களத்தைப் புரட்டிப் போடும் திறனை நோக்கிப் பயணிக்கும் இந்திய விமானப்படை.

(பாதுகாப்பு ஆய்வாளர் உத்தம்குமார் பிஸ்வாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.)

இந்திய விமானப்படை (ஐஏஎஃப்), அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில், விண்ணில் ஆதிக்கம் செலுத்தவல்ல, அதிகத் திறன் கொண்ட, முதலாவது ரஃபேல் போர் விமானத்தை பிரெஞ்சு டசால்ட் ஏவியேஷனில் இருந்து பெற உள்ளது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்சிற்குச் சென்று, முதல் ரஃபேல் ஜெட் விமானத்தை பெற்றுக் கொள்வார். ரஃபேல் விமானங்களை இயக்குவதற்காக மூன்று வெவ்வேறு குழுக்களாக 24 விமானிகளுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரை பயிற்சி அளிக்கப்படும். அந்த காலகட்டதில் ரஃபேல் ஜெட் விமானங்களின் முதல் தொகுதி இந்தியாவுக்கு வந்து சேரும். ரஃபேல் போர் விமானங்களை அவசரமாகக் கொள்முதல் செய்வதற்கான முடிவு மிகவும் தர்க்கரீதியானது. ஏனெனில், காலாவதியான நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஃப் மிக் -21, மிக் -23 மற்றும் மிக் -27 போர் விமானங்களை எவ்வாறு மாற்றுவது என்ற கேள்விக்கான விடையை, பல ஆண்டுகளாக, புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு செயலுத்தி நிபுணர்கள் தேடி வந்தனர்.

மேலும், கடந்த தசாப்தங்களில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் அதிகரித்து வருவது, பாதுகாப்புக் கொள்முதலை துரிதப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த முக்கியக் காரணங்களாயின. அண்மைக் காலங்களில் இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கையில் ஒரு முன்னுதாரணமான மாற்றம் ஏற்பட்டது.  அண்டை நாடுகளின் அரசால் ஊக்குவிக்கப்படும் பயங்கரவாதத்தை  தடுப்பது என்ற கோட்பாட்டில் மட்டுமே, இந்தியா, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அத்துடன் இந்தியா மேலும் ஒரு தெளிவான செய்தியை வழங்கியுள்ளது, தேவைப்பட்டால், இந்தியா தனது “முதல் அணு ஆயுதத் தாக்குதல் இல்லை” என்ற உறுதிமொழியை  மறுபரிசீலனை செய்யவும் தயங்காது. கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்த்தப்பட்ட பாலகோட் துல்லியத் தாக்குதலானது, இந்திய பாதுகாப்புப் படைகள் இனிவரும் காலங்களில் எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதற்கான அறிகுறியாகும். நாட்டின் வடக்கு முன்னணியில் மாறி வரும் நிலைமையை, மிகவும் பயனுள்ள வான் சக்தி மற்றும் ஆயுத அமைப்பு இல்லாமல் சமாளிக்க முடியாது என்று இந்தியத் தலைமையும் கருதுகிறது. இந்தச் சூழலில்தான் ரஃபேல் கொள்முதலுக்கு  சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பாலகோட் நடவடிக்கைக்குப் பிறகு, ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால்,  நடவடிக்கைகள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் கூறியிருந்தார்.  தற்போது இந்திய படைப்பிரிவிடம் இல்லாத சிறப்புத் திறன்கள் கொண்டவை ரஃபேல் விமானங்கள் என்பதை பிரதமர் சூசகமாகக் குறிப்பிட்டிருந்தார்.   இந்திய விமானப்படை ஒரு டஜன் மிராஜ் -2000 விமானத்தை சார்ந்து இருக்க வேண்டியிருந்தது. இந்த விமானங்களைத் தயாரித்த நிறுவனம் தான் ரஃபேலையும் தயாரிக்கிறது.   ரஃபேல்  மிகச் சிறந்த போர் விமானங்களில் ஒன்று என்பது நிரூபிக்கப்பட்ட விஷயமாகும்.  இது உலகின் மிகவும் மேம்பட்ட   அமெரிக்காவின் எஃப் -22 ராப்டரின் ‘அரை தலைமுறை’ என்று சொல்லமுடியும். இது இந்திய விமானப் படைக்கு மிகப்பெரிய அளவில் வலு சேர்க்கும். ரஃபேல் இந்திய விமானப்படைக்கு, களத்தைப் புரட்டிப் போடத்தக்க வல்லமையை வழங்கும். ஏனெனில், ரஃபேல் போர் விமானம், எதிரிகளின் ரேடார் கண்களுக்குத் தெரியாத விசேஷ வடிவமைப்பைக் கொண்டதாகும். இதன் அசாத்திய வேகமும், இதனைக் கண்டறிவதும், தாக்குவதும் மிகவும் சவாலாக இருக்கும்.

பரந்த அளவிலான ஆயுதங்களைக் கொண்ட ரஃபேல், விமான மேலாதிக்கம், இடைமறிப்பு, வான்வழி உளவு, துல்லியமாக இலக்கு வைத்துத் தாக்குதல் மற்றும் அணுசக்தி தடுப்புப் பணிகளைச் செய்யும் நோக்கங்களை கொண்டது. ரஃபேல் விமானங்கள், இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். அதாவது, விமானிகள்  ஆயுதங்களை மின்னல் வேகத்தில் பயன்படுத்துதல்,  விரைவாக எதிர்வினையாற்றுவதற்காக, லே போன்ற மிகவும் உயரமான இடங்களிலிருந்து புறப்படும் திறன், எதிரிகளின் கண்காணிப்பு அமைப்புகளை அடையாளம் கண்டு ரேடார் எச்சரிக்கை பெறுதல் மற்றும் உள்வரும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்கும் அமைப்பு ஆகியவற்றைக் கொண்டவை.  300 கி.மீ தூரத்தில் உள்ள இலக்குகளையும்  தொலைதூரத்தில் உள்ள இலக்குகளையும் தீவிர துல்லியத்துடன் தாக்கக்கூடிய ஏவுகணையை உள்ளடக்கிய ரஃபேலில், நவீன ஆயுதங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

அதன், வான் ஏவுகணை, மிகவும் சிறந்தது. இது 100 கி.மீ தூரத்தில் இருக்கும் எதிரி விமானங்களைத் தடுக்க முடியும். ரஃபேல் போர் விமானம், பல ஆண்டுகளாக பல போர்களில் தீவிரமாகப் பங்கேற்று, அதன் திறனை நிரூபித்துள்ளது. ‘தேஜஸ்’  விமானத்தில்  ‘சோதனை பறப்பில்’ இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்றார்.  பல்வேறு திறன்களைக் கொண்ட சூப்பர்சோனிக் விமானமான தேஜஸ், வானிலிருந்து வானுக்கும்,  வானில் இருந்து தரைக்கும், பல்வேறு விதமான ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை  கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானமும் விரைவில் இந்திய விமானப்படையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ந்து வரும் இந்தியாவின் தேவைகள் அதிகரித்து வருகின்றன. அதைப் பாதுகாக்க  சக்திவாய்ந்த ராணுவத் திறனை இந்தியா களமிறக்க வேண்டும். இந்த சூழலில், இந்தியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை நம்பியுள்ளது. இது ஒரு வலுவான தொழில்துறைத் திறனால் ஆதரிக்கப்படுகிறது. இது செயலுத்தி ரீதியிலான சுதந்திரத்தையும், சுதந்திரமான தேசியத் திறனையும், சக்தியையும் பறைசாற்றுகிறது. திறன்களின் அடிப்படையில் இந்திய விமானப்படையின் தற்போதைய தேவைகளுக்கு ரஃபேல் சிறந்த விமானமாக இருக்கலாம். ஆனால் நீண்ட கால நன்மைகளுக்காக, தற்போதைய கொள்முதல்களையே ஒரு கருவியாகப் பயன்படுத்தி, உள்நாட்டு தொழில்துறைத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.