புறக்கணிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான்


தி ஹிந்து நாளிதழின் சிறப்பு நிருபர் கல்லோல் பட்டாச்சார்ஜீ அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்

அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தை என்ற கடினமான பணிக்கு தாலிபான் அமைப்பு, 14 உறுப்பினர் அமைதிப் பேச்சு வார்த்தைக் குழு ஒன்றை அமைத்திருந்தது. ஆஃப்கானிஸ்தான் அரசுக்கும் தாலிபான்களுக்குமான போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே இந்தப் பேச்சு வார்த்தைகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குரூரமான தாக்குதல் முறைகளைக் கடைபிடித்து, பொதுமக்களைக் குறிவைக்கும் தாலிபான்களுடன் பேச்சு வார்த்தை என்பது எளிதான காரியமாக இருக்கவில்லை.

தாலிபான்கள் உட்பட, காபூலின் முக்கிய அரசியல் நீரோட்டத்தின் அனைத்துப்பிரிவினரின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு பரந்த அரசியல் அமைப்பை உருவாக்குவது இந்தப்பேச்சு வார்த்தையின் நோக்கமாக இருந்தது. 1990களின் இறுதியில் இருந்தது போல சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் கூடாரமாக ஆஃப்கானிஸ்தான் மீண்டும் மாறாமல் இருப்பதும் தாலிபான் அமைப்பின் பயங்கரவாத எதிர்ப்புக்கான உத்தரவாதமும்  முக்கியமான அம்சங்களாகக் கருதப்பட்டன.  ஆஃப்கன் பகுதியிலிருந்து அமெரிக்கா தனது துருப்புக்களை விலக்கிக் கொண்ட பிறகும் உளவுத் துறை உட்பட்ட ராஜ்ஜியப்பிரதிநிதிக்குழு தொடர்ந்து அங்கு முகாமிட அமெரிக்கா விரும்பிய நிலையில், தாலிபான் இதை ஏற்கவில்லை. இந்த நிலையில்,  காபூலில் உள்ள ஒரு ராணுவப் பயிற்சி மையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலுக்குத் தாலிபான் பொறுப்பேற்ற நிலையில், தவறான நேரத்தில் நடத்தப்பட்ட இந்த யோசனையற்ற தாக்குதலைக் கண்டித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் இந்தப் பேச்சு வார்த்தைகளையும் அமெரிக்கா முறித்துக் கொள்வதாக அறிவித்தார். இருபது ஆண்டுகள்  போர்ச்சுழலுக்குப்பின் உருவாகியிருந்த இந்த அரசியல்  பேச்சுவார்த்தை அமைதிக்கான நம்பிக்கையை விதைத்திருந்தது.  அரசுடனே மூர்க்கத்தனமான போரில் ஈடுபடும் ஒரு அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்துவதென்பது அத்தனை எளிதல்ல என்று தற்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன.

ஆனால் இன்னமும் தாலிபான், தான் பேச்சு வார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கிறது. இதற்கிடையில், தாலிபான் அமைப்புக்கு ஆதரவாகப் பின்னிருந்து இயக்குவது பாகிஸ்தான் தான் என்றும் அமெரிக்க உளவுத் துறை ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேறி விட்டால், பாகிஸ்தான் தெற்காசியாவின் பிற பகுதிகளிலும் பயங்கரவாதப் பயிற்சிகளையும் தாக்குதல்களையும் அரங்கேற்ற வாய்ப்பாக அமையும் என்றும் அமெரிக்காவின் மூத்த ராஜ்ஜிய பிரதிநிதிகள் அஞ்சுகின்றனர். அண்மைக் காலங்களில் தாலிபான் அமைப்பு  அதிக சுதந்தரமாக, பிராந்தியத்தின் மற்ற நாடுகளுடன் ஈட்டுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பு சீனா, ரஷ்யா, ஈரான், சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகளுடன் தொடர்பில் இருக்கும் நேரத்தில் இந்தியாவுடன் பேச்சு வார்த்த நடத்தத் தவறிவிட்டது.  ஆனால், ஆகஸ்ட் மாதத்தில் வந்த ஒரு தாலிபான் அறிக்கை அதற்கும் விருப்பம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தை தடம் புரண்டுள்ள நிலையில் மற்ற நாடுகளுடனான பேச்சு வார்த்தைகள் தொடரவோ வெற்றியடையவோ வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்.  எந்தக் காலத்திலும் எங்கும் ஒரு பயங்கரவாத அமைப்புடன் பேச்சு வார்த்த நடத்தத் தயாராக இல்லை என்பதை இந்தியா  தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி ஜல்மே கலீல்ஜத் அவர்களுக்கும் தாலிபானுக்குமான பேச்சு வார்த்தை முறிந்தாலும், இரு தரப்பும் ஆஃப்கன் வன்முறைக்கு ஒரு சுமுகத் தீர்வு காண விருப்பம் தெரிவித்துள்ளதால், நார்வே, ஜெர்மனி மற்றும் கத்தார் நாடுகள் இந்தப் பேச்சு வார்த்தைகளைத் தொடரச் செய்ய முயன்று வருவதாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன. தற்போது, இந்த முடக்கத்தால்  ஏற்பட்டுள்ள  நன்மை என்னவென்றால், ஆஃப்கன் தேர்தல் நடைமுறை புத்துயிர் பெற்று,இம்மாத இறுதிக்குள் முடிவுக்கு வரவுள்ளது.

தேர்தலைச் சட்டவிரோதமாகக் கருதும் தாலிபான் அதை எதிர்த்துவரும் சூழலில் வன்முறைச் சம்பவங்களுக்கான வாய்ப்புகளும் உள்ளன. இச்சூழலில், நாற்பது ஆண்டுகளாக அந்நிய ஆக்கிரமிப்பையும் உள்நாட்டுப் போரையும் எதிர்கொண்டுவரும் ஆஃப்கானிஸ்தானின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தப் பேச்சு வார்த்தை தொடராத சூழலில், தாலிபான் தொடர்ந்து அமெரிக்கப் படைகளையும் ஆஃப்கன் அரசையும் எதிர்த்துவரும் நிலையே தொடரும் வாய்ப்புள்ளது.

சோர்ந்து போயுள்ள அமெரிக்கப்படைகள், அமெரிக்கா எதிர்கொள்ளவிருக்கும் அதிபர் தேர்தல் இவற்றின் பின்னணியில், அதிபர்டிரம்ப்புக்கும்  அதிக வாய்ப்புகள் ஏற்படுத்தும்  எளிய சூழல் இல்லை. தேர்தலுக்குப் பிறகு பேச்சு வார்த்தை தொடர வாய்ப்புள்ளதாக ஆஃப்கனின் அமைதி விரும்பிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.ஆசியாவின் இதயம் என்று அறியப்படும் ஆஃப்கானிஸ்தான் தற்போது புறக்கணிப்பைச் சந்தித்து வருகிறது.  பேச்சு வார்த்தை தொடர அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு தாலிபான் ஒப்புக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.  அவ்வாறு நிகழ்ந்தால், அமைதிப்பாதை புலப்பட வாய்ப்புள்ளது.