அதிபர் தேர்தலுக்குத் தயாராகும் இலங்கை.

(அரசியல் விமரிசகர் எம் கே டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ்.)

இலங்கையின் வானிலையைப் போலவே, தற்போது, அதன் அரசியல் சூழலும் மாறுபட்டுக்கொண்டே வருகிறது. நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு அந்நாடு தயாராகிவருகிறது. ஆனால் தேர்தல் பிரச்சாரம் மிகவும் மந்தமாகவே உள்ளது. நாட்டின் உச்ச பட்ச பதவிக்கான தேர்தல் இது என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இது வழக்கத்துக்கு மாறாக உள்ளது. எனினும் அதில் வியப்பொன்றும் இல்லை.  இந்த அசாதாரண நிலைக்கு முக்கிய காரணம்,  ஈஸ்டர் பண்டிகையன்று நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலேயாகும். பொது மக்கள் இந்த அதிர்ச்சியிலிருந்தும் அதன் தாக்கத்திலிருந்தும் இன்னமும் மீளவில்லை. இரு முக்கியக் கட்சிகளும் புதிதாக எதையும் செய்யக்கூடும் என்ற நம்பிக்கையும் பொதுவாக மக்களிடையே இல்லை.

முன்னாள் பாதுகாப்புச் செயலரும் முன்னாள் அதிபரின் தம்பியுமான கோத்தபயராஜபக்ச தன் முயற்சிகளை சரியான நேரத்தில் துவக்கி விட்டார். ஆண்டு துவக்கத்திலேயே, அதிபர் பதவிக்குப் போட்டியிட வகை செய்யும் ஏற்பாடாக,  தன்னுடைய அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்துவிட்டு, இலங்கை குடியுரிமை பெறும் தனது திட்டத்தை அறிவித்து விட்டார்.  அப்போதே அவர் குடியுரிமை மாற்றம் பெற்று விட்டதாக அறிவித்திருந்தாலும், இலங்கைக் குடியுரிமை தொடர்பான சட்டங்களின் கீழ் அவை செல்லுபடியாகுமா என்ற சட்ட சிக்கல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.  அவற்றுக்கான விளக்கங்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. மேலும் சில வழக்குகள் நீதிமன்றங்களில்  நிலுவையில் உள்ளன.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் கோத்தபய ராஜபக்ச அவர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தன் அண்ணனின் கொள்கைகளை  இவர் தொடர்ந்து கையாளக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இவர், நடுநிலைமையுடன் நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடப் போவதாகக் கூறியுள்ளார். இவருக்குப் பெருமளவிலான ஆதரவு சிங்கள சமூகத்தினரிடையே, குறிப்பாக தெற்கு இலங்கைப் பகுதியில் இருக்கும்.

மறுபுறம் பிரதமர் ரனில் விக்ரமசிங்க, மத்தியில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிறந்த தேர்வாக உருவெடுத்திருக்கிறார்.  அவருடைய நீண்ட நாள் அதிபர் கனவுக்கேற்றாற்போல், அதிக அனுபவம் மிக்க தலைவராகவும் அவர் திகழ்கிறார். ஐந்து முறை பிரதமர் பதவியிலும் நாற்பதாண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சித் தலைவராக 25 ஆண்டுகளும் அவர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தம் கட்சியினர் உட்பட, பலரும் இவர் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடுவது குறித்து அதிக வரவேற்பு தெரிவிக்கவில்லை. இவரது காலம் முடிந்து விட்டதாகவும் இளமையும் ஆற்றலும் மிக்க வேறொரு தலைவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாச அவர்களின் மகனும் தற்போதைய சிரிசேனா அரசில் அமைச்சருமான சஜித் பிரேமதாச, இவர்களின் தேர்வாக அறியப்படுகிறார். ஆனால், விக்கிரமசிங்க களத்திலிருக்கும் நிலையில்,  கட்சி எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. பிரச்சாரம் சூடு பிடிக்காததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சஜித் பிரேமதாச விரைவில் தமது அறிவிப்பை வெளியிடுவாரென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, இரண்டு வலுவான போட்டியாளர்கள் களத்திலிறங்கிய பிறகே தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கும் வாய்ப்புள்ளது.. ஆளும் கட்சியின் பிரபலமான, வலுவான முகமாக விக்ரமசிங்க திகழும் சூழலில், சஜித் பிரேமதாச, சிங்கள ஆதிக்கம் உள்ள தென் இலங்கையில் அதிக வலு பெற்றுள்ளார். தமது காலத்தில் சிங்களதேசிய உணர்வாளராகத் திகழ்ந்த ரணசிங்க பிரேமதாச அவர்களின் செல்வாக்கு, அவரது மகனான  இவருக்கு உதவும்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில்,  அதிபர் தேர்தல் போட்டியாளர்களின் முக்கியத்துவம் இந்த முறை சற்று கூடுதலாகவே இருக்கும். கடந்த காலங்களைப் போலவே, அதிபர் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. அதனைத் தொடர்ந்து, மாகாண கவுன்சில் தேர்தல்களும் நடைபெறவுள்ளன என்பது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. மந்த நிலையில் உள்ள தேர்தல் பிரச்சாரக் களம் வரும் வாரங்களில் சூடுபிடிப்பதுடன், அது புத்தாண்டின் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் களம் அமைக்கும் என்று கூறினால் அது மிகையல்ல.

இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாகவும், நட்பு நாடாகவும் விளங்கும் இந்தியா, அங்கு, தேர்தல்கள் சுதந்தரமாகவும் நியாயமாகவும் நடப்பதையே விரும்புகிறது.  ஈஸ்டர் தினத்தன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, இலங்கைக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.. பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயக நாடான இலங்கை, தெற்காசியாவின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கான ஒரு பூங்காவாக இருக்கும் என்பது உறுதி.