இந்திய விமானப் படையில் இணையும் ரஃபேல் போர் விமானம்.

(பாதுகாப்பு துறை ஆய்வாளர் உத்தம் குமார் பிஸ்வாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –  லட்சுமணகுமார்.)

ஃப்ரான்ஸிடமிருந்து இந்தியா  பெறவுள்ள அணுஆயுதத் திறன் கொண்ட 36 ரஃபேல் போர் விமானங்களில், முதல் விமானம், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களிடம் சம்பிரதாய முறைப்படி ஃப்ரான்ஸிலுள்ள மெரிநாக் (MERIGNAC)  விமானப்படை தளத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன்மூலம், இந்திய விமானப் படை, கணிசமான அளவில் தனது போர்த்திறத்தையும், தொழில்நுட்ப நவீனத்தையும் பெருக்கிக் கொண்டு, எதிரிகளைவிட மேம்பட்ட நிலையை எய்துவது சாத்தியமாகியுள்ளது. ராணுவரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகள், வழக்கமான, வழக்கத்தைத் தாண்டிய மற்றும் செயலுத்தி ரீதியிலான போர்த்திறனில் மேன்மை நிலையை அடைய முயற்சிப்பது இயற்கையானதே.

இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடு, ஐ ந பொதுச் சபை உட்பட, பல்வேறு தளங்களிலிருந்து அணுஆயுத அச்சுறுத்தலைத் தொடர்ந்து விடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், ரஃபேல் விமானம் இந்திய விமானப் படையில் சேர்க்கப்படுவது, இந்தியாவின் இராணுவ வலிமையை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.  எதிரிகள் இராணுவத் தளவாடங்களை அதிகரித்து கொண்டும், உலகம் முழுவதும் புதுப் புது இராணுவ தொழில்நுட்பங்களை  உருவாக்கிக் கொண்டும் வரும் சமயம், இந்தியா, அதற்கேற்ப தனது இராணுவத் தளவாடங்களை அதிகரிக்கத் திட்டம் வகுப்பது இயல்பே. இந்த ஒரு சூழலில்தான், அணுஆயுதத் திறன் கொண்ட போர் விமானம் வாங்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

கடுமையான தேர்வுமுறையைக் கையாண்ட இந்திய விமானப்படை, மொத்தம் 600 அம்சங்களை விதித்துப் பட்டியலிட்டது. இதில் 590 அம்சங்கள் தேர்வுக்குத் தகுதிபெற அத்தியாவசமானவை என்று குறிப்பிட்டு, ஆறு வெளிநாட்டு நிறுவங்களைச் சேர்ந்த 4 ஆம்  கூடுதல் தலைமுறை ரக வெளிநாட்டுப் போர் விமானங்களை ஆய்வு செய்தது. அவ்வாறு பரிசோதிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டதுதான் ரஃபேல் விமானம். மீடியம், மல்டிரோல் காம்பேட் (MMRC)  ரகத்தைச் சேர்ந்த  ரஃபேல் போர் விமானம், வான் வெளியில் இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்த பல மடங்கு உபயோகமாக இருக்கும்.  ரஷ்யத் தயாரிப்பான சுகோய் எஸ் யூ – 30 எம்கேஐ (SUKHOI  SU – 30MKI), மிக் 29, பிரெஞ்சுத் தயாரிப்பான மிராஜ் 2000 ( mirage – 2000) மற்றும் உள்நாட்டிலேயே ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரக விமானங்கள் ஆகியவை,  தற்போது இந்திய வான்வெளியைக் காக்கும் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றன.

பன்முகத் திறன் கொண்ட ரஃபேல் விமானம், வான் வெளியில் தன்னிகரில்லாத் திறமையுடன்,   அணுஆயுத எதிர்ப்பு உட்பட, அனைத்து வகையான போர் நடவடிக்கைகளும் மேற்கொள்ளும் திறன் கொண்டது.  ரஃபேல் விமானத்தை விமானப் படையில் சேர்ப்பதன் மூலம், இந்தியாவின் வான்வெளியில் நுழையத் தைரியம் கொண்ட  எதிரிகளே  இல்லை என்ற நிலையை  இந்தியா எட்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அண்டை நாட்டிடமிருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்தாலும், இந்தியா  அமைதியையே விரும்புகிறது. இந்த  நிலைப்பாட்டின் அடிப்படையில், இந்தியா எப்போதும் ‘தடுப்பு நடவடிக்கை’ என்ற கொள்கையைக் கையாண்டு வருகிறது.  ரஃபேல் விமானத்தை இந்திய விமானப்படையில் சேர்ப்பதன் மூலம் படையின் போர்த் திறம் அதிகரித்துள்ளது. ரஃபேல் போர் விமானம், தாக்குதலுக்காக அல்ல, தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே  பயன்படுத்தப்படும் என்று  பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள்   விமான ஒப்படைப்பு நிகழ்ச்சியில் பேசியபோது கூறினார்.  இராணுவத் திறனை மேம்படுத்துவது என்பது, போரைத் தவிர்க்கத்தானே ஒழிய, அதனை ஊக்குவிக்க அல்ல என்றும், எதிரிகள் போர் புரிய முனைவதைத் தவிர்க்கவே என்றும் அவர் கூறினார்.

வருங்காலத்தில், போர் சூழல் ஏற்பட்டால், அதில் இந்திய விமானப்படை மிக முக்கியப்  பங்கு வகிக்கும். தொலைவில் இருந்தே திறமையுடன், இலக்கைத் தாக்கக்கூடிய வலிமை, இந்திய  விமானப்படையின் முக்கிய தடுப்பு நடவடிக்கை அஸ்திரமாக விளங்கும்.

எந்த ஒரு நாட்டின் அரசியல் நோக்கமும்  விமானப்படையின் சரியான பயன்பாட்டை பொறுத்து அமையும். கடந்த பிப்ரவரி மாதம் பாலாகோட்  தீவிரவாத  முகாம்  மீது நடத்தப்பட்ட தாக்குதல் இதற்கு ஒரு நல்ல உதாரணம். இந்திய விமானப்படை வலிமையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திறமையான விமானப்படையை உருவாக்குவது அவசியம். மேலும், தற்போது பயன்பாட்டில் இருக்கும்  ஓய்வுபெறும் நிலையில் உள்ள போர் விமானங்களுக்குப் பதிலாக, புதிய போர் விமானங்களை உடனடியாக பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. குறுகிய காலகட்டத்தில் போர் விமானங்களை வாங்க இயலாது. அவை அதிக காலம் எடுக்க கூடியவை. போர் விமானங்கள் உற்பத்தி என்பது, ஏகப்பட்ட, விலையுயர்ந்த பாகங்களைப் பலநிலைகளில் உற்பத்தி செய்து ஒருங்கிணைக்கும் பணியை  உள்ளடக்கியதாகும். ஆகையால், அரசியல் நிலையில் முடிவெடுக்க எடுத்துக் கொள்ளும் காலத்தை வெகுவாகக் குறைத்து, விமானப்படையின் எதிர்ப்பு திறனை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

36 ரஃபேல் போர் விமானங்களை 36 மாதத்துக்குள் நேரடியாக வாங்குவது என்ற அரசின் முடிவு, வழக்கத்தைத் தகர்த்தெரிந்த புதுமைமிக்க ஒன்றாகும்.  ரஃபேல் விமானத்தை விமானப்படையில் சேர்ப்பதன் மூலம், இந்திய விமானப்  படையின் திறம் பன்மடங்கு அதிகரிக்கும். மேலும், இந்திய விமானப்படையின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு வலுவூட்டுவதோடு, எதிர்காலங்களில் போர் மூள்வதை தடுக்கத் தேவையான ஒட்டு மொத்த தடுப்பு  நடவடிக்கைக்கும் ரஃபேல் வலுசேர்க்கும் என்பதில் ஐயமில்லை.