தூய சுற்றுச்சூழலுக்கு உறுதி பூண்டுள்ள இந்தியா

(மூத்த பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

தூய்மையைப் பேணிவந்த காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது 150 ஆவது பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று, தூய்மை குறித்த பல முன்னெடுப்புக்களை இந்தியா துவக்கியது. சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தவிர்க்கவும், சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாகத் தவிர்க்க அரசு உறுதி பூண்டுள்ளது. இது குறித்து, ஒட்டுமொத்தத் தடையை அரசு அறிவிக்காவிட்டாலும், காந்தியடிகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது, 2022 ஆம் ஆண்டுக்குள், ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க அரசு மேற்கொண்டுள்ள உறுதியைப் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்தியா, ஆண்டொன்றுக்கு சுமாராக 6 கோடியே 20 லட்சம் டன் குப்பையை உற்பத்தி செய்கிறது. இதில், பிளாஸ்டிக் கழிவுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஸ்வச் பாரத் திட்டத்தை முடுக்கி விட்டதன் காரணமாகவும், கழிவு மேலாண்மையை ஒழுங்குமுறைப் படுத்த மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகவும், குப்பைகளை வீசி எறிவது, குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகளைத் தாறுமாறாக சிதறடிப்பது கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், கோப்பைகள் ஆகியவற்றிலிருந்து விஷக் கழிவுகள் வெளிப்பட்டு, மனித உடலுக்குள் சென்று, புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்கள் உண்டாவதற்கு வழி செய்வதால், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தீவிரமாக்குவது அவசியமாகிறது.

பிளாஸ்டிக் மாசுவினால் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக், பருவநிலை மாற்றங்களுக்குத் தூண்டுகோலாக அமைகிறது. ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்கின் உற்பத்தி, பயன்பாடு கழிவைக் கையாளுதல் போன்ற அனைத்து செயல்பாடுகளின் போதும், பசுமைக் குடில் வாயு வெளியேற்றப்படுகிறது. 2050 ஆம் ஆண்டு வாக்கில், மொத்த கார்பன் பதிவில் 13 சதவிகிதம் பிளாஸ்டிக் பங்கு பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளால் வெளியேறும் பசுமைக் குடில் வாயுக்களால் உலக வெப்பம் அதிகரிப்பதை 1.5 டிகிரி செல்ஷியத்திற்குள் கட்டுப்படுத்துவது சர்வதேச சமுதாயத்திற்குப் பெரும் சவாலாக விளங்குகிறது.

தவிர, பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், கோப்பைகளின் கழிவுகள் நதிகள் மற்றும் கடலில் கலந்து, அடைப்புக்கள் முதலான பிரச்சனைகளை உண்டாக்குவதால், நீர்நிலைகள் சார்ந்த சுற்றுச் சூழலின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதற்கான ஒரே வழி, பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பதே என்பதால், காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளில், அதற்கு இந்தியா முன்னுரிமை அளித்துள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க உறுதி பூண்டுள்ளதைத் தவிர, காந்தியடிகளின் தூய்மைக் கனவுகளை நனவாக்கவும் இந்தியா உறுதி கொண்டுள்ளது. 99 சதவிகித கிராமங்கள் திறந்தவெளி மலஜலக் கழிப்புகளற்ற கிராமங்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளன. கடந்த 60 மாதங்களில், இந்தியா முழுவதிலும் 11 கோடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையைப் படைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் தலைமையிலான அரசே காரணம் எனக் கூறலாம். 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோதி அவர்கள் பிரதமராகப் பதவியேற்றது முதற்கொண்டே, அரசின் முதன்மைத் திட்டமாக, தூய்மை முன்னிறுத்தப்பட்டது. கழிப்பிடங்கள் கட்டப்பட்டது, மக்களின் சுகாதாரத்துடன் நேரடியாக இணைந்த முக்கியப் பணியாக விளங்குகிறது.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேலாக, போதிய சுகாதாரமின்மையால், குழந்தைகள் உயிரிழப்பதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. உலகிலேயே மிகப் பழமையான மருத்துவப் பத்திரிக்கையான தி லான்செட், போஷாக்குக் குறைவாலும், மனிதக் கழிவுகளிலிருந்து வெளிப்படும் பாக்டீரியா தொற்றுக்களாலும், பிற சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்காததாலும், வயிற்றுப் போக்கு நோயினால் இந்தியாவில் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன எனத் தெரிவித்துள்ளது.

மலேரியா, டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் நோய்களும் போதிய சுகாதாரமின்மையால் ஏற்படுகின்றன. நோய் மற்றும் உயிரிழப்புக்களைத் தவிர்க்க, தங்கள் வாழ்க்கை நெறிகளை மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று, பிரதமர் மோதி அவர்கள் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். மக்களின் சுகாதாரத்திற்கும் நலனுக்கும் அயராது உழைத்து, ஸ்வச் பாரத் திட்டத்தை இந்தியாவின் முக்கிய முன்னெடுப்பாக எடுத்துச் சென்ற பிரதமர் மோதி அவர்களின் தலைமைக்குக் கிடைத்த அங்கீகாரமாக, அவருக்கு பில் கேட்ஸ் ஃபௌண்டேஷன் அளித்த உலக கோல் கீப்பர் விருது திகழ்கிறது.

கோடிக்கணக்கான இந்திய மக்களின் உடல்நலன், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தைப் பேணும் இந்தத் தூய்மை இயக்கத்தினால், பொருளாதாரப் பலன்களும் கணிசமாக ஏற்பட்டுள்ளன. இத்திட்டத்தால், 75 லட்சம் வேலை வாய்ப்புக்கள் உருவாகியதோடு, 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இந்தியப் பொருளாதாரத்தில் நேர்மறைத் தாக்கமும் ஏற்பட்டுள்ளதாக, ஐ.ந.வின் யூனிசெஃப் நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது. தூய்மையே இறைமை என்று கூறியது போக, தூய்மையே வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தலுக்குத் துணை என்று கூறினால் அது மிகையல்ல. சுகாதாரமிக்க, செழிப்பான சமுதாயத்துக்கு, தூய்மையான சுற்றுச் சூழல் முக்கியம் என்பதை வலியுறுத்துவது, காந்தியடிகளுக்கு அளிக்கும் அஞ்சலியாக விளங்கும்.