“ அதிகரிக்கும் இம்ரான்கானின் இன்னல்கள்”

 

டாக்டர் அசோக் பேகூரியா  அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ.வெங்கடேசன்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் சீனாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஜெனரல் குவாமர் பாஜ்வா  அவர்கள், சீனாவின் ராணுவ தலைவர் ஜெனரல்  ஷாங்க் யூஷியா அவர்களையும், மற்றும்  மக்கள் விடுதலை இராணுவம்  (PLA)  வின் மூத்த  ராணுவ தலைவர்களை  சந்திப்பதற்கும்  இம்ரான் கான் அவர்களின் பயணத்திற்கு ஒரு  நாள் முன்பாக சீனாவிற்கு   சென்றடைந்தார்.   சீன அதிபர் ஷீ ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ  கே கியாங் அவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பில் இம்ரான் கான் அவர்களுடன் ஜெனரல் பாஜ்வா அவர்களும் இணைந்து கொண்டார். கடந்த ஒரு வருட காலத்தில் இம்ரான் கான் அவர்கள் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்வது இது மூன்றாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

“பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு இடையே நிலவி வரும் அனைத்து பருவகால செயல் உத்தி ஒத்துழைப்பு கூட்டாளித் துவத்தை மேலும் வலுப்படுத்துவது “  என்பது கூட்டு அறிக்கையின் மூலம் மறுபடியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்த்தது  போல்,  அந்த அறிக்கையில் ஜம்மு காஷ்மீர் நிலவரம் பற்றியும் ஒரு பத்தி எழுதப்பட்டுள்ளது. காஷ்மீர் பிரச்சனையை இந்தியாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளும்படி பாகிஸ்தானிற்கு,  பீஜிங் மிக தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது.

மிக முக்கியமாக, ,சீன அதிபரின் இந்தியப் பயணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பாகவும், நிதி நடவடிக்கை  பணிக்  குழு  FATF, பாகிஸ்தானை சாம்பல் பட்டியலிலிருந்து கருப்பு பட்டியலுக்கு சேர்ப்பது , என்ற முடிவு எடுப்பதற்கான சந்திப்பிற்குச் சில நாட்களுக்கு முன்பாகவும், இம்ரான் கான் அவர்களின் சீனப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  சீனாவின் மூத்த தலைவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பின் போது, இம்ரான்கான் அவர்களும் ஜெனரல் பாஜ்வா அவர்களும், காஷ்மீர் பிரச்சனையைப் பற்றிக் கண்டிப்பாகப் பேசியிருப்பார்கள் என்பது மிகவும் இயற்கையானதே. இருப்பினும் மாமல்லபுரத்தில் பிரதமர்  மோதி அவர்களுடன் ஏற்பட்ட முறைசாரா  உச்சிமாநாட்டு சந்திப்பின்போது, அதிபர்  ஷீ ஜின்பிங்  அவர்கள் காஷ்மீர் பிரச்சினையை  எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா  பாதுகாப்பு சபையில்  இம்ரான் கான் அவர்கள் ஆற்றிய உரை,  மற்றும் சமீபத்திய சீனப் பயணம், இவை இரண்டிற்கும் உள்நாட்டில் கலப்பு எதிர்வினை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானிலுள்ள பெரும்பாலான வர்ணனையாளர்கள் எதார்த்தமான மதிப்பீட்டை வெளிப்படுத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 ஆவது  மற்றும் 35A சட்டப் பிரிவின் கீழ் இந்திய அரசியலமைப்பு எடுத்துள்ள முடிவுக்கு எதிராக, பாகிஸ்தானில் அரசியலைப் பராமரிக்க,  இம்ரான்கான் அவர்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியைத் தழுவும், என்று பாகிஸ்தான் அரசியல் விமரிசகர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

இதற்கு முன்பாகவும், பாகிஸ்தானில் ஜூல்ஃபிகர் அலீ பூட்டோ, பேநசீர் பூட்டோ மற்றும் நவாஸ் ஷெரீப்,  ஆகியோர் ஆற்றிய சொற்பொழிவுகளால் கஷ்மீர் குறித்த இந்தியாவின் அணுகுமுறையில்,  எந்த வித தாக்கமும் ஏற்படவில்லை.  வளர்ந்து வரும் உலகளாவிய செயலுத்தி களத்தைப் பற்றிய நிதானமான மதிப்பீடும்,  சக்தி திறனைப் பொறுத்தவரையில், சீனா உட்பட அனைத்து உலக வல்லரசுகளுக்கும் சர்வதேச மட்டத்தில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்த ஒரு அசைக்க முடியாத ஒப்புதலும்,   தங்களுக்கு நலன் பயக்கும் விதமாக செயல்படக்கூடிய இயல்பான கூட்டாளியாக இந்தியாவைப் பார்ப்பதும் எதிர்கால புவிசார் அரசியலில் முக்கியப்பங்கு வகிக்கும் என்ற கருத்தும் நிலவி வருவது மறுக்க முடியாத உண்மை.  ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா ஏற்படுத்திய முடிவு காரணமாக, பாகிஸ்தான் அரசியல் தடுமாற்றம் அடைந்துள்ளது.  இம்ரான் கான் மற்றும் அவரது சகாக்களைத் தட்டி எழுப்பியுள்ளது.  ஆளும் அரசாங்கத்தைக் கீழே தள்ள எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.  “இம்ரான் கான் கைப்பாவையாக உள்ளார்.   மற்ற சக்திகளால் அவர் இழுக்கப் படுகின்றார்” என்று பிலாவல் பூட்டோ சாடியுள்ளார்.

இம்ரான் கான் அவர்களின் அரசாங்கமானது, அதிகரித்து வரும் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும்  குறைந்து வரும் வருவாய் வசூல் மற்றும் முதலீடு போன்றவற்றினால் முடங்கியுள்ளது. பாகிஸ்தானின் பொருளாதாரத்தின் மீது இருக்கும் அந்நாட்டு மக்களின் நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது, என்று  சர்வதேச சந்தை ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம், சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவின் மதிப்பெண் 62.9 என்பதை  ஒப்பிடுகையில் பாகிஸ்தானின் மதிப்பெண்  33.8 ஆக உள்ளது.  அடுத்த 6 மாதத்திற்கான குறைந்த கால முன்னறிவிப்பானது, மிகவும் இருண்டு காணப்படுகிறது,  பாகிஸ்தான் தவறான திசையை நோக்கிச் செல்கிறது என்று 79 சதவிகித பாகிஸ்தான் மக்கள் கூறுகின்றனர்.

 

இம்ரான் கான் அவர்களின் புகழ் குறைந்து கொண்டு வருகின்ற இந்த வேளையில், பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள்  தங்களது  அரசியல் எதிர்காலத்தை மறுமலர்ச்சியடையச்  செய்யத் துவங்கியுள்ளனர்.