ஆஃப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல்: அமைதி மலருமா?

(தெற்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர். ஸ்ம்ருதி எஸ். பட்னாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.)

ஆஃப்கானிஸ்தானில், தாலிபானின் வீழ்ச்சிக்குப் பிறகு, இரு முறை ஒத்திவைக்கப்பட்ட அதிபர்  தேர்தல்கள், செப்டம்பர் 28 ஆம் தேதியன்று நடைபெற்றன. வன்முறைக்கான அச்சுறுத்தல்கள் அதிக அளவில் இருந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு இடையே இந்தத் தேர்தல் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பதிவு செய்யப்பட்ட 96 லட்சம் வாக்காளர்களுக்காக, நாடு முழுவதிலும் 4,900 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. எனினும், 20 சதவிகித வாக்காளர்களே வாக்களித்தனர். கடந்த தேர்தல்களில் 60 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஃப்கானிஸ்தானில், அமைதி ஆபத்தில் இருக்கும் நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வலுவான அரசாங்கம் அமைந்தால், அனைத்துத் தரப்பினருடனும், குறிப்பாக, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைகள்  நடத்தப்பட்டு, நிலைமை சீராக வழி பிறக்கும்.

வாக்குப்பதிவு நடந்த அன்று, நாடு முழுவதும், வாக்காளர்ளை அச்சுறுத்தும் நோக்குடன், ராக்கெட் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள் உட்பட சுமார் 400 தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தேர்தல்களின் நடைமுறையிலும் பல குறைபாடுகள் இருந்தன. பலரது பெயர்கள் வாக்காளர் படியல்களில் காணப்படவில்லை. தற்போது பதவியில் இருக்கும் அதிபர் அஷ்ரஃப் கானி மற்றும் டாக்டர். அப்துல்லா அப்துல்லா ஆகியோர், முக்கிய அதிபர் வேட்பாளர்கள் ஆவர். தற்போதைய தலைமை நிர்வாகியாக இருக்கும் அப்துல்லா, அதிபர் கானியுடன், பதவி அதிகாரத்தை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். அப்போது, செலுத்தப்பட்ட வாக்குகள் அனைத்தும், நூறு சதவிகிதம் தணிக்கை செய்யப்பட்டன. டாக்டர் அப்துல்லா அப்துல்லாவுக்கும் இடமளிக்க, ஒரு சமரச உக்தி உருவாக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு முதல், ஆஃப்கானிஸ்தான், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்றத்துடன் கூடிய, அதிபர் முறை அரசாங்கத்திற்கான செயல்முறைகளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. மேற்கத்திய ஜனநாயக முறையான இதில், தாலிபானும் போட்டியிட்டு வருகிறது. காபூலில் ஆட்சி செய்யும் அரசை, அமெரிக்காவின் கைப்பிள்ளையாகப்  பார்க்கும் தாலிபான், அவர்களுடனான எந்த விதமான பேச்சுவார்த்தைகளுக்கும் மறுப்பு தெரிவித்து விட்டது. தோஹாவில் இருக்கும் தாலிபான் அலுவலகம் மூலம், தாலிபான் அமெரிக்கா இடையில் சில தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளைத் தவிர, தாலிபான் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இன்னும் பல பேச்சுவார்த்தைகளும் நடந்தன. கடந்த ஆண்டு, ரஷ்யா ஒரு பலதரப்பு உச்சிமாநாட்டை நடத்தியது. இதில் கலந்துகொள்ள, ‘உயர் அமைதி கௌன்சிலின்’ நான்கு உறுப்பினர்களை அதிபர் கானி அனுப்பினார். இவ்வாண்டு ஏப்ரல் மாதம், ரஷ்யா, ‘இன்ட்ரா-ஆஃப்கான்’ எனப்படும் ஆஃப்கான் உள்நாட்டு மாநாட்டை நடத்தியது.

சீனா மற்றும் பாகிஸ்தானுடனும் தாலிபான் சந்திப்புகளை நடத்தியது. இந்தத் தளங்களில், ஆஃப்கான் அரசாங்கப் பிரதிநிதிகளுடன் ஈடுபடுவதில் தாலிபான் பிரதிநிதிகள் எந்தத் தயக்கமும் காட்டவில்லை. ஜூலை மாதம், கத்தார் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் சந்திப்பு தோஹாவில் நடைபெற்றது. இதில், முதன்முறையாக, இன்ட்ரா-ஆஃப்கான் அமைதி மாநாட்டின் ஓர் அங்கமாக, தாலிபான் பிரதிநிதிகள், ஆஃப்கானிஸ்தானிலிருந்து வந்த 50 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை சந்தித்தனர். தாலிபான் மற்றும் ஆஃப்கான் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான இந்த சந்திப்பு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகின்றது.

எந்த ஒரு பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படும் முன்னர், வெளிநாட்டுப் படைகள் ஆஃப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்பது முன்னர் தாலிபானின் விருப்பமாக இருந்தது. இருப்பினும், சர்வதேச அழுத்தம் காரணமாக, அது, பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புக்கொண்டது. பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பெண்ணுரிமை ஆகியவற்றிற்கு இணக்கமான ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது போலவும் இந்தக் கிளர்ச்சிக் கும்பல் தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சித்து வருகிறது.

காபூலில் உள்ள நேடோ-வின் ‘ரிசல்யூட் சப்போர்ட் மிஷன்’ தலைமையகத்தின் மீது நடந்த கார் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குப் பிறகு, தாலிபானுடனான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா நிறுத்தியது. இதைத் தொடர்ந்து, ஆஃப்கானிஸ்தானில் எதிர்கால அமைதி குறித்து ஒரு நிச்சயமற்ற நிலை உருவாகியது. இந்தச் சூழலில், தற்போது நடந்துள்ள அதிபர் தேர்தல் பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. போரால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதில், இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் முக்கிய பங்கு இருக்கும்.

எனினும், வாக்காளர்கள் மிகக் குறைந்த அளவிலேயே தேர்தலில் பங்கெடுத்துள்ளதால், ஒரு வலுவான அரசாங்கம் அமைவதற்கு இது பாதகமாக இருக்கலாம். மிகக் குறைந்த வாக்காளர்கள் வாக்களித்துள்ள இந்தத் தேர்தலின் சட்டப்பூர்வமான அங்கீகாரம் குறித்து, தாலிபான் கேள்வி எழுப்பாமல் இருக்காது. கடந்த முறையைப் போல, இந்தத் தேர்தல் முடிவுகளும் பறித்துச் செல்லப்பட தனது ஆதரவாளர்கள் விட மாட்டார்கள் என டாக்டர் அப்துல்லா அப்துல்லா கூறியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் இந்த மாதம் மூன்றாம் வாரத்தில் அறிவிக்கப்படவுள்ளன. இந்த முடிவுகளை அனைத்துக் கட்சிகளும் ஏற்குமா என்பதுதன் பெரிய கேள்வியாக உள்ளது. அமைதி ஆபத்தில் இருக்கும் நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் ஆஃப்கானிஸ்தானுக்கு ஒரு புதிய பயணத்திற்கான துவக்கமாக இருக்க வேண்டும். ஏனெனில், நிர்வாகக் கட்டமைப்பு தொடர்ந்து செயல்பட வேண்டியது மிக முக்கியமாகும். ஜனநாயகத்திற்குத் தொடர்ச்சியான நிலையை வழங்க, தேர்தல்களை விட சிறந்த ஒரு வழி இல்லை. ஆஃப்கானிஸ்தான் புனரமைப்பிற்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரலின் ஒரு அறிக்கையின் படி, ஆஃப்கானிஸ்தானில் 56 சதவிகிதம் தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ளது. நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தனது நீதியை நிலைநாட்ட வேண்டிய ஒரு சவால் மிக்க பணி, வரவிருக்கும் புதிய அரசாங்கத்திற்குக் காத்திருக்கிறது.