புதிய உச்சத்தைத் தொடும் இந்தியாவின் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு கூட்டாளித்துவம்.

(பத்திரிக்கையாளர் வினித் வாஹி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – த.க.தமிழ்பாரதன்.)

இந்தியாவின் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பில் பங்கு கொண்டுள்ள கூட்டாளி நாடுகளுடன், சமத்துவம் மற்றும்  இறையாண்மையில் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில், மேம்பாட்டு ஒத்துழைப்புக்குத் தான் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அண்மையில், இ-வித்யாபாரதி மற்றும் இ-ஆரோக்யபாரதி ஆகிய திட்டங்களையும், தொலைக்காட்சி வாயிலாகக் கல்வி மற்றும் தொலைக்காட்சி வாயிலாக மருத்துவம் ஆகிய மாபெரும் திட்டங்களையும் ஆப்ரிக்காவிற்காக இந்தியா தொடங்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு கூட்டாளித்துவம்(ஐடீஈசி) துவங்கி, 55 ஆண்டுகள் பூர்த்தியானதைக் கொண்டாடும் விதமாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்தால் நிறைவேற்றப்பட்ட மிகப்பெரிய திட்டங்களுள் ஒன்றாக இந்த ஆப்பிரிக்காவுக்கான திட்டங்கள் விளங்குகின்றன.

இத்திட்டங்களின் வாயிலாக, ஆப்பிரிக்க மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே, முதன்மையான இந்தியக் கல்வியைப் பெறமுடியும். அதேபோல், இந்திய மருத்துவ நிபுணத்துவத்தை ஆப்பிரிக்க மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் பயனளிக்கும் வகையில் அளிக்க முடியும். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில், முன்னேற்றத்திற்கான கூட்டுறவு எப்போதும் மையமாகவே இருந்திருக்கிறது. கூட்டு நாடுகளுடன் நம்பகமான மற்றும் உறுதியான வளர்ச்சிக்குத் தனது எழுபதாண்டு வளர்ச்சி அனுபங்களை இந்தியா பகிர்ந்து வருவதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள், ஐடீஈசியின் 55 ஆவது ஆண்டு விழாவில் பேசுகையில் தெரிவித்தார்.

ஐடீஈசி அமைப்பானது, ஆப்பிரிக்காவின் 54 நாடுகள் பயனடைய உருவாக்கப்பட்ட ஒன்று. டிஜிடல் புரட்சியின் பயன், ஆப்பிரிக்க இளைஞர்களைச் சென்றடைய வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் தொலைநோக்கில் உருவானது. மனிதவள மேம்பாடு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையிலும், மேம்பாட்டுக்கான கூட்டுறவிலும் முக்கிய அங்கமாக விளங்குகிறது. ஐடீஈசியும்,, பிற திறன் வளர்ப்பு முன்னெடுப்புக்களும், உலக வளர்ச்சியும், செழிப்பும் பிரிக்க முடியாதவை என்ற கோட்பாட்டில் இந்தியா கொண்டுள்ள நம்பிக்கையின் உறைவிடங்களாகத் திகழ்கின்றன. இதில் தனது பங்கை நிறைவேற்றும் பொருட்டு, பல ஆண்டுகளாக, வளர்ச்சியில் தான் பெற்ற தனது திறன்களையும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்ள, இந்தியா தயாராக உள்ளது.

உண்மையில், ”உலகின் தெற்கு நாடுகள், இந்தியாவின் முதன்மைக் கூட்டாளிகள்” என்று ஜெய்ஷங்கர் அவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில்,  புதிய முன்முயற்சிகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தியாவும், ஆப்பிரிக்காவும் உலகின் 630 கோடி மக்களின் உறைவிடங்களாக உள்ளன. “நம்மிடையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே, வணிகம் மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றம் வாயிலாக, வரலாற்று உறவுகள் இருந்து வந்துள்ளன” என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார். “நம் முன்னோர்கள் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக ஒன்றாகப் போராடியவர்கள். இன்று நம்முடைய இருதரப்பு வணிகம், 22,000 கோடி டாலர் அளவை எட்டியுள்ளது.” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் தனிப்பட்ட வளர்ச்சி அனுபவங்களை, திறன் வளர்த்தல் மற்றும்  பயிற்சி ஆகியவற்றின் மூலம், 161 நாடுகளில் உள்ள 2 லட்சம் அரசு அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்வதில், கடந்த 55ஆண்டுகளாக, ஐடீஈசி உதவியுள்ளது.. அண்டை நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க கூட்டு நாடுகளுடனான உறவிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, தகவல் தொழில்நுட்பம், உடல்நலம், வேளாண்மை, நிர்வாகம், தொழில் முனைவு, எரியாற்றல், நாடாளுமன்றப் படிப்பு ஆகிய துறைகளில், ஆண்டு தோறும், 12,000 பேருக்கு உதவித் தொகையை இந்தியா வழங்குகிறது. இது மேலும் விரிவடையும்.

உலகில் பன்முகத் தன்மையை உறுதி செய்ய, இந்தியா அளித்து வரும் ஆதரவானது, உலக நாடுகளுடனான பரஸ்பர பிணைப்புக்கள் மற்றும் சார்புநிலை ஆகியவற்றின் மீதான இந்தியாவின் கொள்கைப் பிடிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ”உலகம் முழுவதும் ஒரே குடும்பம்” என்ற இந்தியத் தத்துவத்தை இது பிரதிபலிப்பதாக, ஜெய்ஷங்கர் அவர்கள், ஐடீஈசி நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட்டார்.

சமீபத்திய இருதரப்பு மற்றும் பலதரப்பு சந்திப்பின் போதும், வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரக் கூட்டுறவுக்கான முன்னெடுப்பு அமைப்பு (BIMSTEC), தென்கிழக்காசிய நாடுகள் அமைப்பு (ASEAN), கரீபியன் அமைப்பு, ஃபிபிக் (FIPIC) போன்ற மேடைகளிலும், ஐடீஈசி அமைப்பின் பயிற்சிகள் பற்றிய நிகழ்ச்சி நிரல் குறித்து அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டன. ’அண்டைநாடுகளுக்கு முதலிடம்’ என்ற இந்தியாவின் பிராந்திய முன்னுரிமைக்கு இது எடுத்துக்காட்டு என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.

கடந்த எழுபதாண்டு காலமாக, சுதந்திர நாடாக விளங்கும் இந்தியாவின் வளர்ச்சி அனுபவங்களைப் பகிர்ந்துணருமாறு, ஆசியா, ஐரோப்பா, மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த 161 நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.  தொடக்கத்தில் இருந்து இதுவரை, ஐடீஈசி திட்டத்தின் கீழ், 200 கோடி டாலர் செலவிடப்பட்டுள்ளது, இதன் மூலம், உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களும், தொழில் நிபுணர்களும் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், கடந்த சில ஆண்டுகளாக, சராசரியாக, ஓராண்டுக்கு 10 கோடி டாலர் அளவிற்கு செலவு செய்யப்பட்டுள்ளது.

வளரும் நாடுகள் இயற்கை வளமும், மனித வளமும் படைத்தவையாகத் திகழ்கின்றன என்பதை இந்தியா உணர்ந்துள்ளது. ஆனாலும், இந்நாடுகள், மக்களின் ஆதாரங்களில் சமநிலை எய்தாமை, வளர்ந்து வரும் சமநிலையற்ற தன்மை, இளைஞர்களின் எதிர்பார்ப்புக்கள், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொள்கின்றன. இச்சவால்களை சமாளிக்க, அயல்நாடுகளுடனான உறவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்ட ஒத்துழைப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கூறினார்.