இந்தியா – அமெரிக்கா இருதரப்புப் பேச்சுவார்த்தை.

(ஜேஎன்யு அமெரிக்கன் கல்விப் புலத்தின் தலைவர் மற்றும் சார் துணைவேந்தர் சிந்தாமணி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – த.க.தமிழ்பாரதன்)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் சாதுரியமான, ஈர்ப்புத்தன்மைமிக்க ராஜீயத் திறமைகளை ஒப்பிடக்கூடிய அளவிற்கு, வேறொரு தலைவர் தற்காலத்தில் இல்லை. அவர் எங்கு சென்றாலும் தலைவர்களையும், சட்ட வல்லுநர்களையும், மக்களையும் கவர்ந்து அவர்களை இந்தியாவுக்கு நெருக்கமானவர்களாக மாற்றி விடுகிறார். பிரதமரின் இந்தத் திறன் ஹியூஸ்டன் நிகழ்வின் மூலம் உலகிற்கு வெளிப்படையாகத் தெரிந்துள்ளது. அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, அவருடன் பிரதமர் மோதி அவர்கள் ஆறுமுறை தனியாக சந்தித்துள்ளார். இந்திய அமெரிக்க உறவில் இதுவே வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.

திங்கள்கிழமை நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இருதலைவர்களும் தனியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தியா, அமெரிக்கா இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை, பலதரப்பு ராஜீய உறவுகளுக்கான மிகப் பெரும் மேடையான ஐ.நா.அரங்கத்தில் நடைபெற்றது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இது இரு தலைவர்களுக்கும் இடையிலான சிறிய கலந்துரையாடல்தான் என்றாலும், இதனால் உண்டான பயன்கள் பலவாகும்.

திரு மோதி மற்றும் திரு ட்ரம்ப் இடையேயான கவனிக்கத்தக்க நட்புறவுவானது வெளிப்படையாகத் தென்பட்டது. முன்னதாக, டெக்ஸாஸ் மாகாணம் ஹியூஸ்டன் நகரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், இரு தலைவர்களுக்கும் இடையேயான நெருக்கத்தை உலகம் கண்டு கொண்டது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்துக்கு இடையே, இருதலைவர்களும் சந்தித்துக் கொண்டது, பரஸ்பர நம்பிக்கை, புரிதல் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றை நிரூபிக்கும் வகையில் அமைந்தது. பிரதமர் மோதியின் சாதனைகளை அங்கீகரித்த அதிபர் ட்ரம்ப் அவர்கள், அவரைத் தற்கால இந்தியாவின் தந்தை என்றழைத்தார்.

உலகளாவிய ராஜீய விவகாரங்களில், தலைவர்களின் பங்கு மற்றும் அவர்களுக்கிடையிலான நட்புறவு ஆகியவை, நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை அதிகரிக்கவும் வழிகோலுகின்றன. அவ்வகையில், திரு. மோதி மற்றும் திரு. ட்ரம்ப் இடையிலான தனிப்பட்ட சமன்பாட்டைக் குறைந்து மதிப்பிடலாகாது.

விமர்சகர்களின் கேள்விகளுக்கும் ஊகங்களுக்கும் மாறாக, அமெரிக்க அதிபர், காஷ்மீர் விவகாரத்தில் தாம் ஈடுபடாமல் விலகியிருப்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து அவரைக் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வற்புறுத்தியும், அதிபர் டிரம்ப் அதற்கு இணங்கவில்லை. காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்கத் தாம் தயாராக இருப்பதாக ஆறுமுறை டிரம்ப் கோடிட்டுக்காட்டியதாக, ஊடகங்கள் பலமுறை கூறிவந்துள்ளன. இந்தியா ஒத்துக்கொண்டால் மட்டுமே தாம் தலையிட முடியும் என்பதை அதிபர் தெளிவுபடுத்தியுள்ளதை ஊடகங்கள் கவனிக்கத் தவறிவிட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக வேறுபாடுகள் களையப்பட்டு, புதிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை, நியூயார்க்கில் பிரதமர் மோதி அவர்களுக்கும், அதிபர் டிரம்ப் அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பு தெளிவாக்கியது. இதனை அதிபர் அவர்களே சுட்டிக்காட்டியுள்ளதால், வர்த்தக வேறுபாடுகள், இருநாடுகளுக்கும் இடையிலான ஆழ்ந்த நட்புறவைப் பாதிக்க அனுமதிக்கப்படாது என்று உறுதியாக நம்பலாம்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் திறன், சரியான அணுகுமுறை மற்றும் வழிமுறைகள் பிரதமர் மோதி அவர்களின் வசம் உள்ளன என்பதில் அமெரிக்க கொண்டுள்ள நம்பிக்கையும் இந்த சந்திப்பின் மூலம் வெளிப்பட்டுள்ளது. ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், பாகிஸ்தான் தூண்டுதலுடன் இந்தியாவில் நிகழ்த்தப்படும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான முழுத் திறமையும் பிரதமர் திரு மோதிக்கு உண்டு என்று அதிபர் டிரம்ப் அவர்கள் குறிப்பிட்டார். இதன் மூலம், மோதி அரசு ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் எதிர்க்கவில்லை என்பது தெளிவாகிறது.

இன்றைய சூழலில், இந்தியாவுக்கு அமரிக்கா தரும் ஆதரவை இதைவிடத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க இயலாது. ஆஃப்கானிஸ்தானில் கணிசமான அளவில் அமெரிக்கத் துருப்புக்கள் நிலை கொண்டுள்ளது, தாலிபான்களின் தொடர்ந்த வன்முறைத் தாக்குதல்கள், ஆஃப்கான் பிரச்சனையில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பைப் பெற வேண்டிய அவசியம் போன்ற  சவால்கள் இருப்பினும், காஷ்மீரில் அமைதியை நிறுவி, செழிப்பை உண்டாக்க, பிரதமர் மோதி அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அதிபர் டிரம்ப் அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் அவர்கள், தனது உரையில் காஷ்மீர் பற்றி ஒருமுறைகூட குறிப்பிடவில்லை என்ற உண்மையை உரக்கச் சொல்ல வேண்டிய தருணம் இதுவாகும்.

பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கும், அதிபர் டிரம்ப் அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த சந்திப்பின் பலன் அசாதாராணமானதாகவும், மோதி அவர்களின் ராஜதந்திரத் திறனுக்குக் கிடைத்த இனிமையான வெற்றியாகவும் அமைந்தது என்றால் அது மிகையல்ல.