அம்பலமாகும்  பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாடு.  

(செய்தி நிபுணர் கௌசிக் ராய் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரையின் தமிழாக்கம் இராஜ்குமார் பாலா.)

இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீர் மீதான, தனது விட்டுக் கொடுக்காத நிலைப்பாடு காரணமாக, பாகிஸ்தான் ஒரு அமைதியற்ற சூழலில் உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை திரும்பப் பெற்றது இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என்று வர்ணித்து அனைத்து உலக நாடுகளும் ஒவ்வொன்றாகப் பாகிஸ்தானை இடித்துரைத்தன.  தனக்கு ஆதரவு கோரி பாகிஸ்தான் ஒவ்வொரு இடமாக  அலைந்து வருகிறது. ஆனாலும் அதன் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கிடைப்பதாக இல்லை.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் திரு இம்ரான் கான், இந்தியாவுக்கு எதிராக வழக்கமானதொரு போர் ஏற்பட்டால் அதில் பாகிஸ்தான் வெற்றி பெற இயலாது என்று ஒப்புக்கொண்டார். அணுஆயுத அச்சுறுத்தலை வெளிப்படுத்திய அவர், காஷ்மீர் மீது உலக நாடுகளின் கவனம் தேவை என்றார். இந்தியா சேமித்து வைத்துள்ள அணு ஆயுதங்கள் பற்றி உலக நாடுகள் கவனம் செலுத்தத் தவறினால் மிகமோசமான பின்விளைவுகளை அவை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார். பாகிஸ்தான் போரை விரும்பவில்லை; ஆனால் அதே வேளையில் அதன் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் சவால்கள் விடப்பட்டால் அதனை அந்நாடு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்றும் அவர்  தெரிவித்தார்.

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதி உதவி அளிப்பது பற்றிய விஷயம் FATF எனற நிதிச் செயல்பாடு குறித்த பன்னாட்டு அலுவல்குழு  முன் அடுத்த மாதம் விசாரணைக்கு வரும்போது, பாகிஸ்தான் சோதனையான நிலைமைகளைச் சந்திக்க நேரிடும் என்று இம்ரான் கான் ஒப்புக்கொண்டார். பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சீர்குலைக்க உலக நாடுகள் சதித்திட்டம் தீட்டிவருவதாகவும் அவர் அந்தப் பேட்டியில் மேலும் தெரிவித்தார்.

இது உண்மைக்குப் புறம்பானது. பதான்கோட்  விமானத் தளம் மீது 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த  தாக்குதலுக்குப் பிறகு, ”ஒரு பக்கம் தீவிரவாத ஆதரவு நிலைப்பாடு, மறுபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை என இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க சாத்தியமில்லை” என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. நிதர்சனத்தில் அமைதி வேண்டி பல நேரங்களில்  நேசக்கரம் நீட்ட இந்தியா முன்வந்துள்ளது. இந்தியா நட்புக் கரம் நீட்டிய போதெல்லாம் பாகிஸ்தானிடம் இருந்து தடைகளேயே அது சந்தித்தது.  பாகிஸ்தானின் அர்த்தமற்ற வெற்றுப் பேச்சை உலகமே  இன்று கவனித்து வருகிறது.

காஷ்மீர் குறித்த விஷயத்தில் பாகிஸ்தான் தீட்டிய சதித்திட்டங்களால் அது தனித்து விடப்பட்டுள்ளது. இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீரில் நிழல் யுத்தத்தை நடத்த சுமார் 30 ஆண்டுகாலமாக பல்வேறு தீவிரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் உதவி, நிதிஆதரவு, மற்றும் பயிற்சியை வழங்கியிருக்கிறது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் ஆயிரக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் தங்களுடைய உயிர்களை இழந்தனர். இன்று பாகிஸ்தான் தனது தோல்வி முயற்சிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் தமது பேட்டியை முடித்த கையோடு, சீனாவின் சின்சியாங் மாகாணத்தில் வசிக்கும் உய்குர் முஸ்லிம்கள் குறித்த கேள்விக்கணைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. பாகிஸ்தான் பிரதமரின் இரட்டை நிலைப்பாட்டிற்காக உலக உய்குர் காங்கிரஸ் என்ற அமைப்பு அவரை கடுமையாகச் சாடியது. சீனாவில்  உய்குர் முஸ்லிகள் ஒடுக்கப்பட்டு வருவது குறித்த விஷயத்தில் பாகிஸ்தான் கண்டும் காணாமல் இருப்பது குறித்து அந்த அமைப்பு குற்றம் சாட்டியது. உய்குர் முஸ்லிம்கள் குறித்த சீனாவின் கொள்கையை ஆதரிக்கும் நோக்கில் பாகிஸ்தான் அமைதி காப்பது அவமானம் தரும் ஒரு செயலாகும்.

இரண்டு மாதங்களுக்கு முன், உய்குர் முஸ்லிம்கள் விஷயம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது, அது பற்றித் தமக்கு ஏதும் தெரியாது, இந்த விஷயத்தைத் தாம் அறியவில்லை என்று மழுப்பலாக அவர் பதில் கூறியிருந்தார். சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக சீன அரசு என்ன செய்கிறது என்பதை பாகிஸ்தான் அரசு நன்கு அறிந்துள்ள போதிலும், அது பற்றி பாகிஸ்தான் பிரதமர் பேச விரும்பவில்லை என்று உலக உய்குர் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் டோல்குன் ஐசா ஜெனீவாவில் தெரிவித்தார்.

மனித உரிமைகளை மிகப்பெரிய அளவில் மீறிய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இந்த உண்மை நிலையை சீனா உலக அளவில் மறைத்து வருகிறது என்றும்  திரு ஐசா மேலும் தெரிவித்தார்.

உய்குர் முஸ்லிம்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்கள் உண்மையில் தொழில்பயிற்சி மையங்களாகத் தான் செயல்படுகின்றன என்று சீனா கூறிவருவது குறித்துப் பேசிய உய்குர் முஸ்லிம்கள் ஆதரவு ஆர்வலர், இது ஒரு கடைந்தெடுத்த பொய், சீனா உண்மையை மறைக்கிறது என்றார். காஷ்மீர் பிரச்சனையை எல்லா நேரத்திலும் கையில் எடுக்கும் பாகிஸ்தான் பிரதமர், உய்குர் முஸ்லிம்கள் விஷயத்தில் கண்களை மூடி சீனாவின் கொள்கைகளுக்கு ஆதரவு  தெரிவிப்பதாக திரு ஐசா குற்றம் சாட்டினார். இது தான் பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாடு; அந்த நாட்டுக்குப்  பெரும் அவமானத்தை ஈட்டித்தரும் செயல்பாடு.

காஷ்மீர் மக்களின் நண்பராக தம்மைச்  சித்தரித்துக்கொள்ளும் திரு இம்ரான் கான், பலூச்சிஸ்தான் மக்களின் ஆத்திரத்துக்கும் ஆளாகி இருக்கிறார்.

கடந்த வாரம், ஜெனீவாவில் நடந்த ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வில் பலூசிஸ்தானில் இம்ரான் கான் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து பலூசிஸ்தான் தலைவர்கள் ஆர்ப்பாட்டக் குரல் எழுப்பினார்கள். பலூசிஸ்தானில் இனப் படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்திவரும் பாகிஸ்தான், காஷ்மீரில் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் எனக் கவலைப்படுவது போன்ற ஒரு முகமூடியுடன் சர்வதேச சமூகத்தின் முன் தோன்றுவதாக பலூசிஸ்தான் ஆர்வலர் மெஹ்ரான் மர்ரி கூறுகிறார்.

அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றிப்பேசி தனக்குத் தானே குழிபறித்துக் கொள்ளும் பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாட்டால் அதன் பிரச்சனைகள் தீர வழியில்லை. அவை தொடரவே செய்யும் என்று தோன்றுகிறது.