பருவநிலை மாறுபாடு தான் உண்மையான சவால் –  ஐநா மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோதி மீண்டும் வலியுறுத்தல்.

(இண்டியன் சயின்ஸ் பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் என். பத்ரன் நாயர் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் ஆர். ராஜ்குமார் பாலா.)

சுவீடனைச் சேர்ந்த 16 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேடா தன்பெர்கின் உருக்கமான கோரிக்கை நியூயார்க்கில் ஐநா மன்றக்கூட்டத்தில் கூடியிருந்த உலகத் தலைவர்களின் மனதை உலுக்கியது. ”வருங்காலச் சந்ததியினர் அனைவரும் உங்களை எதிர்நோக்கியுள்ளோம். நீங்கள் கடமை தவறினால், நான் உறுதியாக கூறுகிறேன். உங்களை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம்” என்று அந்த 16 வயதேயான சிறுமி சொன்னார்.

இன்று மனித வாழ்க்கைக்கு பருவநிலை மாறுபாடு தனிப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கட்டுக்கடங்காத பருவநிலை மாற்றங்கள் உலகம் முழுமைக்கும் பெரும் அழிவை ஏற்படுத்தும். பின்விளைவுகளை கொண்டுவரும்.

ஐ நா மன்றத்தில் உலகத் தலைவர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், பருவநிலை மாறுபாடு போன்ற ஒரு மிகத் தீவிரமான சவாலை எதிர்கொள்ள வேண்டுமெனில், நாம் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் எதுவும் போதாது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் என்றார். மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றம் கொண்டு வரும் வகையில் உலகம் தழுவிய ஓர் மக்கள் இயக்கத்தை உருவாக்குவதே தற்போதைய தேவை என்று அவர் உறுதிபடக் கூறினார்.

தேவைகள் தான் எமது வழிகாட்டும் கொள்கையே தவிர பேராசை இல்லை என்று ஐ நாவில் கூறிய பிரதமர் மோதி அவர்கள், இச்சபையில் இந்தியா உரை நிகழ்த்த மட்டும் வரவில்லை என்றும், இந்தப் பிரச்சனையின் தீவிரம் அறிந்து நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய அணுகுமுறை மற்றும் திட்டத்தை வகுக்கவே வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஜெர்மனியைச் சேர்ந்த, பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த போட்ஸ்டாம் நிறுவனம் தயாரித்த அறிக்கையில், ஆசியாவின் நிலப்பகுதியில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தட்பவெப்பநிலை அதிகரிப்பு, வேளாண்மை, மீன்வளத்துறை, நிலம் மற்றும் கடல் சார்ந்த பல்லுயிர்ப்பெருக்கம், உள்நாட்டு மற்றும் பிரதேசப் பாதுகாப்பு, வர்த்தகம், நகர்ப்புற வளர்ச்சி, புலம்பெயர்தல், சுகாதாரம் ஆகியவற்றில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். சில நாடுகள் உலக வரைபடத்தில் இருக்குமா இல்லையா என்ற அச்சுறுத்தல் நிலையும் உள்ளது. மேலும், நீடித்த, நிலைத்த, மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்டும் நம்பிக்கையையும் இது தகர்த்துவிடும். பருவநிலை மாறுபாடு குறித்து ஆராய்ந்துவரும் விஞ்ஞானிகள் இந்த அச்சுறுத்தல் உண்மை என்று எச்சரித்துள்ளனர். எனினும் நாம் இந்த நிலைமையை சரிசெய்யமுடியும்.

கல்வி முதல் பண்புகள் வரை, வாழ்வியல் நடைமுறை முதல் வளர்ச்சிக்கான தத்துவம் வரை, அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறையே  நமது இன்றைய தேவை என்று பிரதமர் மோதி வலியுறுத்தினார். இந்தியா மேற்கொண்டுள்ள வலுவான நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட பிரதமர் மோதி அவர்கள், புதுப்பிக்கவல்ல எரியாற்றல் உற்பத்தியை அதிகரிக்க ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பல எதிர்காலச் செயல்திட்டங்களையும் எடுத்துரைத்தார். மின்சாரம் மூலமான போக்குவரத்து, தொழில்துறையில் குறைந்த அளவு கார்பன் பயன்பாட்டுக்கு வழிவகுக்கும் நவீன தொழில்நுட்பங்கள், ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழிப் பயன்பாட்டுக்குத் தடைவிதிப்பது, பெட்ரோல் மற்றும் டீசலில் உயிரி எரிபொருள் கலப்பை  அதிகரிப்பது உள்ளிட்டவற்றை ஊக்கப்படுத்தவேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தியா பருவநிலை மாற்றங்களை அதிக அளவில் சந்திக்க ஆரம்பித்துவிட்டது. அதிக அளவில் மழை, பெரும் வெள்ளம், கடும் வறட்சி நிலைமை ஆகிய மாற்றங்கள் தான் அவை. போட்ஸ்டாம் நிறுவனத்தின் ஆய்வின்படி, உலகின் 20 நகரங்கள் வெள்ளப் பாதிப்பு அபாயத்தில் உள்ளன. அவற்றில் மும்பை, சென்னை, சூரத், கொல்கத்தா ஆகியன அடங்கும்.

உணவு உற்பத்தியையும் பருவநிலை மாறுபாடு பெரிதும் பாதிக்கும் என்பதோடு, உற்பத்திச் செலவுகளும் அதிகரிக்கும். உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு தெற்காசியாவில் 70 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடும்.

சுகாதாரத்துக்கு இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தவல்லது. காற்று மாசுபாட்டின் மோசமான விளைவுகள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஏற்கனவே, 33 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சீனா, இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நான்கு நாடுகளில்  இந்த உயிரிழப்பு அதிகமாகும். வெப்பம் அதிகம் நிலவினால் எரிபொருள் பாதுகாப்பற்ற தன்மை உருவாகும். இதனால் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடுகளுக்கிடையே சண்டை ஏற்படக்கூடும்.

பாதுகாப்பான, மலிவான விலையிலான, எளிதாகப் பயன்படுத்தவல்ல, சரிசமமாக கிடைக்கவல்ல, நீடித்து நிலைக்கவல்ல சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவது குறித்த பொதுக் குறிக்கோள்களை எட்டும் வகையில்,  சர்வதேச சூரிய எரியாற்றல் கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் பிரான்சுடன் இந்தியா கைகோர்த்துள்ளது.

மரபுசாரா எரிபொருளின் பங்கை அதிகரிக்கத் திட்டமிட்டுவரும் இந்தியா, 2022 ஆம் ஆண்டுக்குள் தனது புதுப்பிக்கவல்ல எரியாற்றல் திறனை 175 கிகாவாட்டுக்கும் அதிகமாகவும் பின்னர் 450 கிகாவாட்டுக்கும் அதிகமாகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

மின்சக்தி மூலம் இயங்கும் வாகனங்கள் மூலமாக சுற்றுச்சுழல் பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்துத் துறையை மாற்றும் திட்டங்கள் இந்தியாவிடம் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

தார்மீக ரீதியில் அழுத்தம் தரும் நிலையிலிருந்து உயர்ந்து, உலகநாடுகள் தனது சட்டதிட்டங்களை சட்டபூர்வமாக பின்பற்றும் நிலைக்கு உலக அமைப்பான ஐ நா உறுதி பெறவேண்டும்.

இயற்கைக்கு மதிப்பளிப்பது, வளங்களை உரிய வகையில் பயன்படுத்துவது, தேவைகளைக் குறைப்பது, வளங்களின் வரம்பு அறிந்து வாழ்வது ஆகியன, இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் தற்போதைய முயற்சிகளின் அடிப்படையாக விளங்கும் முக்கிய அம்சங்களாகும். இயற்கையோடு இணைந்த, இயைந்த வாழ்வு, இந்தியாவின் பாரம்பரியம் என்று பிரதமர் உலகத் தலைவர்களிடையே எடுத்துரைத்தார்.

பல நாடுகளைப்போன்று, இந்தியாவும் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கு, 130 கோடி மக்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளை சமன் செய்து வருகிறது. நாம் இன்று நமது கடமையில் இருந்து தவறினால், எதிர்காலம் நம்மை எப்போதும் மன்னிக்காது.