காஷ்மீர் மீதான பாகிஸ்தானின்  பயனற்ற பிதற்றல்.

(அரசியல் விமர்சகர் அசோக் ஹாண்டு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்  – ஆ. வெங்கடேசன்.)

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை  இந்தியா விலக்கிக் கொண்டதோடு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது முதல், பாகிஸ்தானின் தலைமை தனது கட்டமைப்பை  முற்றிலும் இழந்து தடுமாறுவது போல் காட்சியளிக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியா மீது, அணுசக்திப் போர் உள்ளிட்ட அச்சுறுத்தலையும், இந்தியாவிற்கு எதிரான அவதூறுகளையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அள்ளி வீசி வருகிறார். காஷ்மீர் மீது இந்தியா எடுத்துள்ள முடிவைத் தடுக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிடில், இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  ஷா மஹ்மூத்  குரேஷி  அவர்கள், பிரதமர் இம்ரான்கானின் கூற்றைப் பிரதிபலித்து வரும் போதிலும், காஷ்மீர் பிரச்சனையைத்  தீர்க்க போர் தொடுப்பது சரியான வழியல்ல என்று கூறியுள்ளார். வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர்  மூளும் என்று, பாகிஸ்தானின் ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அவர்கள் அதிகப்பிரசங்கித்தனமாக ஒரு பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார். இதுபோன்ற  தெளிவற்ற, பன்முக அறிக்கைகள்,  இந்திய அரசின் முடிவினால் பாகிஸ்தான்  எந்த அளவுக்கு விரக்தி அடைந்துள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாக்குகின்றன.

காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச சமுதாயத்திடம் எடுத்துச்செல்ல பலமுறை தீவிரமாக பாகிஸ்தான் முயற்சி  செய்த போதிலும், அதற்கு உலகளவில் எந்தவித ஆதரவும் கிடைக்காமல், பாகிஸ்தான் கடுமையான தோல்வியைக் கண்டுள்ளது. இந்திய அரசு, காஷ்மீரில் மேற்கொண்ட நடவடிக்கை முற்றிலும் அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்றும், அதில் எந்த ஒரு வெளிநாட்டுத் தலையீடும் தேவையில்லை என்றும், அமெரிக்கா, ரஷ்யா, ஃபிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பாகிஸ்தானிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளன. பாகிஸ்தானின் அனைத்துக் கால நட்பு நாடாகக் கருதப்படும் சீனாவும் கூட, இந்த விஷயத்தில் பாகிஸ்தானிற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை.  இருப்பினும், இம்ரான் கான் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, பாகிஸ்தானில் ஒரு மணி நேர செயல் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த செயல் நிறுத்த அறிவிப்பிற்கு பாகிஸ்தானியர்கள் ஆதரவளிக்காததால், அது படுதோல்வி அடைந்தது.

ஐநா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் ஏற்கனவே இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்ததை நினைவில் கொள்ளாமல், இந்த விஷயத்தை ஐக்கிய நாடுகள்  சபை மற்றும் சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாக இம்ரான் கான் அறிக்கை விடுத்துள்ளார்.

இந்த விரக்தியின்காரணமாக, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் விஷயத்தில், பாகிஸ்தான் தலைமைக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பலனும் இல்லை என்று இம்ரான்கான் ஒருபுறம் கூறி வரும் வேளையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத்  குரேஷி அவர்கள், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.  இதனால், இது குறித்த ஊடக செய்திகளை இம்ரான்கான் மறுக்க வேண்டியிருந்தது.

இந்தியாவுக்கும், இதர நாடுகளுக்கும் எதிராக பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாக பாகிஸ்தான் பயன்படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் எந்தவிதப் பேச்சுவார்த்தையும் துவங்கும் என்ற தனது நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில், ஜம்மு காஷ்மீர் பிரச்சனையைத் தவிர, மற்ற நிலுவையில் உள்ள பிரச்சனைகள் பற்றி, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த  இந்தியா தயாராக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள்  மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்லாமிய நாடுகள் உள்பட, இதர நாடுகளின் உதவியை பாகிஸ்தான் தொடர்ந்து நாடி வருகின்றது. காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுகிறது என்ற பெயரில், சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளின் ஆதரவைப் பெற பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. இருப்பினும், காஷ்மீர் மீது இந்தியா  நடவடிக்கை எடுத்த பின்பும் கூட, பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு மரியாதை செய்யும் முடிவை செல்வாக்கு பெற்ற சில இஸ்லாமிய நாடுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  ‘ஆர்டர் ஆஃப் சயீத் ‘  என்ற உயரிய விருதை சில நாட்கள் முன்பு தான் , ஐக்கிய அரபு அமீரகம், மோதி அவர்களுக்கு வழங்கிக் கௌரவித்தது. இதன்மூலம், இந்தியாவுடனான உறவுகளுக்கு அமீரகம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்பதையும், பாகிஸ்தான் தலைவர்களின் வாய்ச்சவடால்களைத் தாங்கள் பொருட்படுத்தவில்லை என்பதையும் அமீரகம் பாகிஸ்தானுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

காஷ்மீர் விஷயத்தில் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு மௌனம் சாதிப்பதன் மூலம், இஸ்லாமிய உம்மா எனப்படும் எதிர்ப்பு மாயை அறவே இல்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளதாக, பாகிஸ்தானின் மூத்த வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் மனித உரிமை அத்துமீறல் என பாகிஸ்தானால்  குற்றம் சாட்ட முடியாது. ஏனெனில், பலுசிஸ்தான், கைபர் – பக்டூங்வா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்  பகுதிகளில், காட்டுமிராண்டித்தனமான மனித உரிமை அத்துமீறல்களை பாகிஸ்தான் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. இந்தியாவிற்கு எதிரான வாய்ச்சவடால்களில் நேரத்தையும் ஆற்றலையும் விரயமாக்குவதை விடுத்து, உண்மையான எதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு, தனது போக்கினை சரிப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்க வேண்டும். அது மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வழிவகுக்கும். இருநாடுகளுக்கும் இடையே சிறந்த அண்டை நாட்டு  உறவுகளுக்கும் அது அடித்தளமாக அமையும்.