74 ஆவது ஐ.நா.பொதுச்சபையில் பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் உரை.

(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, அசோக் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

கடந்த வெள்ளியன்று, 74 ஆவது ஐ.நா.பொதுச்சபையில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், வறுமை ஒழிப்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை  மையமாகக் கொண்டு உரையாற்றினார்.

2015 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று, நீடித்த வளர்ச்சிக்கான, 2030 ஆம் ஆண்டுக்கான இலக்குகள் குறித்த ஐ.நா.வின் சிறப்பு உச்சிமாநாட்டில் பிற நாடுகளின் தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் பங்கு கொண்டார். இந்த இலக்கினை நோக்கிய செயல்பாட்டில், குறிப்பாக, வறுமை ஒழிப்பில், இந்தியா அடைந்துள்ள வெற்றி பறைசாற்றப்பட்டது.

பிரதமரின் உரையில், இந்தியாவின் சாதனைகளை நிரூபிக்கும் அம்சங்கள் வெளிப்பட்டன. வறுமை ஒழிப்பிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியிலும் இந்தியா எடுத்த முன்னெடுப்புக்களின் தாக்கங்கள் விவரிக்கப்பட்டன. இது உலகுக்கே ஒரு புதிய நம்பிக்கையை ஊட்டுவதாக அமைந்தது. இந்தியாவில் ஏழை மக்களை உள்ளடக்கும் வகையில், கடந்த ஐந்தாண்டுகளில் 37 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டன. ஜன் தன் யோஜனா என்ற இத்திட்டம், உலகிலேயே மிகப்பெரும் நிதி உள்ளடக்கத் திட்டமாக விளங்குகிறது. 120 கோடி மக்களுக்கு டிஜிட்டல் முறையில் அதிகாரமளிக்கும் விதமாக, ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பயோமெட்ரிக் முறை மூலம் அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், நிர்வாகத்தில் ஊழல் வெகுவாகக் குறைக்கப்பட்டது. உலகிலேயே மிகப் பெரும் பொது சுகாதாரத் திட்டமான ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம், கடந்த ஐந்தாண்டுகளில், 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு, திறந்த வெளி மலஜலம் கழித்தல் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரும் மருத்துவ வசதித் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், 50 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

2025 ஆம் அண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க, இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 15 கோடி இல்லங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படும். 2022 ஆம் அண்டுக்குள், ஏழை மக்களுக்காக 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.

பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள, புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் உற்பத்தி இலக்கை 175 கிகாவாட்டிலிருந்து 450 கிகாவாட்டாக உயர்த்துவது என்ற முடிவை பிரதமரின் உரை வெளிப்படுத்தியது. தவிர, ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஐந்தாண்டுகளுக்குள்  முற்றிலும் ஒழிக்கும் திட்டமும் வெளியிடப்பட்டது. இதனுடன், சர்வதேச சூரியக் கூட்டமைப்பை உருவாக்க இந்தியா எடுத்த முன்னெடுப்புக்கள், இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ள, சர்வதேசக் கூட்டமைப்பின் மூலம் கட்டமைப்பை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அறிவித்ததன் மூலம், இதில் உலகத்தை வழிநடத்த இந்தியா முனைந்துள்ளது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் மற்றும் அமைதிக்கான உறுதிப்பாட்டுக்கு முன்னுரிமை அளித்ததன் மூலம், நீடித்த வளர்ச்சியில் இந்தியா படைத்த சாதனைகள் சாத்தியமாயிற்று என்று பிரதமர் உறுதிபடக் கூறினார். பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் வெற்றிபெற பொதுமக்களின் ஆக்க்பூர்வமான பங்களிப்பு இருந்தது என்று பிரதமர் எடுத்துரைத்தார். இந்திய மக்களின் நலன் மட்டுமல்லாது, அனைத்து உலக மக்களின் நலனும் இதில் அடங்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். எனவே தான், அனைவருக்கும், அனைவரின் செழிப்பிற்கும், அனைவரின் நம்பிக்கைக்கும் என்று பொருள்படும் ”சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஷ்வாஸ்” என்பது தமது தாரக மந்திரமாக விளங்குகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

உலகின் பல்நிலைக் கட்டமைப்பிற்கு இந்தியா பெரும் ஆதரவளிக்கிறது என்பதை பிரதமரின் உரை உறுதிப்படுத்தியது.

3,500 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்ப் புலவர் கனியன் பூங்குன்றனார் தனது புறநாற்றுப் பாடலில்  ’யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று பாடியதை மேற்கோள்காட்டி, உலகம் முழுவதும் தமது இருப்பிடம், உலக மக்கள் யாவரும் எமது உறவுகள் என்ற தத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். 1893 ஆம் ஆண்டில், சிகாகோவில், உலக சமய மாநாட்டில், சுவாமி விவேகானந்தர் வெளியிட்ட நல்லிணக்கம் மற்றும் அமைதி என்ற செய்தியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், தற்காலத்திலும் இந்தியா அதே கொள்கையைப் பின்பற்றி வருகிறது என்று தெரிவித்தார். சத்தியத்துக்கும், அஹிம்சைக்கும் காந்தியடிகள் கொடுத்த முக்கியத்துவத்தையும் பிரதமர் குறிப்பிட்டார்.

ஐ.நா. அமைதிப்படையில் அதிகளவில் இந்தியா பங்கு பெற்றுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், யுத்தம் அல்ல, புத்தரின் அமைதித் தத்துவமே இந்தியா உலகுக்கு அளிக்கும் நன்கொடை என்று குறிப்பிட்டார். மனித நேயத்தை முன்வைத்து, உலகம் சந்திக்கும் மிகப்பெரும் சவாலான பயங்கரவாதத்தை முறியடிக்க உலகம் ஒன்றுபட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

புதிய தொழில்நுட்பங்கள், சமுதாய வாழ்வு,, தனிப்பட்ட மனித வாழ்வு, பொருளாதாரம், பாதுகாப்பு, இணைப்புக்கள் மற்றும் சர்வதேச உறவுகளில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர், உலகநாடுகள் ஒன்றையொன்று சார்ந்து இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். சிலநாடுகளின் ஒதுக்கவியல்புக்கு மாற்றாக, பல்தரப்புக் கட்டமைப்புக்கும், ஐ.நா.வுக்கும் புதிய வழிக்கட்டுதல் தேவை என்று அவர் தெரிவித்தார்.

பல்தரப்புக் கட்டமைப்பிற்கு ஐ.நா.வின் கூட்டு உறுதிப்பாட்டை வலியுறுத்த, 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் மேற்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இந்த 74 ஆவது கூட்டம் கடமைப்பட்டுள்ளது. இந்த நோக்கத்தை அடைவதற்கான திட்டத்தை வரையறுப்பதில் இந்தியா பெரும்பங்காற்ற முடியும் என்பதை பிரதமரின் உரை கோடிட்டுக் காட்டியுள்ளது. இத்திட்டம், 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐ.நா.வின் 75 ஆவது வருடாந்தரக் கூட்டத்தில் ஏற்கப்படும்.