பங்களாதேஷுடனான உறவை வலுப்படுத்தும் இந்தியா.

(தி ஹிந்து சிறப்புப் பத்திரிக்கையாளர் கல்லோல் பட்டசார்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா அவர்கள் மேற்கொண்ட இந்தியப் பயணம், இருதரப்பு, அரசியல் மற்றும் ராஜீய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது. இந்தியாவில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று, தமது நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் பற்றி எடுத்துரைக்க, பங்களாதேஷ் பிரதமர் இப்பயணத்தைத் திட்டமிட்டிருந்தார். எனினும், இந்தியாவுக்கும், பங்களாதேஷுக்கும் இடையே அரசுமுறை ஒப்பந்தங்களும், கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டதை நோக்குகையில், இப்பயணத்தின்போது இருநாடுகளும் சில திட்டவட்டமான செயல்பாடுகளை மேற்கொண்டது தெளிவாகிறது.

பங்களாதேஷ் பிரதமரை வரவேற்றுப் பேசுகையில், இருநாடுகளுக்கும் இடையிலான கூட்டாளித்துவத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொரு இந்திய, பங்களாதேஷ் பிரஜைக்கும் வளர்ச்சியை உறுதி செய்வதேயாகும் என்று பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் குறிப்பிட்டார். கடந்த ஆண்டில் இருநாடுகளும் ஒன்பது திட்டங்களைத் துவக்கியதைக் குறிப்பிட்ட மோதி அவர்கள், ஷேக் ஹஸீனா அவர்களின் இப்பயணத்தின்போது, மேலும் மூன்று திட்டங்களைப் பட்டியலில் இணைத்தார்.

மொத்த அளவில் சமையல் எரிவாயு சப்ளை செய்தல், தொழிற்திறன் மற்றும் டாக்காவின் ராமகிருஷ்ணா மிஷனில், விவேகானந்தா பவன் நிர்மாணம் ஆகியவை குறித்த மூன்று ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. பங்களாதேஷிலிருந்து சமையல் எரிவாயுவைப் பெறுவதன் மூலம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் தேவைகளை நிறைவேற்ற உதவிகரமாக இருக்கும். பங்களாதேஷ் – இந்தியா தொழில்திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம், பங்களாதேஷின் மனிதவளத்திற்கு உதவுவது மற்றொரு திட்டமாகும்.

கடலோரக் கண்காணிப்பு, சட்டோக்ரம் மற்றும் மோங்லா துறைமுகங்களை இந்தியக் கப்பல்கள் பயன்படுத்திக் கொள்வது, திரிபுராவிலுள்ள சப்ரூம் நகருக்குக் குடிநீர் வழங்க பங்களாதேஷின் ஃபெனி நதியிலுருந்து 1.82 கியூசெக் தண்ணீரை இந்தியா எடுத்துக் கொள்வது ஆகியவை குறித்து ஏழு ஒப்பந்தங்கள் கையெழுதிட்டப்பட்டன. கடந்த சில மாதங்களாக சர்ச்சைக்குள்ளாகியிருந்த திரிபுரா குடிநீர் வழங்கல் விஷயத்தில், ஃபெனி நதி ஒப்பந்தத்தின் மூலம், நிலையான தண்ணீர் சப்ளை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலோரக் கண்காணிப்பு ஒப்பந்தத்தின் மூலம், இருநாடுகளுக்குமிடையிலான பொது கடற்கரைகளில் கண்காணிப்பு உபகரணங்கள் மற்றும் கட்டமைப்பை இந்தியா உருவாக்க ஏதுவாகும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 20 கண்காணிப்பு அமைப்புக்கள் உருவாக்கப்படும் என்றும், அதனால் இருநாடுகளிலும் கடலோரக் கண்காணிப்பு மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், ஒரு மதச்சார்பற்ற, முற்போக்கான நாடு என்று, உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா அவர்கள் எடுத்துரைத்தார். மேலும், 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு – செப்டம்பர் முதல், மியான்மரிலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்க்யா அகதிகள் தங்கள் நாட்டில் குடியேறியதை பங்களாதேஷ் எதிர்கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மியான்மரின் ரகைன் பிராந்தியத்துக்கு ரோஹிங்க்யா அகதிகளை விரைவில் திருப்பியனுப்பும் விஷயத்தில், மேலும் உயிர்ப்பான நடவடிக்கைகளை எடுத்து உதவுமாறு இந்தியாவை அவர் கேட்டுக் கொண்டார். பங்களாதேஷில் உள்ள சிட்டகாங் மலைப்பகுதியில், அகதிகள் முகாமில், 11 லட்சம் ரோஹிங்க்யா அகதிகள் தங்கியுள்ளனர். ரோஹிங்க்யா அகதிகளுக்கு உதவும் வகையில் இந்தியா அளித்துவரும் வருடாந்திரத் தொகையான 120 கோடி ரூபாய் உதவித்தொகையின் ஐந்தாவது தவணையை விடுவிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. மியான்மரின் ரகைன் பிராந்தியத்தில், ரோஹிங்கியர்களுக்கான குடியிருப்பு ஒன்றை இந்தியா அண்மையில் நிறுவியுள்ளது. இவ்வாறான மேலும் பலதிட்டங்கள் மூலம், ரோஹிங்கியர்களை மறுகுடியமர்த்துவதில் உதவ இந்தியா திட்டமிட்டுள்ளது. ரோஹிங்க்ய அகதிகள் பிரச்சனையைத் தாங்கள் கையாண்ட விதம், அமைதியான முறையில் இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண பங்களாதேஷ் உறுதி கொண்டுள்ளதை வெளிப்படுத்துவதாக ஷேக் ஹஸினா அவர்கள் குறிப்பிட்டார். மியான்மரிலிருந்து குடி பெயர்ந்து பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள பௌத்த அரகனீஸ் சமுதாயத்திற்கு உதவ, இந்தியா 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

ரோஹிங்க்ய அகதிகளின் எதிர்காலம் குறித்து ஆசியான் உச்சி மாநாட்டிலும் பங்களாதேஷ் எடுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்ஸாமில் நடைபெற்று வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பங்களாதேஷ் பிரதமர் குறிப்பிட்டபோது, அது நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட வழிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், அது இன்னும் முடிவடையவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் எடுத்துரைத்தார். இவ்விஷயத்தை பங்களாதேஷ் கவனித்து வருவதாகவும், இது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் பங்களாதேஷ் வெளியுறவுச் செயலர் ஷஹிதுல் ஹக் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தையும் ஊழலையும் தங்கள் அரசு சிறிதளவும் பொறுத்துக் கொள்ளாது என்றும், தெற்காசிய நாடுகள், பெரும்பான்மை – சிறுபான்மை என்ற கண்ணோட்டத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா அவர்கள் மீண்டும் வலியுறுத்தினார். அவரது இந்த இந்தியப் பயணத்தின்போது, டீஸ்டா தண்ணீர் ஒப்பந்த விஷயத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.

2020 ஆம் ஆண்டில், பங்கபந்து ஷேக் முஜிபுர் ரெஹ்மான் அவர்களின் நூற்றாண்டு விழாக் கொண்ட்டாட்டங்களில் பங்கேற்க பங்களாதேஷ் வருமாறு, பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு ஷேக் ஹஸீன அவர்கள் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பு, பிரதமர் திரு நரேந்திர மோதியின் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.