முன்னேற்றப் பாதைக்கு வழிகோலும் இந்தியப் பொருளாதார உச்சி மாநாடு.

(மூத்த பத்திரிக்கையாளர் ஜி ஸ்ரீநிவாசன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் – ஆர் ராஜ்குமார் பாலா.)

புதுப்பிக்கவல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்து நிலைத்த பொருளாதாரத்தை உருவாக்கும் கண்ணோட்டத்தால் ஊக்கம் பெற்ற இந்தியாவின் கொள்கைகள், பத்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற பெரும் இலக்கை உலக அளவில் வலுவுடன் எட்டுவதை உறுதி செய்யும். புதுதில்லியில், இந்திய தொழில் குழுமத்துடன் (சி ஐ ஐ) கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தின் பரந்துபட்ட முடிவு இதுதான் என்று  உலகப் பொருளாதார மன்றத் தலைவர் பெர்ஜ் பிரெண்டே அவர்கள் கூறினார். குறிப்பாக, இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் தலைவர்களும், வர்த்தகப் பிரதிநிதிகளும் இந்த நம்பக்கூடிய கருத்தை ஆமோதித்தது தான் இன்னும் முக்கிய அம்சமாகும். மற்ற உலக நாடுகளுக்கு இந்தியா தன்னை ஒரு முன்மாதிரியாக வழிகாட்டும் காரணியாக நிலைநிறுத்தும் என்பதும், உலகளாவிய முக்கிய சவால்களுக்குத் தீர்வாக, அளவிடத்தக்க, பின்பற்றக்கூடிய மாதிரித் திட்டங்களை உலகத்துக்கு வழங்கும் தலைமைப் பண்பைப் பெற்ற நாடாக  இந்தியா உருவெடுக்கும் என்பதும் அனைவரும் ஒருமனதாக ஏற்ற கருத்தாக விளங்கியது. கார்ப்பரேட் துறை வரிக்குறைப்புச் சலுகைகள், வங்கி இணைப்புகள் போன்ற அண்மை சீர்திருத்தங்களைக் குறிப்பிட்ட உலகப் பொருளாதார மன்ற மேலாண்மை இயக்குனர் சரிதா நய்யார் அவர்கள், முதலீடுகள் செய்ய உகந்த நாடாக இந்தியா ஒரு ஈர்ப்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். கார்ப்பரேட் துறை வரிக் குறைப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்த மிகவும் தேவைப்படும் நடவடிக்கையாகும். தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் இணைந்து, தனது பரந்து விரிந்த உள்நாட்டுச் சந்தைகளின்  போட்டிபோடும் திறனைப் பயன்படுத்தி, இந்தியா தனது நிலையை உயர்த்திக்கொள்ளும்.

பிரதேச, இன ரீதியான, மொழிசார்ந்த பன்முகத்தன்மை உட்பட, இந்த வட்டாரத்தின் பன்முகத்தன்மையின் உள்ளார்ந்த ஆற்றலைப் பயன்படுத்தி, வறுமை போன்ற, தெற்காசியா சந்திக்கும் பொதுவான சவால்களை சந்திக்க இணைந்து செயல்படவேண்டும் என்று பங்களாதேஷ் பிரதம மந்திரி ஷேக் ஹஸீனா அவர்கள் வலியுறுத்தினார். பங்களாதேஷில் பல்வேறு துறைகளில் ஈடுபட இந்திய வர்த்தகத்துக்குப் பெரும் ஆற்றல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை இணைத்து இந்திய முதலீட்டாளர்கள் பங்களாதேஷில் தொழிற்சாலைகளைத் துவங்க வேண்டும் என்று அந்நாடு கோருவதாக ஹஸீனா அவர்கள் கூறினார். இந்தத் தொழிற்சாலைகள் மூலமாக, மேம்படுத்தப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலம் சார்ந்த அரசியல் பிரச்சனைகளைக் கைக்கொண்டு, பொருளாதார விஷயங்களில் ஒத்துழைப்பை உருவாக்க பாகிஸ்தான் ஆர்வமில்லாத காரணத்தால் தடைப்பட்டிருந்த சார்க் நாடுகள் இடையேயான வட்டார வர்த்தக ஒப்பந்தத்தை இனி உணர்வுபூர்வமாக எட்ட வழி பிறக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

தனது அண்டைநாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தத் தொடர்ந்து முயன்றுவரும் இந்தியாவின் முயற்சிகளை வலியுறுத்திய இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள், ஒரு நாடு தவிர்த்து, முழுமையாக அனைத்து அண்டை நாடுகளும் வட்டார ஒத்துழைப்பில், உண்மையில், நல்ல முறையில் செயல்பட்டுவருவதாகத் தெரிவித்தார். உலக சமூகமே இந்தியாவின் உள்நாட்டு விஷயமாகக் கருதும் காஷ்மீர் பிரச்சனையை உலக அரங்கில் தோல்வி முகத்தோடு எழுப்பும் பாகிஸ்தானை மனதில் வைத்துத் தான், ஒரு நாடு தவிர்த்து, என்று டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் குறிப்பிட்டார்.

இந்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் அவர்கள் குறிப்பிட்டது போன்று, இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யாததற்கு எந்தவித கட்டமைப்பு சார்ந்த காரணமுமில்லை என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பர் ராஸும் நம்பிக்கை தெரிவித்தார். இருநாடுகளின் சந்தைகளில் உள்நாட்டுப் பொருட்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட சில பிரச்சனைக்குரிய இருதரப்பு விஷயங்களில், விரைவாகத் தீர்வு காண இதனால் ஊக்கம் பிறக்கும். வளர்ச்சிப் பாதையில் விரைவாக முன்னேற வேண்டுமானால், மின்னணு வணிகம் மூலமாக விலை மலிவான பொருட்கள் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கும் வகையில், சில்லறை விற்பனையாளர்களின் நலன்கள் விஷயத்தில், இந்தியா சரிசமமான போக்கைப் பின்பற்ற வேண்டும் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவின் சிறு வணிகர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு அழிந்து விடாமல் இருக்க, பெரிய மூலதனத்தின் ஆள் பலத்தைப் பயன்படுத்துவதையோ, அல்லது மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடுவோர், பேராசை மிகுந்த விலை நிர்ணய அமைப்புகளாகச் செயல்படுவதையோ அனுமதிக்க முடியாது என்று அமைச்சர் கோயல் அவர்கள் மீண்டும் தெரிவித்தார். கார்ப்பரேட் வரி விகிதக் குறைப்பு, அரசுத் துறை பங்கு விலக்கல், சொத்து பணமாக்கல் நடவடிக்கைகள் ஆகிய சீர்திருத்தங்களும், இன்னும் வரவிருக்கும் சீர்திருத்தங்களும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுக்கும் என்று நித்தி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் அவர்கள் கூறினார். கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சுமார் 7.5 சதவிகிதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

இந்தியாவை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த இரண்டு நாள் பொருளாதார உச்சிமாநாட்டில், தனது குடிமக்களுக்கு நீடித்து நிலைத்த வளர்ச்சியை உறுதி செய்யும் பாதையில் இந்தியா பெற்றுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் எடுத்துரைக்கப்பட்டது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்ட, உருப்படியான கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை விடாமல் மேற்கொண்டு வரும் இந்தியாவின் முயற்சிகள் குறித்தும் இந்த உச்சி மாநாடு உலகுக்கு உரத்துச் சொன்னது.