பாகிஸ்தானின் வெறுப்புப் பிதற்றலுக்கு செவிமடுப்போர் யாருமில்லை.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

ஐ.நா.வின் 74 ஆவது பொதுச்சபையில், காஷ்மீர் விஷயத்தை எழுப்ப முயன்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முயற்சி படுதோல்வியடைந்தது. ஐ.நா. பொதுச்சபையில் அவர், இந்திய மாநிலமான ஜம்மு – காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வக்காலத்து வாங்கி வெற்றுரை நிகழ்த்தினார். இருப்பினும், அவரது பேச்சுக்கு யாரும் செவி மடுக்கவில்லை. பின்னர், போர் அச்சுறுத்தலை முன்வைக்க முற்பட்ட அவர், அணு ஆயுதப் பயன்பாடு குறித்தும் எச்சரிக்கை விடுக்கத் துணிந்தார். உலகின் கவனத்தை ஈர்க்க, பாகிஸ்தான் தலைவர்கள் கையாளும் உத்தியாக இது விளங்குகிறது.

இம்ரான்கான் அவர்களுக்கு அமெரிக்காவும் எந்த ஆதரவும் அளிக்கவில்லை. மாறாக, காஷ்மீர் மக்களின் நிலைபற்றிப் பேச முற்பட்ட பாகிஸ்தான் பிரதமர், ஏன் உய்கூரில் அல்லல்படும் மக்களின் நிலை பற்றிப் பேசவில்லை என அமெரிக்கா சாடியது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான, அமெரிக்காவின் துணைச் செயலர் அலைஸ் வெல்ஸ் அவர்கள், காஷ்மீர் பற்றி இம்ரான்கான் அவர்கள் பேசுவது எவ்விதப் பயனும் அளிக்காது என்று குறிப்பிட்டார்.

இரண்டு அணுஆயுத சக்திகளுக்கு இடையே வாய்ச்சவடால் குறைக்கப்படுவது வரவேற்கத் தக்கது என்று கூறிய வெல்ஸ் அவர்கள், சீனாவில், ஹான் சீனப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்க வைப்பதற்காக, 10 லட்சம் உய்கூர் முஸ்லீம்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது பற்றி, பாகிஸ்தான் பிரதமர் ஏன் எதுவுமே பேசவில்லை என்று கேள்வியெழுப்பினார். உய்கூர் மக்களின் நிலை குறித்து விமரிசிக்க மறுத்த இம்ரான் அவர்கள், பாகிஸ்தான், சீனாவுக்கு இடையே சிறப்பு உறவுகள் நிலவுவதாகக் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்களின் பேச்சுக்கு இந்தியா கொடுத்த பதில், முதிர்ச்சியானதாகவும், உண்மைநிலையை எடுத்துரைப்பதாகவும் விளங்கியது. அணு ஆயுதப் போரினால் ஏற்படக்கூடிய பேரழிவு குறித்து அச்சுறுத்திய பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு, மறைமுகமாகப் போர் அச்சுறுத்தலேயொழிய, ஆரோக்கியமான ராஜதந்திரப் பேச்சல்ல என்று இந்தியா பதிலளித்தது.

ஐ.நா.வில் பிரிவினையைத் தூண்டும் விதமாக இருந்த பிரதமர் இம்ரான்கான் அவர்களின் பேச்சு, வேறுபாடுகளுக்குத் தீனிபோட்டு, வெறுப்பை உமிழ்வதாக இருந்தது என்று இந்தியா கூறியது. பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முயன்ற பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு, பயங்கரவாதத்தையே தனது ஆதிக்கம் செலுத்தும் தொழிலாகக் கொண்ட நாட்டிலிருந்து வந்துள்ளது என்றும், திமிர்த்தனமான, வெறுப்புத்தீ மூட்டும் பேச்சு என்றும், ஐ.நாவுக்கான இந்தியாவின் முதன்மைச் செயலர் விதிஷா மைத்ரா அவர்கள் பதிலளித்தார்.

தனது நாட்டில் பயங்கரவாதிகள் இல்லை என்பதை உறுதி செய்ய, ஐ.நா. பார்வையாளர்களைப் பாகிஸ்தான் வருமாறு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்களின் உறுதிமொழிக்கு உலகம் அவரைப் பொறுப்பாக்கும் என்று விதிஷா மைத்ரா அவர்கள் நினைவூட்டினார். ஐ.நா.வினால் பட்டியலிடப்பட்ட 130 பயங்கரவாதிகளும், 25 பயங்கரவாதக் குழுக்களும் பாகிஸ்தானில் உள்ளன எனும் உண்மையை  அவர் உறுதிப்படுத்தத் தயாரா என்று, இந்தியப் பிரதிநிதி, இம்ரான்கான் அவர்களிடம் கேள்வியெழுப்பினார். பயங்கரவாத நிதித்தடுப்பு நடவடிக்கைக் குழு, தமது 27 முக்கிய அம்சங்களில் 20க்கும் மேல் விதிமீறல்கள் நிகழ்த்தியதாக பாகிஸ்தானுக்கு,  நோட்டீஸ் அனுப்பியுள்ளதை பாகிஸ்தான் மறுக்குமா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

பயங்கரவாதத்தையும், வெறுப்பூட்டும் பேச்சுக்களையும் தனது வழக்கமாகக் கொண்டுள்ள பாகிஸ்தான், புதிதாக, மனித உரிமையைக் கையிலெடுக்க முயன்றுள்ளது என்று இந்தியப் பிரதிநிதி கூறினார். பாகிஸ்தானில், 1947 ஆம் ஆண்டில் 23 சதமாக இருந்த சிறுபான்மை மக்கள் தொகை, தற்போது 3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது என்று ஐ.நா.உறுப்பினர்களுக்கு அவர் நினைவூட்டினார். கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், அஹமதியாக்கள், ஹிந்துக்கள், பஷ்டூன்கள், சிந்திக்கள் மற்றும் பலூச்சிக்கள் ஆகியோரை, கடுமையான தெய்வ நிந்தனை சட்டத்துக்கு உட்படுத்தி, அப்பட்டமான துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, வலுக்கட்டாய மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

மனித உரிமைக்காகக் குரல் கொடுப்பதாக பாகிஸ்தான் மேற்கொள்ளும் புதிய நாடகம், பதக்கங்கள் வெல்லும் நோக்கில் நடத்தும் செயலை ஒத்துள்ளது என்று இந்தியா கூறியது. கொலை, கொள்ளை போன்றவை, துடிப்பான ஜனநாயகத்தின் அடையாளங்கள் அல்ல என்று இந்தியப் பிரதிநிதி கூறினார். 1971 ஆம் ஆண்டு, தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக, இனப்படுகொலை செய்த பாகிஸ்தானின் கொடூரச் செயலை உலகம் மறக்கலாகாது என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், காலாவதியான, தற்காலிகமாக விளங்கிய, வளர்ச்சிக்கும் ஒருங்கிணைப்புக்கும் முட்டுக்கட்டை போட்டு வந்த, அரசியல் சாசனம் 370 சட்டப் பிரிவை இந்தியா நீக்கியதற்கு, பாகிஸ்தான் ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றியுள்ளது என்று இந்தியா கூறியது. மோதலில் திளைப்போர், அமைதியை விரும்புவதில்லை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது என்று இந்தியா கூறியது. பயங்கரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் அளித்து ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு வரும் வேளையில், இந்தியா, ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிப்பாதையில் வீறுநடை போடுகிறது என்று இந்தியப் பிரதிநிதி குறிப்பிட்டார்.

தொன்றுதொட்டு தழைத்துவரும் பன்முகப் பாரம்பரியம், சகிப்புத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கிய ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியின் வளர்ச்சிக்காக, இந்தியா உண்மையுடன் உழைப்பது தொடர்கிறது என்று விதிஷா மைத்ரா அவர்கள் கூறினார்.  இந்திய மக்களுக்குத் தங்கள் சார்பாகப் பேச யாரும்  தேவையில்லை என்றும், குறிப்பாக, வெறுப்பை உமிழும் கொள்கையுடன், பயங்கரவாதத்தைத் தொழிலாகக் கொண்டுள்ள நாட்டிற்குப் பேசத் தகுதியில்லை என்றும் அவர் கூறினார்.

பிரதமர் இம்ரான்கான் அவர்களின் ஐ.நா. உரையைக் குறைகூறிய பாகிஸ்தான் நாட்டு எதிர்க்கட்சிகள், காஷ்மீர் விஷயத்தில் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் வெறும் கையுடன் அவர் திரும்பியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளன.