இந்திய, ரஷ்ய செயலுத்திக் கூட்டாளித்துவம்.

(ரஷ்ய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.)

உலக அளவில் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், இந்தியாவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடைபெற்ற  20 ஆவது வருடாந்திர உச்சி மாநாடு, இருநாடுகளுக்கும் இடையே நிலவும் காலத்தை வென்ற, சிறப்பு வாய்ந்த செயலுத்திக் கூட்டாளித்துவத்தின் அடையாளமாக அமைந்துள்ளது.

விளாடிவாஸ்டாக் நகரில் நடைபெற்ற  ஐந்தாவது கிழக்கு பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்வதற்காக  ரஷ்யாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், ரஷ்ய அதிபர் புடின் அவர்களுடன் வருடாந்திர உச்சிமாநாட்டிலும் கலந்து கொண்டார்.

பொருளாதார மன்றத்தின் போது, இந்தியா தனது  தூரக் கிழக்கு செயல்பாட்டுக்  கொள்கையை வெளியிட்டது. வளங்கள் நிறைந்த அந்தப் பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்காக 100 கோடி டாலர் கடனுதவியை பிரதமர் அறிவித்தார். இந்தக் கொள்கையின் மூலம், அந்தப் பிராந்தியத்தில் மேலும் முதலீடுகளை அதிகரிக்கவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்தியாவுக்கு வழி கிடைக்கும். வைரம் ,நிலக்கரி மற்றும் தங்கச் சுரங்கம் போன்ற துறைகளில் இந்தியா முதலீடு செய்கிறது.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகள் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததும், பரஸ்பரம் பலனளிப்பதும், அனைத்துத் துறைகளிலுமான ஒத்துழைப்பை உள்ளடக்கியதாகவும் விளங்குகிறது. மேலும், ஒத்த நாகரிகம், நீண்டகால நட்பு, பரஸ்பரப் புரிதல், நம்பிக்கை, பொதுவான ஈடுபாடு, அடிப்படைப்  பொருளாதாரம் மற்றும் முன்னேற்றம் குறித்த விஷயங்களில் ஒத்த அணுகுமுறை ஆகியவை, உலக அளவிலும் பிராந்திய அளவிலும் இருநாடுகளுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ஷாங்காய் ஒத்துழைப்பு சபை  ஒரு முக்கிய அம்சமாகப் பேசப்பட்டது.

இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினையில், அண்டை நாடு ஏற்படுத்திய அமளி  உள்பட, இருநாடுகளும் எதிர்கொண்டு வரும் பல சவால்களுக்கு இடையே, இரு தலைவர்களும் இந்த வருடாந்தர உச்சிமாநாட்டின்போது, தலைசிறந்த தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தினர். 370 ஆவது சட்டப்பிரிவை இந்தியா நீக்கி இருப்பது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்று தெளிவுபடத் தெரிவித்த ரஷ்யா, ஐநா பாதுகாப்பு சபை உள்ளிட்ட சர்வதேச மேடைகளில் இந்தியாவிற்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

இந்த  20ஆவது வருடாந்தர உச்சிமாநாட்டில், வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி மற்றும் கடல்வழித் தொடர்பு போன்ற துறைகளில்  இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கத் தேவையான புதிய வழிகள் குறித்து ஆராயப்பட்டது.

பொருளாதாரத்தைப் பொருத்தவரை, 2018 ஆம் வருடத்தில், வருடாந்திர வர்த்தக அளவு 17 சதவிகிதம் உயர்ந்து 1100 கோடி டாலர் அளவை எட்டியிருப்பதற்கு அதிபர் புதின் அவர்கள் தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.  ’மேக் இன் இண்டியா’ திட்டத்தில், ரஷ்யாவின் பங்கை விரிவிபடுத்துவது குறித்தும், ரஷ்யாவில் இந்தியாவின் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

எரிசக்தித் துறையில், தற்போது நிலவும் பாராட்டத்தக்க ஈடுபாடுகளை அடுத்து கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறைகளில்  இருநாடுகளிலும் கூட்டாகச் செயல்பட உறுதி செய்யப்பட்டது. ஆர்டிக் பகுதியின் வடக்கு கடல் வழியாக, ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்குத் தங்குதடையின்றி எரிசக்தி  நீண்டகால அளவில் வழங்குவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. ஆர்டிக் கடற்பகுதியில் ரஷ்யாவுடனான ஒத்துழைப்பிற்கு இந்தியா ஆவலாக உள்ளது. 2019 – 24 ஆம் வருடத்திற்கான ஹைட்ரோ கார்பன் ஒத்துழைப்பு வரைவுத் திட்டத்திற்கு இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. அடுத்த ஐந்து வருடங்களில் எரிசக்தித்துறையில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒரு புதிய உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 20 வருடங்களில், இந்தியாவில் ரஷ்யா வடிவமைப்புடன் மேலும் 12 அணுமின் நிலையங்கள் கட்டப்படும்.

சர்வதேச வடக்கு  – தெற்கு போக்குவரத்து வழித்தடம்  பற்றியும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. போக்குவரத்தில்,  செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும்  மின்னணுத் தொழில்நுட்பம் போன்றவற்றை செயல்படுத்துவதிலும், மின்னணு ஆவணங்களை வழிமுறைப் படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சென்னைக்கும் விளாடிவாஸ்டாக்குக்கும் இடையே கடல் வழி தொடர்பு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது பொருளாதார, வர்த்தக முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு துறையில் ஒரு அதிரடி முன்னேற்றமாக, கூட்டு முயற்சிகள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்தின் கீழ், ரஷ்ய ராணுவ உபகரணங்களுக்கு  உதிரி  பாகங்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. பரஸ்பர  போக்குவரத்தில் ஆதரவு அளிக்கத் தேவையான கட்டமைப்பை உருவாக்க ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது.

ககன்யான் திட்டத்தில், இந்திய விண்வெளிவீரர்களுக்கு  ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.

கலாச்சாரம் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்பு  ஆகியவற்றின் அடையாளமாக, மகாத்மா காந்தியடிகளின் 150  ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நினைவாக ரஷ்யாவில் தபால்தலை வெளியிடப்பட்டது.

மொத்தத்தில், புதிய தூரக்  கிழக்கு செயல்பாட்டுத்  திட்டம்  தொடங்கப்பட்டது உள்பட, அனைத்து துறைகளிலும் இருதரப்பு உறவுகளை மேலெடுத்துச் செல்வதில், இந்த வருடாந்திர உச்சி மாநாடு மற்றும் ஐந்தாவது கிழக்கு பொருளாதார மன்றம் மிகப்பெரிய வெற்றியை நல்கியுள்ளன என்றால் அது மிகையல்ல.