எரியாற்றலில் அமோக வளர்ச்சியைக் காணும் இந்திய, அமெரிக்க உறவுகள்.

(மூத்த பொருளாதார ஆய்வாளர் சத்யஜித் மொஹாந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், அண்மையில் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தின்போது, ஹியூஸ்டன் நகருக்கு வந்தவுடன், ’ஹியூஸ்டன் நகருக்கு வந்துவிட்டு எரியாற்றல் குறித்துப் பேசாமலிருப்பது சாத்தியமல்ல’ என்று தமது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். எரியாற்றலில் உலகில் முன்னணியில் நிற்கும் நகரங்களுள் ஒன்றாக, டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஹியூஸ்டன் விளங்குகிறது. பிரதமரின் அமெரிக்கப் பயணத்தில் முதலில் சென்றடையும் நகரமாக ஹியூஸ்டன் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, இந்திய, அமெரிக்க உறவுகளில் எரியாற்றல் துறையின் பிணைப்புக்கள் முக்கிய இடம் வகிக்கும் என்பது தெளிவாகிறது. பிரதமர் தமது டுவிட்டர் செய்தியை வெளியிடும் முன்பாக, அத்துறை சார்ந்த உலக முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து, எரியாற்றல் துறையில் முதலீடு செய்வது குறித்துப் பேசினார். மோதி நலமா? நிகழ்ச்சியில், பிரதமர் மோதி அவர்களுடன் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அவர்களும், இந்திய, அமெரிக்க உறவுகளில் எரியாற்றல் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே, எரியாற்றல் துறையில் செயலுத்தி ரீதியிலான கூட்டாளித்துவம் ஏற்பட்டதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர். அமெரிக்காவில், எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தைக் கண்டறிந்து, உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில், சட்டம் மற்றும் முதலீட்டுத் தடைக்கற்களை அகற்ற, ’அமெரிக்காவிற்கு முதலிடம் அளிக்கும் எரியாற்றல்’ என்ற திட்டத்தை அதிபர் டிரம்ப் அவர்கள் கையிலெடுத்துள்ளார். அதிவேக வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவின் எரியாற்றல் தேவைகளும் அதிகரித்து வரும் நிலையில், புதுப்புது எரியாற்றல் கொள்முதலுக்கான நாடுகளை இந்தியா நாடுகிறது. இதனால், எரியாற்றலுக்காக ஒருசில நாடுகளை மட்டுமே நம்ப வேண்டிய நிலையை இந்தியா மற்றியமைக்க விரும்புகிறது. பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவதில் தீவிரமாக இருக்கும் இந்தியா, எரிவாயுவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கி நகர முற்பட்டுள்ளது.

எரியாற்றலைப் பொறுத்தவரை, உற்பத்தி நாடுகள் தங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் வகையில் திட்டமிட்டு எடுத்த நடவடிக்கைகளால் இந்தியா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளுமே பாதிப்புக்கு உள்ளாயின. கச்சா எண்ணெய்க்காக, வளைகுடா நாடுகளை மட்டுமே நம்பியிருக்க விழையாத இந்தியா, கச்சா எண்ணெய்க்காக மற்ற நாடுகளை நாடுவதில் தீவிரம் காட்டியுள்ளது. இந்நிலையில், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளை செய்யும் முக்கிய நாடாக அமெரிக்கா உருவெடுத்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியது. கடந்த இரு ஆண்டுகளில் இது மிக அதிக அளவை எட்டியுள்ளது. அமெரிக்காவிலிருந்து எரிவாயு இறக்குமதியும் கடந்த ஆண்டு துவங்கியுள்ளது. இதனால், இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும்  வாய்ப்பு பெருகியுள்ளது.

எரியாற்றல் துறையில் பாதுகாப்பையும், செயல்திறனையும் அதிகரிக்க, இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த ஆண்டு, எரியாற்றல் செயலுத்திக் கூட்டாளித்துவத்திற்கான தங்கள் முதல் கூட்டத்தைக் கூட்டின. இக்கூட்டத்திற்கு, இந்தியத் தரப்பில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களும், அமெரிக்கத் தரப்பில், எரியாற்றல் துறை அமைச்சர் ரிக் பெர்ரி அவர்களும் தலைமை தாங்கினர். இரு தலைவர்களும், எண்ணெய் மற்றும் எரிவாயு, எரியாற்றல் செயல்திறன், புதுப்பிக்கத்தக்க எரியாற்றல் மற்றும் நீடித்த வளர்ச்சி மற்றும் நிலக்கரி ஆகிய நான்கு தூண்கள் சார்ந்த ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுத்தனர்.

இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட் மற்றும் அமெரிக்காவின் டெல்லூரியன் ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையே, 750 கோடி டாலர் அளவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில், 250 கோடி டாலர் அளவில், ட்ரிஃப்ட்வுட் எரிவாயு ஏற்றுமதித் துறைமுகத்தின் 18 சதவிகிதப் பங்கு, பெட்ரோனெட் நிறுவனத்திற்கு அளிக்கப்படும். இந்தப் பங்குத் தொகைக்கு ஈடாக, ஆண்டொன்றுக்கு 50 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான எரிவாயு உரிமை பெட்ரோநெட் நிறுவனத்துக்குக் கிடைக்கும். பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், ஷேல் எரிவாயுத்துறையில், அமெரிக்காவுடனான மிகப்பெரும் அயல்நாட்டு முதலீடுகளில் ஒன்றாக விளங்குகிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெருமளவில் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. கெயில், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள், அமெரிக்க எரிவாயுத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளன. இந்திய நிறுவனங்கள், தொழில்நுட்பப் பரிமாற்றம் மூலம் பயனடைய இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கின்றன.

இந்தியாவில் முதலீட்டுக்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதையும், பெருநிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டதையும் உலக எரியாற்றல் நிறுவனத் தலைவர்கள், பிரதமருடானான சந்திப்பின்போது பாராட்டினர். மோதி அவர்களின் ஆட்சியில், அயல்நாட்டு எரிவாயுத்துறையில் இந்தியாவின் முதலீடுகள் 8500 கோடி டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது என, உலக எரிவாயு முகமை தெரிவித்துள்ளது. உலகிலேயே அதிக அளவில், அதாவது, 12 சதம் அதிகரித்து இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த முகமை குறிப்பிட்டுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில், ஹைட்ரோ கார்பன் துறைகளில், இந்தியாவில் 30,000 கோடி டாலர் அளவில் முதலீடு செய்யும் வாய்ப்பினை இந்தியா அளிக்கவுள்ளது.

பேஸ் எனப்படும் மேம்பட்ட தூய எரியாற்றல் திட்டத்தின் கீழ், சிவிலியன் அணு ஒப்பந்தம், மின்கட்டமைப்பில் முதலீடுகள் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்ல இந்திய, அமெரிக்க எரியாற்றல் துறை ஒப்பந்தம் வழி செய்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையே உறவுகள் வலுப்பட்டு வரும் நிலையில், வருங்காலத்தில், எரியாற்றல் துறையில் இந்திய,. அமெரிக்கப் பிணைப்புக்கள் அமோக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.