஆயில் போன்ற நிறுவனங்களில் அதிக அளவிலான பங்கு முதலீடுகளை வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நகரங்களில் எரிவாயு பகிர்ந்தளிக்கும் திட்டங்களிலும், எல்.என்.ஜி திட்டங்களிலும் முதலீடு செய்யவும் பல்வேறு ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் பங்கெடுக்கவும், நோவாடெக் போன்ற நிறுவனங்களுக்கு இந்தியா வாய்ப்பளித்தது.

பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் அதிபர் புடின் அவர்களுக்கு இடையிலான உச்சிமாநாட்டுக்கு முன்பாக, திரு. பிரதான் ரஷ்யா சென்றுவந்துள்ளது, எரியாற்றல் கூட்டுறவிற்கு இரு நாடுகளும் கொண்டுள்ள முனைப்பை எடுத்துக்காட்டுகிறது. விளாடிவோஸ்டாக்கில் நடக்கவிருக்கும் 20-ஆவது வருடாந்திர உச்சிமாநாட்டு சந்திப்பு, இருதரப்பு எரியாற்றல் தொடர்புகளில் முன்னுதாரணமான ஒரு மாற்றத்தை உருவாக்கும் என்று நம்பப்படுகின்றது. உலக எரியாற்றல் சூழலைப் பொறுத்த வரை, இதனால், நீண்டகாலத்திற்கான நல்ல விளைவுகள் ஏற்படும் என்று கூறினால் அது மிகையல்ல.