வலுவடைந்து வரும் இந்திய, அமெரிக்க உறவுகள்.

(அமெரிக்க விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள் அண்மையில் மேற்கொண்ட தமது அமெரிக்கப் பயணத்தின்போது, இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் வர்த்தக சர்ச்சைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று தெரிவித்தார். இருநாடுகளும் வர்த்தக விஷயங்களில் பலதரப்பட்ட உண்மை நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், அவற்றுள் ஒன்று, இந்த சர்ச்சைகள் பலகாலமாக இருந்து வந்துள்ளன என்பதே என்று கூறினார். தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா அதிக வரி விதித்துள்ளதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் வில்பர் ராஸ் அவர்கள், இன்னும் சில வாரங்களில், புதுதில்லியில் இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களை சந்திக்கவிருக்கிறார். இந்திய பால் பண்ணைப் பொருட்களின் சந்தைக்குள் அமெரிக்காவின் நுழைவு, மருத்துவ சாதனங்களுக்கு விலைக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு, தகவல் தொழிநுட்பத் துறைகளின் வரியைத் திரும்பப் பெறுதல் ஆகியவை அமெரிக்காவின் வர்த்தக எதிர்பார்ப்புக்களாகும். மாறாக, அமெரிக்காவின் ஜிஎஸ்பி எனப்படும் பொது முன்னுரிமைக் கட்டமைப்பின் கீழான வரியற்ற வழிமுறைக்கு இந்தியா மீண்டும் தகுதியாக்கப்பட வேண்டும் என இந்தியா விரும்புகிறது.

அமெரிக்க உள்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, டாக்டர் ஜெய்ஷங்கர் அவர்கள், இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும், விரைவில் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் எனத் தாம் நம்புவதாகவும் கூறினார். வர்த்தக ஒப்பந்தங்கள் சிக்கலானவை என்பதால், அவற்றைத் தீர்மானிக்க அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது என அவர் தெளிவுபடுத்தினார். வர்த்தக விஷயங்கள் தவிர, ஜெய்ஷங்கர் அவர்களும், மைக் பாம்பியோ அவர்களும் இந்திய, அமெரிக்க செயலுத்தி ரீதியிலான உறவுகள், தற்போதைய காஷ்மீர் நிலை, உலக விவகாரங்கள் என, பலதரப்பட்ட விஷயங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர். சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ பசிஃபிக் பிராந்தியம் பற்றியும் இருதலைவர்களும் விவாதித்தனர். ஜெய்ஷங்கர் அவர்களும், மைக் பாம்பியோ அவர்களும் மேற்கொண்ட இந்த நான்காவது சந்திப்பு, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோதி அவர்கள் மேற்கொண்ட வெற்றிகரமான அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து, நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவின் சிந்தனையாளர்களிடையே பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர், பல உலக விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கமாக எடுத்துரைத்தார். அரசு அதிகாரிகளைத் தாண்டி, சர்வதேச விவகாரங்களில் இந்தியா பரந்த ஈடுபாட்டை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளதாக, அமெரிக்க சிந்தனையாளர்களுக்கு அவர் சுட்டிக்காட்டினர். காஷ்மீர் விஷயத்தில், அரசியலமைப்பின் 370 ஆவது பிரிவை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் அவர் தெளிவுபட எடுத்துரைத்தார். மக்களின் நீண்டகால நலனை உறுதி செய்ய, இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது என்பதை விளக்கி, அவர்களுக்குப் புரிய வைப்பதே இந்தியாவின் செயலுத்தியாக விளங்கியது. அது நிறைவேறும் வரை, இந்தியா எச்சரிக்கையுடன் செயல்படும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, இப்பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய வெளியுறவு அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார். ஐ.நா.பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராக இணைய இந்தியா முழுத் தகுதி பெற்றுள்ளது என்றும், இந்தியா நிரந்தர உறுப்பினராக இல்லாத ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் என்றும் ஜெய்ஷங்கர் அவர்கள், மைக் பாம்பியோ அவர்களிடம் எடுத்துரைத்தார். 21 ஆம் ஆண்டில், உலகம் பன்முனை நிலையை எட்டி வருகிறது என்றும், அது முன்புபோல் இருமுனை நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்றும் விளக்கிய இந்திய வெளியுறவு அமைச்சர், செயலுத்தி ரீதியாக, உண்மை நிலை புரிந்து கொள்ளப்பட்டால், அது இந்திய, அமெரிக்க உறவுகளை மேலும் நெருக்கமடையச் செய்யும் என்று கூறினார். போட்டிகளும், சிக்கல்களும் நிறைந்த உலகை எதிர்கொள்ளத் தயார் செய்து கொள்வதற்கு, மாறுபட்ட சிந்தனை அவசியம். உலக அரங்கில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்து வரும் நிலையில், இதற்கான முக்கியத்துவம் கூடுகிறது. பருவநிலை மாற்றம், பயங்கரவாதம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற சவால்களை எதிர்கொள்ள, இந்தியா மேற்கொள்ளும் நிலைப்பாட்டை துணிவுடன் வெளிப்படுத்தி, உலக அரங்கில் அதற்கான ஆதரவை இந்தியா நாடும் என்று ஜெய்ஷங்கர் அவர்கள் குறிப்பிட்டார்.

காந்தியடிகளின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வாஷிங்டனில், அமெரிக்க நாடாளுமன்ற நூலகத்தில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர், பருவநிலை மாற்றம் குறித்த சவாலை எதிர்கொள்ள காந்தியடிகள் அதிக கவனம் செலுத்தியிருப்பார் என்று கூறினார். 2022 ஆம் ஆண்டுக்குள், 175 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் உற்பத்தி இலக்கை எட்டும் நோக்கில் இந்தியா செயல்பட்டு வருகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள், புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் திறனை 450 கிகாவாட்டாக உயர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் உற்பத்தி, மின்பயன்பாட்டுத் திறன் அதிகரிப்பு ஆகியவற்றைத் தாண்டி, பருவநிலை மாற்றம் என்பது சவால் நிறைந்ததாக உள்ளது. பொதுப் போக்குவரத்து, நீடித்த வேளாண்மை, தண்ணீர் பயன்பாடு உள்ளிட்ட மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளில் முழுமையான மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியமாகிறது.