அணி சேரா இயக்கத்தின் முன் உள்ள சவால்கள்

தில்லி சமுக அறிவியல் ஆய்வு நிறுவன இயக்குனர் டாக்டர் ஆஷ் நாராயண் ராய் அவர்கள் ஆங்கிலத்தின் எழுதியதன் தமிழாக்கம்

தமிழில் ஆர் ராஜ்குமார் பாலா

ஒருகாலத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்த்த அணிசேரா இயக்கம் தற்போது அதன் ஈர்ப்பை இழந்துவிட்ட நிலையில் அடுத்தவாரம் அணிசேரா நாடுகளின் 18 ஆவது உச்சி மாநாட்டை அஸெர்பைஜான் நடத்த உள்ளது. அணிசேராமை என்பது முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை. உலக அளவில் அதிகாரப்பரவல் வேறிடத்துக்கு மாறியதால் அலட்சியம் செய்யப்பட்ட இந்தக் கொள்கை சர்வதேச உறவுகளில் புதிய குழுவை ஏற்படுத்தியுள்ளது. அட்லாண்டிக் சகாப்தத்தின் முடிவையும் ஆசிய நூற்றாண்டின் துவக்கத்தையும் குறிக்கும் வகையில் புவி அரசியலில் புதிய மாற்றத்தை உலகம் கண்டுவருகிறது. உண்மையில் ‘ஜி சீரோ’ எனப்படும் சர்வதேச உறவுகளில் யாருக்குமே அதிகாரம் இல்லாத வெற்றிட நிலைக்கு  21 ஆம் நூற்றாண்டின் உலகம் மாறியிருப்பதாகவும்  மண்டல மற்றும் உலக அமைப்புகள் அதிக அளவில் உருவாகியிருப்பதாகவும்  ஒரு நிபுணர் கூறுகிறார். ஒரு சர்வதேச விஷயத்தை எடுத்துரைக்க எந்தவொரு தனி நாடோ அல்லது நாடுகள் குழுவோ அரசியல் பொருளாதார மற்றும் செயல் உத்தி சார்ந்த ஆற்றலை பெறவில்லை என்பது தான் இதன் உள்ளர்த்தம். அணி சேராமை இரண்டாவது பகுதி என்ற ஆவணத்தை சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் உயர் செயல் உத்தி நிபுணர் வெளியிட்டார். அணி சேராமைக்கான அடிப்படைக் காரணிகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தியா தனது செயல் உத்தியில் தன்னாட்சி மற்றும் மதிப்புகள் சார்ந்த நடைமுறையைப் பாதுகாத்து உலக அளவில் தலைமைப்பொறுப்புக்கு உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பனிப்போருக்கு பிந்தைய காலத்தின் பகுதி ஒன்று முடிந்து, இப்போது பனிப்போர் காலம் இரண்டாம் பகுதி தொடங்கியுள்ளது. நலன்கள் சார்ந்து  போட்டிபோடாமல் மதிப்புகளைக் கொண்டு போட்டிபோடும் வகையில் உள்ள இந்த பனிப்போர்-இரண்டாவது பகுதி, அமைப்பில் முற்றிலுமாக வேறுபட்டுள்ளது.  எனவே அணி சேராமை என்பது மறுபடி புத்துருவாக்கம் பெறவேண்டும்.  விஷயம் சார்ந்து அணி சேருவது, அதிகாரமுடைய பெரிய நாடுகளுடன் உறவுகளை பராமரிப்பது உலக அளவில் இந்தியாவின் முக்கியத்துவத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கிய நாட்டின் வெளியுறவுக் கொள்கை பற்றி இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார்.

மொத்தத்தில் அணிசேராமைக்கான அங்கீகாரமாகவே இது உள்ளது. இந்தியா எவருடனும் அணிசேரவேண்டிய அவசியம் இல்லை. அணி சேரா இயக்கத்தின் உச்சி மாநாடுகளின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இதுவரை இருந்ததில்லை. அணி சேரா நாடுகள் அங்கம் வகித்த உலகின் பகுதியாக எப்போதும் இருந்திராத ஒரு வட்டாரத்தில் இந்த தடவை இந்த உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

இந்தியா முக்கியமாக அங்கம் வகிக்கும் ஜி20 நாடுகள் அமைப்பு, பிரிக்ஸ் அமைப்பு ஆகிய உலகளாவிய அமைப்புகள் உலக அளவில் அலுவல்பட்டியலை உருவாக்கத் துவங்கியதன் விளைவாக இந்த மாற்றம். உலக நாடுகள் அங்கம் வகிக்கும் குழுக்களில் அணிசேரா இயக்கம், NAM என்பது மிகப்பரிய குழுவாகும். இந்த அமைப்பின்  நிறுவன உறுப்பினரான இந்தியா, இந்த அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் நன்மையைக் காண்கிறது. அனைத்து உலக மக்களுக்கும் சுதந்திரம் பெற்றுத்தருவதாக சுதந்திரப்போராட்டம் இருக்கவேண்டும் என்ற காந்தியடிகளின் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதாக அணி சேரா இயக்கத்தை போருக்குப் பிந்தைய உலகத்தில் இந்தியா கண்டது.

அணிசேரா இயக்கம் என்பது நீண்டகாலமாக ஒரு வெளியுறவுக் கொள்கைக்கான கோட்பாடாகவும் நோக்குநிலையாகவும் இருந்தது.  அதிகாரம் பெற்ற பெரிய நாடுகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் தனது இறையாண்மை நிலையை பாதுகாக்க அணி சேரா இயக்கத்தில் புதிதாக சுதந்திரம் அடைந்த பல நாடுகள் இணைந்தன. சரிசம நிலையுடைய உலக முறைமையை உருவாக்குவது உட்பட பல விஷயங்களை அணிசேரா இயக்கம் சாத்தியப்படுத்தியது. இதர விஷயங்கள் வேறு வடிவங்களைப்பெற்றன.  பல பொதுவான சவால்கள் இன்றும் நீடிக்கின்றன. அணி சேரா இயக்கம் தனது செயல்பாட்டை புதிதாக உருமாற்ற வேண்டிய அவசியம் இல்லை. எனினும் ஏற்புடைய நிலைக்கு மாற, தனது அலுவல்பட்டியலை மறுசீரமைப்பு செய்வதோடு தனது செயல்பாட்டில் ஊக்கத்தை ஊட்டவேண்டும். இந்தியா, தனது அணி சேரா இயக்கக் குறிக்கோள்களில் உறுதிபூண்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் ஒட்டுமொத்த நலன்¢களை கொண்டுசெலுத்துவது, குறிப்பாக உலக பொருளாதார முறை மற்றும் அணுஆயுதப்பரவல் தடுப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்களை செய்வது ஆகிய விஷயங்களில் ஓர் பிரதிநிதித்துவமாக அணிசேரா இயக்கம் தொடர்ந்து திகழ்வதாக இந்தியா கருதுகிறது. ஒரு காலத்தில் மிக வலுவானதாக இருந்த ஐ நா அமைப்பு இப்போது அந்த அளவுக்கு வலுவாக இல்லை. ஆனால் ஐ நா அமைப்பில் இருந்து விலகுவது பற்றி ஒரு நாடும் எண்ணத் துணியாது. ஐ நா பாதுகாப்பு அவையில்  நிரந்தர உறுப்பினர் தகுதியைப் பெறுவதற்கான ஆதரவைத் திரட்ட, அணி சேரா இயக்கம் என்ற சக்திமிகு அமைப்பை இந்தியா பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வேறொரு காரணமும் உள்ளது.  இன்று தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு என்பது முக்கியத்துவம் பெற்றுவரும் நிலை. வளரும் நாடுகளுக்கு உதவி வழங்கும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. தேசிய இறையாண்மைக்கு மரியாதை, உள்நாட்டு விஷயங்களில் தலையிடாத நிலைமை, சமத்துவம், கலாச்சார பன்முகத்தன்மை, அடையாள, உள்ளூர் விஷயங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பாண்டுங் மாநாட்டால் ஊக்கம் பெற்றது தெற்கு-தெற்கு ஒத்துழைப்பாகும். 2030 ஆம் ஆண்டுக்குள் நீடித்து நிலைத்த வளர்ச்சியை எட்டுவது குறித்த அலுவல்பட்டியல்,  பருவநிலை மாறுபாடு குறித்த பாரீஸ் ஒப்பந்தம், உலக பொருளாதார மற்றும் நிதி நடைமுறைச் சீர்திருத்தங்கள், ஆகியவற்றை செயல்படுத்தவேண்டிய அவசியம் குறித்து நடைபெறவுள்ள Baku உச்சிமாநாட்டில் வலியுறுத்தப்படக்கூடும். தீவிரவாதம் குறித்தும் இந்த உச்சிமாநாட்டில் முக்கியமாக ஆராயப்படும். இந்த அணி சேரா இயக்கத்திற்கு தலைமை ஏற்பது குறித்து அஸெர்பைஜான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கையும் கூட ஒரு அறிவுறுத்தலாகத் தான் இருக்கிறது. ரஷ்யா மற்றும் நேட்டோ இரண்டு எதிரெதிர் கட்சிகளுடன் அஸெர்பைஜான் கூட்டாளித்துவத்தை உருவாக்கியுள்ளது. அணி சேரா இயக்கத்துக்கு தலைமை ஏற்கும் அனைத்து தகுதியும் அஸெர்பைஜானுக்கு உள்ளது. வட்டார மற்றும் உலகளாவிய சவால்களை எவ்வாறு சமாளிப்பது, அமைதி, நிலைத்தன்மை மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது, அணி சேரா இயக்க நாடுகளிடையே பெரிய அளவில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஆகியன குறித்து Baku உச்சிமாநாடு விவாதிக்கும்.