சவுதி அரேபியாவுடனான உறவை வலுப்படுத்தும் இந்தியா.

(மேற்காசியா குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முகமது  முடாசிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா வெங்கடேஷ் .)

இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே பாரம்பரியம் மிக்க நட்புறவு நிலவி வருகிறது. செயலுத்திக் கூட்டாளிகளான இவ்விரண்டு நாடுகளும் பல களங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்தப் பின்னணியில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் இரண்டு நாள்  பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார். அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேச்சு வார்த்தை நடத்திய தோவல், அந்நாட்டின் தேசிய  பாதுகாப்பு ஆலோசகர் முசைத் பின் ஐபான் அவர்களையும் சந்தித்தார். பல முக்கியமான இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோதி  மற்றும் இளவரசர் சல்மான் ஆகியோர் தலைமையில் அமையவுள்ள இந்திய – சவுதி செயலுத்திக் கூட்டாளித்துவ கவுன்சில் அமைப்பதற்கான வழிமுறைகள் முக்கியமாக விவாதிக்கப்பட்டன.

சென்ற மாதம் 74 ஆவது ஐ நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வழியில் ரியாத் சென்றது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370 ஆவது சட்டப்பிரிவை இந்தியா நீக்கியது குறித்து ராஜீய முறையில் இந்தியாவைச் சாடி வரும் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை மனத்தில் கொன்டு பார்க்கும் போது, இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இவ்விவகாரத்தில் சவுதி அரேபியாவின் ஆதரவைப் பெறும் நோக்குடன் தான் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

.இந்தியாவின் நிலைப்பாட்டையும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளையும் சவுதி அரேபியாவிற்குத் தெளிவாக விளங்க வைக்கும் நோக்கில் அஜித் தோவல் அவர்களின் பயணம் அமைந்திருந்தது. சவுதி அரேபியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்க்வெய்க் மற்றும் குரைசில் உள்ள அரம்கோவின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது  நடத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் மூலமான தாக்குதல்  சம்பவம், ஏமனின் ஹௌதி தீவிரவாதிகளால் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.  ஐ எஸ் ஐ எஸ் அமைப்பும் சவுதி அரேபியாவைக் குறிவத்துள்ளது.

தெற்கு மற்றும் மேற்காசியாவில் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் முக்கிய நாடுகளாக இந்தியாவும் சவுதி அரேபியாவும் உள்ளன. தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் குறித்து இஸ்லாமிய நாடுகளின் நிலைப்பாட்டை முடிவு செய்வதில் ரியாத் பெரும் பங்கு  வகித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை சவுதி அரேபியா வலுவாக ஆதரிக்கிறது. அடிப்படை வாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதில் இரு நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளுக்கிடையிலான  நெருங்கிய ஒத்துழைப்பை இது அதிகரித்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிரதமர் மோதி அவர்களின் தலைமையில் தீவிரமாகியுள்ளது.

பட்டத்து இளவரசர் சல்மான் அவர்கள் பிப்ரவரி மாதம் இந்தியா வந்த போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பயங்கரவாதக்  கட்டமைப்பும் அதற்கான நிதியுதவி வழங்கும் அமைப்புகளும் அழிக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் 40க்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் உயிர் நீக்கக் காரணமாக விளங்கிய புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் முன்னதாக, 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதான்கோட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், செப்டம்பர் மாதம் ஊரியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் ஆகியவற்றுக்குக் கண்டனம் தெரிவிக்க சவுதி அரேபியா அண்மையில் முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலையும், அதைத் தொடர்ந்து பாலாகோட்டில் இந்தியா மேற்கொண்ட துல்லியத் தாக்குதலையும் அடுத்து, சவுதி அரேபியா தெற்காசியாவில் பதட்ட நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர ராஜீய வழிமுறைகளை மேற்கொண்டுள்ளது. காஷ்மீர் குறித்த இந்தியாவின் முடிவுக்கு சவுதியின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒருபகுதி என்றும், இந்திய அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டதன் நோக்கம், அந்த மாநிலத்தை அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி  நிறைந்த தேசிய நீரோட்டத்தில் கலப்பதேயாகும் என்றும் இந்தியா திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.

தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தோவல் அவர்களின் சவுதி பயணத்தின் இன்னொரு முக்கிய நோக்கம், நிதி நடவடிக்கைப் பணிக் குழு, பாகிஸ்தானைக் கருப்புப் பட்டியலில் சேர்க்க இருப்பது குறித்ததாகும். இப்பணிக்குழுவின் முக்கியக் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

2018 ஆம் ஆண்டில்,  தனது தொடரும் தீவிரவாத ஆதரவால் நிதி நடவடிக்கைப் பணிக் குழுவின் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த பாகிஸ்தான், அக்குழுவின் பெருவாரியான நிபந்தனைகளை இதுவரை அனுசரிக்கவில்லை. இதனைத் தெரிவித்த நிதி நடவடிக்கைப் பணிக் குழுவின் ஆசிய பசிஃபிக் குழு, இதனால் இவ்வாண்டு நடைபெறவுள்ள அதன் கூட்டத்தில், பாகிஸ்தான் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளது. நிதி நடவடிக்கைப் பணிக் குழுவின் கூட்டத்தில், ஒரு நாட்டின் அரசே பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை எதிர்க்கும் நடவடிக்கைகளுக்கு சவுதி அரேபியா ஆதரவளிப்பது, இந்திய- சவுதி உறவுகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும்.

கடந்தசில ஆண்டுகளில் இரு நாடுகளின் இரு தரப்பு உறவுகள் குறிப்பிடத்தகுந்த அளவு மேம்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் மோதி அவர்கள் மேற்கொன்ட சவுதி பயணம், இருநாடுகளுக்கும் இடையேயான செயலுத்திக் கூட்டாளித்துவத்திற்கு ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது. இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதுடன், இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் சிறப்பு கவனம் செலுத்துகின்றன. மேலும், பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

___