மங்கோலிய அதிபரின் இந்தியப் பயணத்தால் வலுப்பெறும் உறவுகள்.

(காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர்  அத்தார் சஃபரின்  ஆங்கில உரையின் தமிழாக்கம் – லட்சுமண குமார்.)

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் அழைப்பை ஏற்று, மங்கோலியா அதிபர் கல்ட்மாஜின் பட்டுல்கா இந்தியா வந்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் மங்கோலிய அதிபர் ஒருவர் இந்தியாவிற்கு வருகை தந்திருப்பது இதுவே முதல் முறையாகும். மங்கோலிய அதிபருடன் அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் தலைவர்கள் அடங்கிய உயர் நிலை பிரதிநிதிக் குழு ஒன்றும் வந்துள்ளது.

அதிபர் பட்டுல்கா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் அவர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். அதிபரைக் கவுரவிக்கும் வகையில் திரு கோவிந்த் அவர்கள் அவருக்கு விருந்தளித்தார். குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கைய்யா நாயுடு அவர்களும் அதிபரை சந்தித்தார். பிரதமர் திரு நரேந்திர மோதி, மங்கோலிய அதிபர் பட்டுல்கா உடன் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்தைகள் நடத்தினார். இதில் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. திறன் வளர்ச்சியில் இருதரப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, எரிசக்தி, பேரிடர் மேலாண்மை மற்றும் கலாச்சாரப் பரிமாற்றம் முதலியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடந்த பதினைந்து நாட்களில் இரு நாட்டுத் தலைவைர்களும் இரண்டாவது முறையாக சந்தித்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தின்  முதல் வாரத்தில் ரஷ்யாவின் தொலைதூர கிழக்குப் பகுதியான விளாடிவோஸ்டாக்கில் (VLADIVOSTOK) நடைபெற்ற கிழக்கத்திய பொருளாதார மன்றக் கூட்டத்தின் பின்னணியில்  இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர்.

கிழக்குப் பகுதியுடனான உறவுக்கு இந்தியா உத்வேகமளித்துவருகிறது. 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோதி அவர்கள் மங்கோலியாவிற்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திரம் மற்றும் ஜனநாயக கொள்கைகள் மட்டுமல்லாது, பௌத்த பாரம்பரியத்திலும் பலமான அடித்தளம் கொண்டிருப்பதன் அடிப்படையில், இந்தியாவும் – மங்கோலியாவும்  2015 ஆம் ஆண்டு செயலுத்திக் கூட்டாளித்துவத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மங்கோலிய அதிபரின் தற்போதைய ஐந்து நாள் சுற்றுப்பயணம் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை பலப்படுத்தும். செயலுத்தி  கூட்டாளித்துவத்தை வலுவடையச்செய்யும்.

இந்தியாவும் மங்கோலியாவும் 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தங்களுக்கிடையே தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன. நாலாபுறமும் நிலப்பரப்பால் சூழப்பட்ட நாடு மங்கோலியா. ரஷ்யாவும், சீனாவும் அதன் அண்டை நாடுகள். ‘மூன்றாவது அண்டை நாடு’ என்ற தனது கொள்கை மூலம், மங்கோலியா பிற நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறது. பௌத்தமதம் மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் காரணமாக, மங்கோலிய மக்கள் பலரும் இந்தியாவைத் தங்களது ஆன்மீகத்திற்கான அண்டை நாடாகக் கருதுகின்றனர். மங்கோலியாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் பகுலா ரிம்போசே அந்நாட்டு மக்களால் இன்றும் நினைவு கூரப்பெறுகிறார். 1990 லிருந்து 2000 ஆம் ஆண்டு வரை உளன்பட்டரில் (Ulaanbaatar) தூதரகப் பணியாற்றிய  காலத்தில், பௌத்தமத அடிப்படையில் இந்தியாவுடனான  தொடர்பை அவர் பலப்படுத்தியுள்ளார். பல பௌத்த மடாலயங்களைப் புதுப்பிக்க அவர் உதவி புரிந்தார்.

மங்கோலியாவுக்கு இயற்கை வழங்கியுள்ள கொடை ஏராளம். பெரிய நாடாக இருந்தாலும், தலைநகரமான உலன்பட்டாரில் மட்டுமே மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் குறைவாகவே உள்ளது. 2018-19 ல் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், 2 கோடியே 38 லட்சம் டாலர் மட்டுமே. இருப்பினும், சமீப காலமாக இரு தரப்பு வர்த்தகம் அதிகரித்து வருகிறது. வர்த்தக சம நிலை இந்தியாவுக்கு சாதகமாவே உள்ளது. கிழக்குப் பகுதியுடன் இந்தியா நெருங்கிய உறவுகளை வளர்க்க மங்கோலியா முக்கியப் பங்காற்ற முடியும்.

உலகின் ஒட்டு மொத்த கவனமும் கிழக்கு நோக்கித் திரும்பி கொண்டிருப்பதால், இந்தியாவும் கிழக்கு நோக்கிய தனது செயல்பாடுகளை துடிப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய’ கொள்கை, ‘தொலை தூர கிழக்கு நோக்கிய கொள்கை’ என தற்போது மாறியுள்ளது.  பிரதமர் திரு நரேந்திர மோதியின் சமீபத்திய ரஷ்யப் பயணத்தின் போது இது அறியப்பட்டது. உலகின் கிழக்குப் பகுதியுடன் நெருங்கி செயல்பட  விரும்பும் இந்தியாவிற்கு, மங்கோலியா உதவ முடியும். 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் மங்கோலியா சென்றிருந்த போது, 100 கோடி டாலர் மதிப்பில் கடன் வழங்கியது, இதில் எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் ஒன்றும் அடங்கும். இந்த மாதம் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொண்ட போது, அந்நாட்டிற்கு 100 கோடி டாலர் கடன் வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

சர்வதேச விஷயங்களில் இந்தியாவும் மங்கோலியாவும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளன. 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுநேர உறுப்பினராக உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மங்கோலியா பார்வையாளர் அந்தஸ்தில் உள்ளது.

இந்தியாவும், மங்கோலியாவும் பாதுகாப்பு மற்றும் இராணுவத் துறையில் ஒத்துழைக்க வேண்டும். சுதந்திரமாகத் திரியும் யானை எனப் பொருள்படும் நொமேடிக் எலிஃபன்ட்  ‘NOMADIC ELEPHANT’ என்று பெயரிடப்பட்டுள்ள இராணுவ கூட்டு நடவடிக்கையில் இரு நாடுகளும் ஈடுபட்டுவருகின்றன. இந்தியா – மங்கோலியா இடையே கலாச்சாரம் மற்றும் மக்களுடனான ஒத்துழைப்பு வருடந்தோறும் அதிகரித்து வருகிறது. மங்கோலிய  அதிபர் பட்டுல்காவின் இந்தப் பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான செயலுத்தி கூட்டாளித்துவம் மேலும்  ஆழமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.