இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை

 

ஆகாஷவாணியின் செய்தி ஆய்வாளர் திரு பதம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராம மூர்த்தி

இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அவர்களைச் சந்தித்தார். ஜப்பானுடனான இந்திய உறவுகள் மிகவும் வலுவானவை. மேலும் இரு நாட்டுப் பிரதமர்களும் சிறந்த நண்பர்களும் கூட. இந்தச் சந்திப்பை மிகவும் மகிழ்ச்சிகரமானது என்று வெளியுறவுத் துறை வர்ணித்துள்ளது.

டிசம்பரில் நடக்கவிருக்கும் வருடாந்தர உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரவிருக்கும் ஜப்பானியப் பிரதமரின் வருகை இந்தச் சந்திப்பில் சிறப்புக் கவனம் பெற்றது.

இந்த உச்சி மாநாட்டிற்கு முன்னர், இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் சந்திப்பு ஒன்றுக்கு இரு தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அண்மையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ் நாத் சிங் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து ஜப்பான் பிரதமர் கூறியுள்ளார்.

பியுனஸ் அயர்ஸ் மற்றும் ஒசாகாவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டின் போது நடந்த ஜப்பான் – அமெரிக்கா – இந்தியா முத்தரப்புச் சந்திப்புகள் குறித்து இரு தலைவர்களும் மிகவும் நேர்மறையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்த முத்தரப்புச் சந்திப்பு என்ற பாரம்பரியம் தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.

இந்தோ – பசிபிக் குறித்து இந்தியாவும் ஜப்பானும் ஒத்த கருத்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பிராந்தியத்தில் கட்டுப்பாடில்லா மக்கள் தொடர்புகளும் பொருளாதார ஒத்துழைப்புகளும் மேம்படுத்தப்பட்டு, பாதுகாப்பும் வளமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று  திரு அபே குறிப்பிட்டுள்ளார்.

ஆசியானின் பத்து நாடுகள் உட்பட 16 நாடுகளின் கூட்டமைப்பில் உருவாகவுள்ள (RCEP) பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இரு நாடுகளும் தத்தம்  கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளன. பிராந்திய வர்த்தக ஏற்பாடுகள் எதுவும் இறுதி செய்யப்படும் முன், பொருட்கள் மற்றும் சேவைகள் வர்த்தகம் குறித்த சில அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் மோதி வலியுறுத்தினார்.

மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதிர் மொஹமத் அவர்களுடன் பேச்சு நடத்திய  பிரதமர் மோதி அவர்கள், மஹாதிரின் தேர்தல் வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றும் மலேஷியாவுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் வளர்ந்து வருவதைக் குறிப்பிட்ட திரு மஹாதிர், இது சமநிலை வர்த்தகமாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்தியாவிலிருந்து  இறக்குமதியை மலேசியா அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு சிறந்த நிர்வாகம் மற்றும் சமூக, பொருளாதார நீதி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் என்று மலேஷியாவுக்கு விளக்கப்பட்டது. வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்தும் உலக அளவில் அதனை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பயங்கரவாதம் ஒரு சர்வதேச பிரச்சனை என்றும் மலேஷியா எல்லா வகையிலும் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்றும் மஹாதிர் வலியுறுத்தினார்.

மங்கோலியாவின் அதிபர் கல்ட்மாகின் பட்டுல்கா அவர்களையும் பாரதப் பிரதமர் சந்தித்தார். இம்மாத இறுதியில் அரசு முறைப் பயணமாக அவர் இந்தியா வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. மங்கோலியாவில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இந்தியாவின் உதவியுடன் அமைய  இருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கலாச்சாரம், ஆன்மீகம் ஆகியவற்றில் இரு நாட்டு மக்களுக்கு இடையில் உள்ள தொடர்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தனது இந்தியப் பயணத்தின் போது தில்லி தவிர, புத்த கயா மற்றும் பெங்களூரு செல்லவும் தாம் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். உல்லான்பட்டாரில் பனிப்புகைத் தாக்கத்தை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. குளிர் காலங்களில் பயிர்க்குப்பைகளை எரிப்பதன் மூலம் உருவாகும் புகையைக் கையாள்வதில்  இந்தியா அடைந்துள்ள வெற்றி குறித்தும் அதிபர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்புகளை இந்தியா மிகவும் பயனுள்ளவை என்றும் நமது கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையை மேலும் வலுப்படுத்தும் என்றும் கூறினால் அது மிகையாகாது.