உறவுகளை வலுப்படுத்தும் மத்திய பாதுகாப்பு அமைச்சரின் ஜப்பான் பயணம்.

(மக்களவை ஆய்வாளர் பேராசிரியர் ராஜாராம் பாண்டா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத் குமார்.)

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், இம்மாதம் 2-3 தேதிகளில், ஜப்பானுக்கான தனது இருதரப்பு அரசியல் பயணத்தை மேற்கொண்டார். 5-6 ஆம் தேதிகளில் கொரியாவிற்கான பயணமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இண்டோ-பசிஃபிக் பகுதிகளில் உருவாகிவரும் புவிசார் செயலுத்தி சூழலை மனதில் கொண்டு பார்க்கையில், இந்த இரண்டு பயணங்களும் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. இண்டோ-பசிஃபிக் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட, பல இருதரப்பு மற்றும் பிராந்திய விஷயங்களைப் பற்றி, ஜப்பன் பாதுகாப்பு அமைச்சருடன் திரு. ராஜ்நாத் சிங் அவர்கள், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளையும் கருத்துப் பரிமாற்றங்களையும் மேற்கொண்டார்.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டகேஷி இவாயாவுடன் இணைந்து, ராஜ்நாத் சிங் அவர்கள், வருடாந்திர பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்குத் தலைமை வகித்தார். இந்தியா-ஜப்பான் சிறப்பு செயலுத்தி மற்றும் பாதுகாப்பு உடன்பாட்டை மேலும் வலுப்படுத்துவது இந்த பேச்சுவார்த்தைகளின் முக்கிய இலக்காக இருந்தது. ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அவர்களையும் திரு.சிங் சந்தித்தார். பாதுகாப்பு இணைப்புகளில் வளர்ந்து வரும் இணக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், முக்கிய ராணுவத் தளங்களை இணைந்து மேம்படுத்துவதற்கான முடிவை இரு நாடுகளும் ஏற்கனவே எடுத்துள்ளன. ராஜ்நாத் சிங் அவர்களின் பயணத்தின் போது, புதிய தொழில் முயற்சிகள் போன்ற குறிப்பிட்ட விஷயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

நீண்ட நாட்களாக, நிலம் நீர் என இரண்டிலும் செல்லக்கூடிய யு.எஸ்-2 விமானத்தை, இந்தியாவிற்கு ஜப்பான் வழங்குவது குறித்த விஷயம் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக திரு. சிங், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருடன் நடத்திய பேச்சுகளும் இந்த பயணத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். இருதரப்பு பாதுகாப்புக் கூட்டுறவின் தற்போதைய நிலை மற்றும் சாத்தியகூறுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டது. சீனா தனது ராணுவ இருப்பை அதிகரித்துக் கொண்டிருக்கும் இண்டோ-பசிஃபிக் பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா, வருடாந்திர மலபார் கடல்சார் பயிற்சிகளில் பங்கெடுக்கும் நாடுகளாகும். இந்த மூன்று நாடுகளின் கடற்படைகளுக்கு இடையில் இருக்கும் இயக்கத்தை மேம்படுத்துவது இந்த பயிற்சிகளின் நோக்கமாகும். இவ்வாண்டு, இந்த முத்தரப்பு கடல்சார் பயிற்சியான மலபார், செப்டம்பர் இறுதி முதல் அக்டோபர் துவக்க வாரங்கள் வரை நடக்கும். இந்தியா பாகிஸ்தான் இடையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இறுக்கங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்தப் பயணத்தை மேற்கொண்டதால், பாகிஸ்தான் காஷ்மீரில் நடத்தத் திட்டமிட்டுள்ள தீய திட்டங்கள் பற்றியும், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க எடுக்கும் முயற்சிகள் பற்றியும் அவர் ஜப்பானியத் தலைவர்களுக்கு எடுத்துரைத்தார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி இந்தியாவின் மத்திய அரசு முடிவெடுத்தது. இந்தியாவின் இந்த உள் விவகாரத்தை எதிர்த்த பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளித்தது. தனது நட்பு நாடுகளிடம், தனது நேர் நிலையை இந்தியா உணர்த்தி வருகிறது. தற்போது, ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரிடம் இந்த விவகாரம் பற்றி ராஜ்நாத் சிங் அவர்கள் பேசியதும் இதன் ஓர் அங்கமேயாகும்.

நரேந்திர மோதி தலைமையிலான அரசு, 370-ஆவது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து சீனா பிரச்சாரம் செய்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில், சர்ச்சைக்குரிய பகுதியான தென் சீனக் கடல் பகுதியில், பீஜிங்கின் அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர்த்து இந்தியா குரல் எழுப்பியது. இதற்கு சில நாட்களுக்குள்ளேயே இந்தியா-ஜப்பான் அறிக்கை வெளிவந்துள்ளது. ‘இண்டோ-பசிஃபிக் மற்றும் மொத்த உலகின் செழுமையை உறுதி செய்ய, இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல் பகுதிகளின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மிக அவசியம் என்பதை அமைச்சர்கள் அங்கீகரித்தனர்.. கொரிய தீபகற்பம் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் ஏற்படும் நிகழ்வுகள் உட்பட, இண்டோ-பசிஃபிக் பகுதியின் பாதுகாப்பு சூழல் குறித்த வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் நடத்தப்பட்டது.’ என இவாயாவுடனான இருதரப்பு சந்திப்பிற்குப் பிறகு அளிக்கப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஜப்பான் பிதமருடனான தனது சந்திப்பில், ராஜ்நாத் சிங் அவர்கள், ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒன்றிணைந்த பகுதி என்றும், 370-ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதால், இப்பகுதி மக்களுக்கு அதிக நன்மையே விளைந்திருக்கின்றது என்றும் கூறினார். பாகிஸ்தானுக்கு ஜம்மு காஷ்மீர் மீது எந்த உரிமையும் இல்லை என்பதையும் திரு.சிங், அபே அவர்களுக்கு விளக்கினார். இந்த மாத இறுதியில், ஐ.நா-வின் பொதுச் சபைக் கூட்டத்தின் போது, பிரதமர் மோதி அவர்களை, ஜப்பான் பிரதமர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படும் வேளையில், ராஜ்நாத் சிங் அவர்கள் அளித்திருக்கும் இந்த விளக்கம் போதுமானதாக இருக்கும். 2018 அக்டோபர் மாதம், மோதி அவர்களும் ஷின்ஸோ அபே அவர்களும் அளித்த தொலைநோக்கு அறிக்கை பற்றியும் கூட்டறிக்கை குறிப்பிட்டது. இந்த அறிக்கையில் இரு ஆசியத் தலைவர்களும், சுதந்திரமான அனைவருக்குமான இண்டோ-பசிஃபிக் பகுதியை நோக்கி உழைப்பதற்கான அயராத உறுதியை வெளிப்படுத்தியிருந்தனர். இவ்வாண்டு இறுதியில் ஜப்பான்-இந்தியா வருடாந்திர உச்சிமாநாடு நடக்கவுள்ளது. அதற்கு முன்னர், இண்டோ-பசிஃபிக் பகுதிகளில், அமைதி மற்றும் செழுமையை நிலைநாட்டுவதில் கூட்டுறவை துரிதப்படுத்தும் பொருட்டு, இந்தியாவும் ஜப்பானும், தங்களது வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இணைந்து பங்கு பெறும் முதல் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளன. மைனெக்ஸ் எனப்படும் ஜப்பான், இந்தியா அமெரிக்கா இடையிலான, முத்தரப்பு எதிர் நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை தொடர்வதற்கான உறுதியையும் இரு நாடுகளும் வெளிப்படுத்தியுள்ளன. இதற்கு முந்தைய மைனெக்ஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது.

மொத்தத்தில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களின் ஜப்பான் பயணம் இரு நாடுகளின் பாதுகாப்பு உடன்பாடுகளையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று கூறினால் அது மிகையல்ல.