அணு ஒப்பந்த உறுதிப்படுகளிலிருந்து பின்வாங்கியது ஈரான்

டாக்டர். ஆசிஃப் ஷுஜா, ஈரானுக்கான செயலுத்தி ஆய்வாளர்

தமிழில், ஸ்ரீப்ரியா சம்பத்குமார்

 

2015 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், உலக வல்லரசு நாடுகளிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட அணு ஒப்பந்தத்தின் கீழ், தனக்கு இருந்த உறுதிப்பாடுகளிலிருந்து விலகிக்கொள்வதாக ஈரான் அறிவித்துள்ளது. அணு ஒப்பந்தத்தின் உறுதிப்பாடுகளைக் கடைபிடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டதால், அதைத் தான் மட்டும் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என, ஈரான் இதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளது. அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஒருதலைபட்சமாக விலகியதிலிருந்து, தங்களுக்குள்ளான புரிதலைக் கொண்டு, இந்த ஒப்பந்தத்தைக் காப்பாற்ற, ஈரானும் ஐரோப்பிய ஒன்றியமும் கடினமாக முயற்சி செய்தன. இந்த அணு ஒப்பந்தத்தின் கீழ், ஈரானுக்கு உறுதி அளிக்கபட்டிருந்த பொருளாதார உறுதிகள் அனைத்தும் நிறைவேற்றபடுவதை ஐரோப்பிய ஒன்றியம் உறுதி செய்யும் என்றும், இதனால், தனது அணுத் திட்டங்களின் அளவுகளை கட்டுபடுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டையும் ஈரான் தொடரலாம் என்றும், ஈரான், ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புரிதல் இருந்தது.

ஈரானின் இந்த முடிவிற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை, ஈரான் அணு நிறுவனத்தின் இயக்குனர், அலி அக்பர் சலேஹி அவர்கள், மேலும் விவரித்தார். அவரது கூற்றின்படி, ஐரோப்பிய ஒன்றியம், இந்த ஒப்பந்தத்தில் தனது உறுதிப்பாட்டைக் கடைப்பிடிக்காததால், தனது உறுதிப்பாடுகளை சிறிது சிறிதாக குறைக்கும் உரிமை ஈரானுக்கு உள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளால் தடைசெய்யப்பட்டிருந்த வெளிநாட்டு வர்த்தகத்திற்கான தனது அணுகலை மீட்க ஐரோபிய நாடுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அதனால், இந்த ஒப்பந்தத்தில் தனது உறுதிப்பாடுகளை திரும்பிப் பெற ஈரான் முடிவெடுத்தது எனவும் அவர் தெரிவித்தார்.

தனது அணு ஆய்வு மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளும் உறுதிப்பாடுகளிலிருந்து மேலும் விலகிக்கொள்வதற்கான முடிவைத் தெரிவித்து, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கைத் தலைவருக்கு, ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஸாரிஃப் அவர்கள், கடிதம் எழுதியதாக ஒரு ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவின் படி, யுரேனியமின் செறிவூட்டலை விரைவுப்படுத்த ஈரான் மையநீக்கத்தை வளர்க்கத் துவங்கும். எனினும், இந்த அனைத்து நடவடிக்கைகளும் ‘அமைதியான’ முறைகளிலும், ஐ.ஏ.இ.ஏ கண்காணிப்பு விதிகளுக்குள்ளும் இருக்கும். ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுதிகளை நிறைவேற்றினால், ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றவும் சாத்தியம் உள்ளது.

எனினும், ஈரானின் சமீபத்திய முடிவால், அணு ஒப்பந்தம் முடிந்துவிட்டது என எண்ணுதல் ஆகாது. மாறாக, இது, ஈரான் தனது பொருளாதார நன்மைகளை விரைவில் பெற, ஐரோப்பிய ஒன்றியத்தை வற்புறுத்தும் விதமாகவும் இருக்கலாம். பிரான்சு தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியம், அணு ஒப்பந்தத்தைக் காப்பாற்ற தன்னாலான முயற்சிகளை செய்து வருகிறது. கடந்த மாதம் நடந்த ஜி-7 நாடுகளின் சந்திப்பிலும் இது தெளிவாகத் தெரிந்தது. பிரன்ஸ் அதிபர் எமானுவெல் மாக்ரோனின் அழைப்பின் பேரில், ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவத் ஸாரிஃப் அவர்கள் பியாரிட்சுக்கு வந்தார். இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பும் இருந்தார். எனினும், பிரன்ஸ் அதிபரின் இந்த முயற்சியால், அமெரிக்கா ஈரான் இடையில் பேச்சுவார்த்தையை ஏற்படுத்த முடியவில்லை என்ற போதிலும், இந்த ஒப்பந்தத்தை நிலைத்திருக்கச் செய்ய, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதை இது காட்டுகின்றது.

நாளுக்கு நாள், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழலில், பாரசீக வளைகுடாவில் டேங்கர்கள் பிடிபட்ட சம்பவம், நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பிரச்சனையை சரி செய்ய முயல்வது தற்போது மிக அவசியமாகும். ஈரான் மீது அதிகப்படியான இறுக்கம் என்ற தனது கொள்கையை அமெரிக்கா இதுவரை கையாண்டு வருகிறது. இந்தக் கொள்கையின் கீழ்தான், ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளின் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா கூறியது. எனினும், இந்த கொள்கை, ஈரான் அணு ஒப்பந்தத்தின் அடிப்படை சித்தாந்தத்தையே ஒடுக்குகிறது. ஈரான் தனது அணு நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டால், அதற்கு பதிலாக பொருளாதார நன்மைகள் அந்நாட்டிற்குக் கிடைக்கும் என்ற உறுதி ஒப்பந்தத்தில் இருந்தது. ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டு, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிப்பதற்கான அமெரிக்காவின் முடிவால்தான் இந்தக் குழப்பங்கள் எழும்பியுள்ளன. இந்தக் குழப்பத்தைத் தான் ஐரோபிய ஒன்றியம் தீர்க்க முயன்று வருகிறது.

ஈரான், எரியாற்றல் வளம் மிகுந்த முக்கிய நாடாக இருப்பதால், இந்த முன்னேற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவிலிருந்து சற்று தூரத்தில் இருக்கும் அண்டை நாடுகளில் ஈரானும் ஒன்று. ஆகையால் இந்தப் பகுதிகளின் அமைதியும் ஸ்திரத்தன்மையும் இந்தியாவிற்கு மிக முக்கியம். விரைவிலேயே, உலக நாடுகள், ஈரானிய அணுப் பிரச்சனையயை சுமுகமான முறையில் தீர்க்க ஒன்றுகூடும் என எதிர்பார்க்கபடுகின்றது.