கரீபியன் மற்றும் பஸிஃபிக் தீவுகளுடனான உறவைப் புதுப்பிக்கும் இந்தியா.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்துக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், கரீபியன் சமுதாயத்தைக் குறிக்கும் கரீகாம் எனப்படும் நாடுகளின் 14 தலைவர்களைச் சந்தித்தது, கரீபியன் தீவுகளில் உள்ள நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவுகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது. பிரதமரின் இந்த சந்திப்புக்கு, செயிண்ட் லூசியா நாட்டின் பிரதமரும் கரீகாம் நாடுகளின் தற்போதைய தலைவருமான எல்லென் சேஸ்ட்னெட் அவர்கள் கூட்டாகத் தலைமை தாங்கினார். ஏண்டீகுவா மற்றும் பர்பூடா, பார்பீடோஸ், டொமினிகா, ஜமைக்கா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரேனடைன்ஸ், ட்ரினிடாட் மற்றும் டொபேகோ ஆகிய நாடுகளின் தலைவர்களும், சூரினாம் நாட்டு துணை அதிபரும், பஹாமாஸ் ,பெலிஸ் கிரெனேடா, ஹயீதி மற்றும் கயானா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கரீகாம் நாட்டுத் தலைவர்களுடன், பிராந்திய ரீதியிலான சந்திப்பை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நிகழ்த்தியது இதுவே முதல்முறையாகும். இந்த சந்திப்பின்போது, கரீபியன் கூட்டாளி நாடுகளுடன் வலுத்து வரும் இந்திய உறவுகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. கரீகாம் நாடுகளுடன், அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார ஈடுபாடுகளை வலுப்படுத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது. கரீபியன் நாடுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருவது, அந்நாடுகளுடன் இந்திய நட்புறவை துடிப்புமிக்க, நீடித்த இணைப்பாகத் தக்கவைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

இந்த சந்திப்பின்போது, அரசியல் மற்றும் நிறுவன ரீதியிலான வழிமுறைகள், பொருளாதார ஒத்துழைப்பில் ஊக்கம், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரித்தல், மக்களுக்கு இடையே வலுவான தொடர்புகளை ஏற்படுத்துதல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. திறன் வளர்ப்பு, மேம்பாட்டுக்கான உதவி, பேரிடர் மேலாண்மையில் ஒத்துழைப்பு ஆகியவற்றைப் பிரதமர் வலியுறுத்தினார். டோரியன் புயலால் பாதிக்கப்பட்ட பஹாமாஸ் நாட்டிற்கு உடனடியாக 10 லட்சம் டாலர் நிதியுதவியை இந்தியா அளித்தது.

கரீகாம் நாடுகளில், சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒரு கோடியே 40 லட்சம் டாலர் நிதியுதவியையும், சூரிய சக்தி, புதுப்பிக்கத்தக் எரியாற்றல் மற்றும் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களுக்கு 15 கோடி டாலர் கடனுதவியையும் இந்தியா அறிவித்தது. கயானாவிலுள்ள ஜார்ஜ்டவுனில் பிராந்திய, தகவல் தொழில்நுட்ப சிறப்பு மையம் அமைப்பது குறித்தும், பெலிஸ் நாட்டில் பிராந்திய தொழில் பயிற்சி மையம் அமைப்பது குறித்தும் பிரதமர் அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் இந்த முன்னெடுப்புக்களை வரவேற்ற கரீகாம் தலைவர்கள், அவற்றுக்கு அந்நாடுகளின் பூரண ஒத்துழைப்பை உறுதி செய்தனர்.

பிஎஸ்ஐடிஎஸ் எனப்படும் இந்தியா – பஸிஃபிக் மேம்பாட்டு நாடுகளின் தலைவர்கள் கூட்டமும் ஐ.நா.வின் இந்த 74 ஆவது கூட்டத்துக்கு இடையே நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், ஃபிஜி, கிர்பாட்டி குடியரசு, மார்ஷல் தீவுகள் குடியரசு, மைக்ரோனேசியா, நவூரு, பலாவ் குடியரசுகள் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள், சுதந்திர நாடான பப்புவா நியூகினி, சமோவா, சாலமன் தீவுகள், டோங்கா, டுவாலு மன்னராட்சி நாடுகள் மற்றும் வனௌடு குடியரசு ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கையினால், பஸிஃபிக் தீவு நாடுகளுடனான இந்திய உறவுகள் ஆழப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இந்தியா – பஸிஃபிக் தீவுகள் ஒத்துழைப்பு மையமான ஃபிபிக் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஃபிஜியில் முதலாவது ஃபிபிக் மாநாடும், 2016 ஆம் ஆண்டு,  ஜெய்பூரில் இரண்டாவது ஃபிபிக் மாநாடும் நடத்தப்பட்டன. இந்த உச்சி மாநாட்டில், பஸிஃபிக் நாடுகளுடன் நெருக்கமாக ஒத்துழைக்கவும், அந்நாடுகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும் இந்தியா ஆர்வமாக உள்ளது என பிரதமர் அறிவித்தார்.

நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் உண்டான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் துறையில் ஒத்துழைப்பை அதிகரித்தல், அண்மையில் துவக்கப்பட்ட, பேரிடரைத் தாங்கவல்ல உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்புடன் இணைதல் திறன் வளர்ப்பு,  இந்தியா – ஐ.நா. மேம்பாட்டுக் கூட்டாளித்துவ நிதியின் கீழ் திட்டங்களை செயல்படுத்துதல், வருங்கால இந்தியா – பிஎஸ்ஐடிஎஸ் கூட்டுறவு குறித்த வரைவுத் திட்டம் ஆகியவை உள்ளிட்ட பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.

இந்தியாவும் பிஎஸ்ஐடிஎஸ் நாடுகளும் பண்புகளையும், வருங்கால செழிப்பையும் பகிர்ந்து கொள்கின்றன என்று பிரதமர் மோதி அவர்கள் தெரிவித்தார். சமச்சீரற்ற நிலையைக் குறைக்கவும், அனைவரையும் உள்ளடக்கவும் மேம்பாட்டுத் திட்டங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும், அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள இந்தியா உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், பிஎஸ்ஐடிஎஸ் நாடுகளின் மேம்பாட்டு இலக்குகளை எட்ட, மேம்பாட்டு, தொழில்நுட்ப உதவிகளை அளிக்க இந்தியா தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றங்கள் குறித்த யதார்த்த நிலையை சுட்டிக்காட்டிய பிரதமர், அவற்றால் உண்டாகும் தாக்கங்களைக் குறைக்க, புதுப்பிக்கத்தக்க எரியாற்றலின் பங்கை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சர்வதேச சூரியக் கூட்டமைப்பில், இப்பிராந்தியத்திலுள்ள நாடுகள் இணைந்ததற்கு, தமது திருப்தியை பிரதமர் தெரிவித்தார். பிறநாடுகளும் சர்வதேச சூரியக் கூட்டமைப்பில் இணைவதற்கு அவர் அழைப்பு விடுத்தார். பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டமைப்பில் இணையுமாறு, பிஎஸ்ஐடிஎஸ் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

ஒவ்வொரு பிஎஸ்ஐடிஎஸ் நாட்டிற்கும் 10 லட்சம் டாலர் என, மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் டாலருக்கான நிதி ஒதுக்கீட்டை இந்தியா அறிவித்துள்ளது. தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் அதிக தாக்கம் ஏற்படுத்தும் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த இந்த மானியம் வழங்கப்படும்