நலமா மோதி – முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வு.

(அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் நவ்தேஜ் சர்னா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – தமிழ் பரதன்.)

பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் அமெரிக்கப் பயணத்தில், டெக்ஸாஸ் மாகாணம் ஹியூஸ்டன் நகரில் நடைபெற்ற நலமா மோதி நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் பங்கேற்ற அந்நிகழ்வில் மோதி அவர்களுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேடையை அலங்கரித்தார்.

இந்திய அமெரிக்க சமூகத்தினரிடையே இதற்கு முன் 2014 இல் நியூயார்க் மாடிசன் சதுக்கத் தோட்டத்திலும், 2015இல் சேன்ஜோஸ்ஸிலும் பாரதப் பிரதமர் உரையாற்றியிருக்கிறார். ஆனால், ஹியூஸ்டன் நிகழ்வில் ட்ரம்ப் அவர்களின் வருகை அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளது. வெள்ளை மாளிகை உறுப்பினர்கள், செனட் உறுப்பினர்கள் முதலானவர்களும் இதில் பங்கெடுத்தனர். ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் ஸ்டெனி ஹோயர் அவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது, இந்திய அமெரிக்க உறவுகளுக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என, இருகட்சிகளின் ஆதரவும் உண்டு என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

அதிபர் ட்ரம்ப் அவர்களை வாழ்த்திய பிரதமர் திரு நரேந்திர மோதி, இரு பெரும் மக்களாட்சியின் இதயத்துடிப்பாக விளங்கும் இந்நிகழ்விற்கு  நல்வருகை தந்தமைக்காக நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அவரை அறிமுகப்படுத்தும்போது, “என் நண்பர், இந்தியாவின் நண்பர் மற்றும் சிறந்த அமெரிக்க அதிபர்” என்று கூறிய பிரதமர், மீண்டும் அமெரிக்காவை சிறப்பான நாடாக்குவதற்கு அதிபர் டிரம்ப் அவர்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டைப் பாராட்டினார்.

இது, ஆழ்ந்த, வரலாற்றுப்பூர்வமான நிகழ்வு எனக் குறிப்பிட்ட அதிபர் ட்ரம்ப் அவர்கள், இந்தியாவையும், அமெரிக்காவையும் இணைக்கும்  அனைத்து அம்சங்களையும் கொண்டாடும் நிகழ்வு என்றும் விவரித்தார். 30 கோடி மக்களை வறுமையிலிருந்து வெளிக்கொணர்ந்த பிரதமர் மோதி அவர்களின் சாதனையை வியந்து பாராட்டினார்.

40 லட்சம் இந்திய அமெரிக்கச் சமூகம், கடின உழைப்பிற்கு முன்னுதாரணமாகி, மருத்துவம் மற்றும் புதிய தொழில் துவக்கம் ஆகியவற்றில் பரிமளிப்பதையும், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வருவதையும் பாராட்டினார். எரிசக்தி, பாதுகாப்பு, விண்வெளி  ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை சுட்டிக்காட்டிய அதிபர், இந்திய, அமெரிக்க உறவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுவடைந்துள்ளதாகத் தெரிவித்தார். தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் இருநாடுகளும் இணைந்து எதிர்கொள்ளும் என அதிபர் குறிப்பிட்டபோது, அரங்கிலுள்ளோர் எழுந்து நின்று பெருத்த அளவில் கரகோஷத்தை எழுப்பினர். மேலும், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்து வருவதையும் அதிபர் பாராட்டினார்.

பிரதமர் மோதி அவர்கள், தமது எழுச்சியூட்டும் உரையில், “நாங்கள் எங்களுக்கே சவால் விட்டுக் கொள்கிறோம், நாங்கள் எங்களை மாற்றிக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டார். ”கடந்த ஐந்தாண்டுகளில், 11 கோடி கழிவறைகள் கட்டியதன் வாயிலாக, ஊரகக் கழிவு மேலாண்மை 38 சதவிகிதத்திலிருந்து 99 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. 150 புதிய எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 55 சதவிகிதமாக இருந்த ஊரக இணைப்புக்கள், 97 சதமாக அதிகரித்திருக்கின்றன. வங்கித் தொடர்பு, 100 சதவிகிதமாக விரிந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், தொழில் நடத்த ஏதுவாக மலிவாக இணைய சேவை தரப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் குறைந்த பணவீக்கம், குறைந்த நிதிப்பற்றாக்குறை மற்றும் அதிக வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது” என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினர்.

உள்கட்டமைப்பு,  முதலீடு, ஏற்றுமதி ஆகியவற்றின் வளர்ச்சிக்கான திட்டங்களால் ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற நிலையை எட்ட இந்தியா முனைந்துள்ளது. எளிமையான விதிமுறைகளை இந்தியாவில் பல்வேறு துறைகளில் உருவாக்குவதன் மூலம் நேரடி அந்நிய முதலீடுகளைப் பெறுவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.

வழக்கொழிந்த, பயனற்ற நடைமுறைகளுக்கு விடையளிக்கப்படுகிறது. அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டுள்ளது, இப்பிரிவைப் பயன்படுத்தி, பிரிவினைவாதிகளும், தீவிரவாதிகளும் 70 ஆண்டுகளாக, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு வளர்ச்சியின் பயன் சென்றடைவதைத் தடுத்து வந்தனர். தீவிரவாதத்தை ஊக்குவித்து ஆதரவளிப்போருக்கு எதிராக, தீர்க்கமான சண்டையிட அழைப்பு விடுத்த பிரதமர், பாகிஸ்தானை மறைமுகமாக சுட்டிக்காட்டும் வகையில், 2001செப்டம்பரில் அமெரிக்காவில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் 2008 நவம்பரில் இந்தியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் காரணமானவர்கள் எங்கிருந்தனர் எனக் கேள்வி எழுப்பினார். நலமா மோதி என்ற கேள்விக்கு, எல்லாம் சவுக்கியம் என்று, தமிழ் உள்பட, இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பதிலளித்தார். இந்தப் பன்முகத்தன்மையே இந்தியாவின் உயிர்நாடி என்றும், இந்திய ஜனநாயகத்திற்கு உத்வேகம் அளிப்பது என்றும் பிரதமர் கூறினார்.

நலமா மோதி நிகழ்ச்சி, இரு தலைவர்களுக்கிடையிலான பிற கலந்துரையாடல்களுக்கும் முறையாக வழிவகுத்தது. இந்தியா அமெரிக்கா இடையேயான வலுவான நல்லுறவை இந்நிகழ்வு வெளிக்காட்டும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னதாக, ஹியூஸ்டன் நகரில், எரிசக்தி நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகளுடனான வட்டமேசைக் கூட்டத்தில் பிரதமர் பங்கெடுத்தார். இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் இந்தியா, அமெரிக்கா இடையிலான இருதரப்பு முதலீட்டு வாய்ப்புக்கள் ஆகியவைபற்றி  இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்களையும் பிரதமர் மோதி அவர்கள் சந்தித்தார். 74 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றவும், பல்வேறு இருதரப்பு சந்திப்புக்களில் பங்கெடுக்கவும் மோதி அவர்கள் நியூயார்க் செல்கிறார்.