அகிம்சை –  உலகளாவிய அமைதிக்கு காந்தியடிகளின் ஆயுதம்.

(காந்திய ஆய்வாளர் டொமினிக் தாமஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன்.)

அகிம்சைக்கும், அமைதிக்கும் உலகம் அடையாளமாகக் கருதுவது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களையே. இந்தியா அவரை தேசப்பிதா என்று அழைக்கிறது. உலகம் அவரை மகாத்மாவாக அறிகிறது. காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் தேதியை சர்வதேச அகிம்சை தினமாக  ஐ. நா. அனுசரிக்கிறது. சத்தியம் மற்றும் அகிம்சையை முன்னிறுத்தி, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்துக்கு அவர் தலைமையேற்றார். அகிம்சை என்பது மனித குலத்தின் வசம் இருக்கும் மிகப்பெரிய சக்தி என்று காந்தியடிகள் கூறியுள்ளார். அது மனிதனின் புத்திக் கூர்மையால் உருவாக்கப்பட்ட மிகவும் வலிமை வாய்ந்த ஆயுதத்தைவிட சக்தி வய்ந்தது என்றும் அவர் கூறினார்.

உலக அளவில் பல தலைவர்களும், பல நாடுகளும் சமுதாயங்களும் காந்தியடிகளால் கவரப்பட்டன. மக்களை ஒன்று திரட்டுவதில் காந்தியடிகள் கையாண்ட வழியை, உலகில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் வெற்றிகரமாகப் பின்பற்றியுள்ளன. அமெரிக்காவின் மார்ட்டின் லூதர் கிங், வியட்நாமின் புரட்சித் தலைவர் ஹோ சி மின், மியான்மரின் ஔங் சான் சூ கீ ஆகிய தலைவர்கள், காந்தியடிகளைப் பின்பற்றிய மிகச் சிறந்த உதாரணமாக விளங்கிய தலைவர்களாவர்.

போலந்து நாட்டின் காந்தியாகப் போற்றப்படும் லெக் வலேசா, அந்நாட்டில் கம்யூனிசத்துக்கு எதிராக அகிம்சையைக் கையாண்டார். ஃபிலிப்பைன்ஸ் நாட்டில், சர்வாதிகார அதிபர் மார்கோஸ் அவர்களின் ஆட்சியைக் கவிழ்ப்பதில் பெரும்பங்கு வகித்த ஃபிலிப்பினோ மக்கள் சக்தி இயக்கம் காந்தியடிகளின் வழியைப் பின்பற்றியது. அகிம்சை வழியைப் பின்பற்றி, சோவியத் ஆட்சி, செக்கோஸ்லோவேகியாவில் வீழ்த்தப்பட்டது.

1990 களின் துவக்கத்தில், தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக நடத்தப்பட்ட, அகிம்சை வழியிலான வெகுஜன எதிர்ப்பு, நெல்சன் மண்டேலா அவர்களின் விடுதலைக்கும் அவர் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் வழிவகுத்தது. காந்தியடிகள் காட்டிய அகிம்சா வழியில் அபார நம்பிக்கை கொண்டிருந்த நெல்சன் மண்டேலா அவர்களின் தலைமையில், அந்நாட்டின் நிறவெறி முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது. மெக்சிகன் அமெரிக்கன் தொழிலாளர் இயக்க மற்றும் சிவில் உரிமைகள் தலைவர் சீசர் சவேஸ் அவர்கள், லேடினோ பண்ணைத் தொழிலாளர்களுக்காகப் போராடுவதில் காந்தியடிகளின் வழியைப் பெரிதும் பயன்படுத்தினார். அண்மையில், 2011 ஆம் ஆண்டின் அரபு எழுச்சியில் அகிம்சை பெருமளவில் பிரயோகப்படுத்தப்பட்டு, ஜனநாயக மற்றும் மனித உரிமைப் போராட்டம் அமைதியான முறையில் நிகழத்தப்பட்டது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில், அமைதி வழியைப் பின்பற்றிய போராளிகள், மக்களை ஒடுக்கிய சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து அந்நாடுகளில் மாற்றங்களுக்கு வித்திட்டனர். மோதல்களைக் கையாள்வதற்கு அகிம்சையும்அமைதியும் கூடிய வழிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

உலக அமைதிக்கும், உலகப் போருக்கும் இடையேயும், மனிதனின் மனோசக்திக்கும், நுகர்பொருட்கள் மோகத்துக்கு இடையேயும், ஜனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கு இடையேயும் பெரும் போர் நடைபெற்று வருகிறது என்று தலாய் லாமா அவர்கள் கூறியுள்ளார். இதனை எதிர்கொள்ள தற்காலத்தில் காந்தியக் கொள்கைகள் கைகொடுக்கும்.

மனித நேயம் தழைக்க வேண்டுமென்றால் காந்தியின் கொள்கைகளை மறக்க இயலாது என்றும், உலக அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் காந்தியடிகளின் எண்ணங்களும் செயல்களும் வழிகாட்டிகளாக இருந்தன என்றும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறினார்.

காந்தியடிகளுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லையென்றாலும், அவர் பெயர் பலமுறை பரிந்துரைக்கப்பட்டது. காந்தியடிகளைப் பின்பற்றிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மண்டேலா, டெஸ்மாண்ட் டூடூ, பராக் ஒபாமா, தலாய் லாமா, ஔங் சான் சூ கீ, அர்ஜெண்டினாவின் அடால்ஃபோ பெரெஸ் எஸ்கிவெல் ஆகியோர், அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர். எனவே, காந்தியடிகள் நோபல் அமைதிப் பரிசுக்கு அப்பாற்பட்டவர் என்பது வெளிப்படை.

காந்தியடிகள் பின்பற்றிய  அகிம்சைக் கொள்கையானது, வெறும் வன்முறையல்லாத, அமைதி வழியல்ல. மாறாக, அனைத்து செயல்களிலும் உண்மையான உள்ளன்பை வெளிப்படுத்துவதேயாகும். அகிம்சையை விரிவான வாழ்வியல் மாற்றங்களுக்கு அஸ்திவாரமாக்கினார் காந்தியடிகள். அதன் மூலம், மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையேயான உறவுகளை அவர் வலுப்படுத்தினார்.

அணுஆயுத அச்சுறுத்தல்களால் மனிதகுலமே அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள நிகழ்காலத்தில், காந்தியடிகளின் போதனைகளான அன்பு, சத்தியம், மற்றவர்களின் உரிமைக்கு மரியாதை அளித்தல் ஆகியவை பொருள் பொதிந்தவையாகத் திகழ்கின்றன.

உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மற்றும் காந்தியடிகளுக்கு இடையே பரஸ்பரம் நன்மதிப்பு நிலவியது. இருவருக்குமிடையே கடிதப் போக்குவரத்து அடிக்கடி நடைபெற்றது. வருங்காலத்தில் பல தலைமுறைகளுக்கு காந்தியடிகள் சிறந்த வழிகாட்டியாக விளங்குவார் என ஐன்ஸ்டைன் தெரிவித்தார். காந்தியடிகளின் 150 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் இவ்வேளையில் அவர் கூறியதை நினைவில் கொள்வது அவசியம். அரசியல் மேடைகளில் உயர்ந்த நிலையில் மனித உறவுகளைப் பேண, காந்தியடிகள் அறிவுறுத்தினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சர்வதேச உறவுகளில் சட்டமும் நீதியும் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதையும் அதுவே, மனித குலத்தின் வளமான வருங்காலத்துக்கு அடிக்கல் என்பதையும் நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும்.