கடுமையான  சூழலை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

(டாக்டர் ஜைனப் அக்தர் ஆங்கிலத்தில் எழுதியதின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.)

அமெரிக்காவில் பத்திரிக்கையாளர்களிடையே  பேசுகையில், காஷ்மீர் விஷயத்தில் உலக சமுதாயம் மேற்கொண்ட நிலைப்பாடு குறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் தனது அதிருப்தியை வெளியிட்டார்.  அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அவர்கள் பங்கேற்ற, மோதி நலமா? நிகழ்ச்சிக்கு உலக ஊடகங்கள் அதிக ஆர்வம் காட்டியது இதற்கு ஒரு காரணம். மற்றொன்று, துருக்கி மற்றும் மலேசியா போன்ற இரு முஸ்லீம் நாடுகள் தவிர, இம்ரான் கான் அவர்களின் உரைக்கு, பிற முஸ்லீம் நாடுகள் எதுவுமே அக்கறை காட்டவில்லை. ஐ.நா.வின் 74 ஆவது பொதுக் கூட்டத்தில், இம்ரான் கான் அவர்களின் உரைக்குப் பதலளிக்க, இந்தியத் தரப்பில், இளம் முதன்மைச் செயலரை அமர்த்திய இந்தியாவின் முடிவு, இம்ரான் கான் அவர்களை மேலும் வலுவிழக்கச் செய்தது. இம்ரான் கான் அவர்களின் உரைக்கு பாகிஸ்தானில் பரபரப்பு அடங்கிய பின்னர், அவரது ஐ.நா. உரைக்கும், காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுக்கு எதிராக அவர் கையாண்ட ஒட்டுமொத்த செயலுத்திக்கும் எதிராகக் கேள்விகள் எழுந்தன.

உள்நாட்டு அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச மேடையில் பிரச்சினைகளைக் கையாள்வதில் ஏற்பட்ட தோல்வி ஆகியவற்றை முன்னிறுத்தி, பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக விமர்சனங்கள் பாகிஸ்தானில் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தைகளால் மட்டுமே தீர்க்க முடியாது என்பதும், ஒரு முழுமையான அணுகுமுறை மற்றும் புதிய நீண்ட காலக் கொள்கை தேவை என்பதும் இம்ரானின்  மீதான  ஒரு வலுவான விமர்சனம். இம்ரான் கான் அவர்களின் ஐ.நா. உரை குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய  பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) தலைவர் பிலாவால் பூட்டோ ஜர்தாரி, அங்கு அவர் பேசியதை தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள் மிகைப்படுத்தி  விட்டதாகக் குற்றம் சாட்டினார்.   ஐ.நா. மேடையில்  காஷ்மீரிகளின் நிலை பற்றிய  தனது  வாதங்களைப்  பாகிஸ்தான் பிரதமர் வலுவாக முன்வைக்கவில்லை  என்றும் அவர்  குறை கூறினார்.  மேலும், டிரம்ப் – இம்ரான் சந்திப்பும், அதிபர் டிரம்ப் அவர்களின்  அலட்சியப் போக்கும் பாகிஸ்தானில் எச்சரிக்கையுடனும் சந்தேகத்துடனும் பார்க்கப்படுகின்றன.

இந்த சந்திப்பை வெறும் புகைப்பட வாய்ப்பாகப் பயன்படுத்தியதாகவும், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள்  விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டிற்கான வாய்ப்பைப் தவறவிட்டதாகவும் இம்ரான் கான் விமர்சிக்கப்படுகிறார்.  ஐ.நா பாதுகாப்புக்  கவுன்சிலில், காஷ்மீர் விவகாரத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர பாகிஸ்தான் தவறிவிட்டது என்றும், அது பாகிஸ்தான் அரசின் மிகப்பெரும் தோல்வி என்றும் பாகிஸ்தான்  தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் விமர்சிக்கப்பட்டன.

மனித உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப முடிவு செய்த  இம்ரான் கான், இதனால் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு அனுதாபமும், இந்தியாவுக்கு எதிரான  நிலைப்பாடும்  ஏற்படும்  என்று எதிர்பார்த்தார். ஆனால், அதற்கு மாற்றாக,  அக்டோபர் இறுதிக்குள் பயங்கரவாத நிதித் தடுப்புப் பணிக்குழுவின் (எஃப்.ஏ.டி.எஃப்) கருப்புப்பட்டியலில் இடம்பெறுவதைத் தவிர்க்க, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக்  கடுமைப்படுத்துமாறு அமெரிக்கா, பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் காஷ்மீர் விஷயம் குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று தீர்மானித்து, மாற்றாக, பயங்கரவாதம் குறித்துப் பேச முடிவெடுத்தது, இம்ரான் கானின் உரையை அர்த்தமற்றதாக்கி விட்டது. எனவே, இம்ரான் கானின் முயற்சிகளுக்குப் பலன் எங்கே என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வலுவான முன்முயற்சிகளும் பயனுள்ள உத்திகளுமே சரியான பலனளிக்கும், நல்ல சொற்பொழிவு அல்ல என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுக்குப் பக்கபலமாக இருக்க உலகம் முடிவு செய்துள்ளது என்பது, பாகிஸ்தானுக்கு மறைமுகமான உணர்த்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு (OIC) மற்றும் சவுதி அரேபியா,  ஐக்கிய அரபு அமீரகம் போன்ற  பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடுகளும்  கூட, இந்த  விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கத் தயங்குகின்றன.

 

 

 

 

உள்நாட்டில், காஷ்மீர் பிரச்சினையைக் கையாள்வதில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் அரசு கண்ட தோல்விகளையும், நாட்டின் மோசமான பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த அரசு தவறியதையும்   முன்னிலைப்படுத்தி, எதிர்கட்சிகள் அணி திரண்டுள்ளன.  இந்த மாத இறுதியில், அரசாங்கத்திற்கு எதிராக, ஆசாதி பேரணி என்ற மாபெரும் பேரணியை நடத்த, ஜமைத்-உலேமா-இ-இஸ்லாம் (ஃபசல்) கட்சியின் தலைவர் ஃபசல்-உர்-ரஹ்மான் திட்டமிட்டுள்ளார். இது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் அரசுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். அரசின் தோல்விகள் குறித்து  பாகிஸ்தான் மக்களுக்கு  எடுத்துரைத்து, அரசிற்கு எதிராக மக்கள் இயக்கத்தைத் தொடங்குவதற்காக, பிலவால் பூட்டோ ஜர்தாரி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம்  மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

உள்நாட்டிலும், சர்வதேச நாடுகளிடையேயும்  பாகிஸ்தான் அரசு இறுக்கமான சூழலை எதிர்கொண்டுள்ளது. பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளை முடுக்கி விட்டால், அந்நாடு, பயங்கரவாத நிதித் தடுப்புப் பணிக் குழுவின் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயம் உள்ளது. மறுபுறம், பொது மக்களைப் பாதிக்கும் விலை உயர்வு போன்ற உள்நாட்டு பிரச்சினைகளுக்குத்  தீர்வு காணத் தவறினால், பொது மக்களின் கோபத்தையும், ஒன்றிணைந்த  எதிர்கட்சிகளையும்  பாகிஸ்தான்  அரசு விரைவில் எதிர்கொள்ள  நேரிடும்.