ஃபின்லாந்துக்கு, தீவிரவாதம் குறித்த தனது நிலைப்பாட்டை விளக்கும் இந்தியா.

(ஐரோப்பிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – த.க.தமிழ் பாரதன்.)

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் அவர்கள், மூன்றுநாள் பயணமாக ஃபின்லாந்து சென்றார். அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் நார்டிக் நாடுகளுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். 1950 இலிருந்து இருநாடுகளுக்கும் இடையே, பரஸ்பரம் உயர்நிலைப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை இருநாடுகளுக்கும் இடையே நிலவும் வழக்கமான, துடிப்புமிக்க உறவுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. ஏற்கெனவே இருநாடுகளுக்கும் இடையே நெருக்கமான நல்லுறவு நிலவி வரும் நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சரின் இந்த ஃபின்லாந்துப் பயணம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. காரணம், ஐரோப்பிய யூனியனுக்குத் தற்சமயம் ஃபின்லாந்து தலைமை தாங்குவதால், தமது அண்டை நாட்டிலிருந்து நிகழ்த்தப்படும் பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச அளவில் ஆதரவைத் தேடும் இந்தியாவுக்கு இப்பயணம் பெரிதும் உதவும்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் அவர்கள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து ஃபின்லாந்தின் உயர்மட்டத் தலைவர்களுடன் விரிவான விவாதம் நடத்தினார். ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை இந்தியா நீக்கியதைத் தொடர்ந்து, காஷ்மீர் குறித்து கட்டுக் கதைகளை பாகிஸ்தான் அவிழ்த்து விடும் வேளையில், இந்தக் கலைந்துரையாடல் நடந்தது. ஃபின்லாந்து பிரதமர் அண்ட்டி ரின்னி மற்றும் அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ ஆகியோருடன், ஹெல்சிங்கியில், பலதரப்பட்ட இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் ஈடுபட்டார். பசுமைத் தொழில்நுட்பம் குறித்து இருநாடுகளும் மதிப்பாய்வு செய்தன. மேலும், பிராந்தியப் பிரச்சினைகள் குறித்த கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

’இந்தியாவும் உலகமும்’ எனும் தலைப்பில், உலக விவகாரங்களுக்கான ஃபின்லாந்து நிறுவனமான எஃப்ஐஐஏ (FIIA) யில் உரையாற்றிய ஜெய்ஷங்கர் அவர்கள், மத்திய அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டார். தற்போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, வளர்ச்சியினை மையமாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இதனுடன், புதிய வாய்ப்புக்களையும் அடையாளம் கண்டு ஆராய்ந்து, உறவுகளை வலுப்படுத்த ஃபின்லாந்து முனைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கிய உலக நகர்வில், பரஸ்பரத் திறன்களை மேலும் வலுப்படுத்துவது, இருநாடுகளுக்கும் பெரும் பயனளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

வளர்ச்சி மற்றும் நிர்வாகத் தேவைகளை முன்னிட்டு, காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் வாயிலாக, தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யவே, இந்தியா அந்த முடிவு எடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்புப் பிரச்சினை குறித்து விவரிக்கையில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் கடந்த முப்பதாண்டுகளில் 40000 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

உலகின் பல பகுதிகளைப் போல, இந்தியாவும் நீண்டகாலமாக பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு வந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். அனைத்து வகையிலான பயங்கரவாதத்துக்கும் எதிராக, சர்வதேச அளவில் வலுவாகக் கண்டனக் குரல் எழுப்புவது மிகவும் அவசியமாகிறது. ஆஃப்கானிஸ்தானின் எதிர்காலம், பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கும் பாதை, வளைகுடா பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை ஆகியவை குறித்த இந்தியாவின் கவலைகளை வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் அவர்கள் பகிர்ந்து கொண்டார். இத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் விதமாக, இந்தியா நியாயமான முறையில் பிராந்திய அமைதிக்காகப் பங்காற்றி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

உலகில் சக்தி படைத்த முன்னிலை நாடுகளுடன் இந்தியா சுமுகமான உறவைத் தொடரும் என்று அமைச்சர் தெரிவித்தார். உலகின் பல்நிலைத் தன்மைக்கும், பலதரப்பட்ட கலந்துரையாடலுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார். அயல்நாடுகளில் தான் மேற்கொண்ட உறுதிப்பாடுகளில் ஸ்திரமாக நிற்கும் பொறுப்பை இந்தியா உணர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.  பிராந்திய மற்றும் உலக அரசியலில், மக்களை மையமிட்ட, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு இந்தியா முதன்மை இடம் தரும் என்றார் அவர்.

ஜெய்ஷங்கர் அவர்கள், ஃபின்லாந்தின் முதல் துணை சபாநாயகர் டூலா ஹாடைனென் மற்றும் ஃபின்லாந்து நாடாளுமன்ற வெளியுறுவுத்துறைக் குழுவுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும், அவர் ஃபின்லந்து அதிபர் சௌலி நினிஸ்டொவை சந்தித்தார். மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை ஒட்டி, இந்திய கலாச்சாரப் பரிமாற்ற மன்றம் சார்பில் ஃபின்லாந்திற்கு வழங்கப்பட்ட காந்தியடிகள் சிலையை அமைச்சர் திறந்து வைத்தார்.

காஷ்மீர் உள்நாட்டு விவகாரம் என்பதை வலியுத்தும் இந்தியா,  இவ்விஷயத்தில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச ஆதரவைப் பெறுவதில் வெற்றி கண்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதும், அனைத்து நாடுகளும் இணைந்து, பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் பாகிஸ்தானுக்குக் கடுமையாகக் கண்டனம் தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதுமே, ஜெய்ஷங்கர் அவர்களின் உரையின் அடிநாதமாக விளங்கியது. காஷ்மீர் நிலைமையை ஐரோப்பிய யூனியன் உன்னிப்பாகக் கண்கானித்து வரும் வேளையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் அவர்களின் இந்த ஃபின்லாந்து பயணமானது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், இந்தியாவின் பாதுகாப்புச் சவால்களைத் தெளிவுற விளக்கவும் வாய்ப்பளித்துள்ளது.