விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பின் ஏழாவது சந்திப்பு.

(பொருளாதாரப் பத்திரிக்கையாளர் மனோஹர் மனோஜ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.)

விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பான ஆர்.சி.ஈ.பி-யின் சந்திப்பு சமீபத்தில் பேங்காக்கில் நடைபெற்றது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர் மற்றும் ஜப்பான்-தென் கொரியா இடையிலான பொருளாதார முரண்பாடுகள் ஆகியவற்றிற்கு மத்தியில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த மாதம் நடந்த ஆர்.சி.ஈ.பி சந்திப்பிற்கு இந்தியா சார்பில் யாரும் செல்லவில்லை. தற்போது நடந்த சந்திப்பில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அவர்கள் கலந்து கொண்டார். இந்த அமைப்பில் உள்ள மற்ற உறுப்பு நாடுகளுடன், பலதரப்பு மற்றும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை கோயல் அவர்கள் மேற்கொண்டார். உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் துடிப்புமிக்க பங்களிப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த சந்திப்பில் இந்தியா பங்கு கொண்டுள்ளது.

தென்-கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானின் பத்து உறுப்பு நாடுகளுடன், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஆர்.சி.ஈ.பி-யில் அங்கம் வகிக்கின்றன. ஆசியான் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் தடையற்ற வர்த்தகத்திற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்க, இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இந்த ஏழாவது அமைச்சர்கள் மட்ட சந்திப்பிற்குப் பிறகு, 16 உறுப்பு நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், மொத்த பிராந்தியத்திற்கும் தடையற்ற வர்த்தகத்தை உருவாக்குவது வலியுறுத்தப்பட்டது. தாய்லாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வர்த்தக அமைச்சரான ஜுரியன் லக்சனாவிஸிட் அவர்கள், தடையற்ற வர்த்தகம் தொடர்பான இறுதி ஒப்பந்தம் அடுத்த ஆண்டிற்குள் நிறைவடைந்து விடும் எனக் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடுத்தபடியாக, ஆசியான் அமைப்பு உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரக் குழுமமாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.  சார்க்கின் திடமற்ற விளைவுகளுக்குப் பிறகு, குறிப்பாகப் பொருளாதாரத்தில் அதன் தடுமாற்றத்திற்குப் பிறகு, இந்தியா ஆசியானுடன் தனது ஈடுபாட்டையும் கூட்டுறவையும் அதிகரித்துள்ளது. இன்று, அமெரிக்காவைத் தொடர்ந்து, ஆசியான் உறுப்பு நாடுகள், இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் கூட்டாளிகளாக விளங்குகின்றன. 2005-06 ஆம் ஆண்டுகளில், 2100 கோடி டாலராக இருந்த ஆசியானுடனான இருதரப்பு வர்த்தகம், மும்மடங்கு அதிகரித்து, 2018-19 ஆம் ஆண்டு, 9670 கோடி டாலராக உயர்ந்தது. இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில், 11.4 சதவிகிதப் பங்குடன், 2018-19 ஆம் ஆண்டுகளில், இந்தியாவின் முன்னணி வர்த்தகக் கூட்டாளிகளாக ஆசியான் நாடுகள் உயர்ந்துள்ளன. 2018 ஆம் ஆண்டு, ஆசியான் அமைப்பின் ஆறாவது பெரிய வர்த்தகக் கூடாளியாக இந்தியா இருந்தது.

இந்தச் சூழலில், தடையற்ற வர்த்தகத்திற்கான ஒரு ஒப்பந்தம் நிறைவேறுமானால், இந்தியாவிற்கு, சரக்குகள், சேவைகள், முதலீடுகள், அறிவுசார் சொத்து மற்றும் அரசாங்கக் கொள்முதல் போன்ற பல்வேறு துறைகளில், பல வாய்ப்புகள் கிடைக்கும். ஆசியானுடனான இணைப்பு, இந்தியாவின் ‘கிழக்கை நோக்கிச் செயல்படும்’ கொள்கையின் மையப்பொருளாக உள்ளது. மேலும், பரந்து விரிந்த இண்டோ-பசிஃபிக் பகுதிக்கான இந்தியாவின் நுழைவாயிலாகவும் ஆசியான் உள்ளது. நெருங்கிய கூட்டாளிகள் என்ற வகையில், கூட்டுறவு மற்றும் வணிகத்திற்கான கண்ணோட்டத்தில், இரு தரப்பிற்கும் இடையில் இணக்கம் உள்ளது. இப்பகுதிகளில் பல நாடுகளுடன் இந்தியா வலுவான வணிகத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. எனினும், மலேசியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுடன் உள்ள வணிகப் பற்றாக்குறை சரிசெய்யப்பட வேண்டும்.

2018 ஏப்ரல் முதல் 2019 மார்ச் வரையிலான காலத்தில், ஆசியான் நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த அந்நிய நேரடி முதலீட்டின் அளவு சுமார் 1641 கோடி டாலராக இருந்தது. இது இந்தியாவிற்குள் வந்த மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 37 சதவிகிதமாகும். இந்தியாவிலிருந்து ஆசியான் நாடுகளுக்குச் சென்ற அந்நிய நேரடி முதலீட்டின் அளவு 2018 ஆம் ஆண்டில், 170 கோடி டாலராக இருந்தது. இதன் மூலம், இந்தியா ஆசியானின் ஆறாவது மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீட்டாளராகியுள்ளது.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அவர்கள், ஆர்.சி.ஈ.பி சந்திப்புகளின் போது, ஜப்பான், சிங்கப்பூர், சீனா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, பிலிபைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாட்டு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இந்தியா-ஆசியான் இடையில் எஃப்.டி.ஏ எனப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், பாமாயில், ரப்பர், காஃபி,, தேயிலை மற்றும் மிளகு ஆகிய சில பொருட்களை மையமாகக் கொண்டே வர்த்தகம் நடந்து வந்தது. எஃப்.டி.ஏ-வின் விளைவால், இந்தப் பொருட்கள் ஆசியான் நாடுகளிலிருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு, அதன் காரணமாக, இவை சார்ந்த இந்திய தொழில்துறைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என இந்தியாவில் ஒரு அச்சம் நிலவி வந்தது. இந்தப் பொருட்கள், வரையறுக்கப்பட்ட கட்டண குறைப்புடைய பொருட்கள் அல்லது  விலக்குப் பட்டியலில் உள்ள பொருட்கள் என, சிறப்புப் பொருட்களாக அறிவிக்கப்பட்டிருந்தன. இதன் மூலம், இவை ஒப்பந்தத்தின் வரம்பிற்கு அப்பால் வைக்கப்பட்டன. இந்த எஃப்.டி.ஏ-விற்கான பொருளாதாரக் காரணங்கள் மறுபரிசீலனைக்கு வந்துள்ளன.

எனினும், ஆசியான் நாடுகளுடனான தனது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கான இந்தியாவின் முடிவால், ஆர்.சி.ஈ.பி பேச்சுவார்த்தைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த பேச்சுவார்த்தைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில், ஆர்.சி.ஈ.பி-ஐப் பொறுத்த வரை, இறுதி ஒப்பந்தம் முடிவாகலாம். இந்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் அவர்கள், இந்தியாவிற்கு, உலக பொருளாதாரத்தில் மிக முக்கிய இடம் உள்ளது என்றும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் நிலையான வளர்ச்சியை நிலைத்திருக்கச் செய்ய தேவையான திட்டங்களை இந்தியா தொடர்ந்து முன்னிருத்தும் என்றும் கூறியுள்ளார்.